Sunday, January 8, 2012

தலைமை தப்பியது! தலையிடி தீரவில்லை!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் கட்சித் தலைமைப் பதவியை தேர்தலின் மூலம் அவர் தக்கவைத்துக்கொண்டாலும் கூட, கட்சிக்குள் உருவாகியிருக்கும் தலையிடி தீராத நிலைதான் காணப்படுகின்றது. கட்சியின் தலைமைப் பதவிக்கு உருவாகிய பிரச்சினைக்கு டிசெம்பர் 19 இல் நடைபெற்ற தேர்தலின் மூலம் தீர்வு காணப்பட்டுவிட்டதாக ரணில் விக்கிரமசிங்க கருதினாலும்கூட, கட்சியில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த அவரால் இன்றுவரையில் முடியவில்லை. கட்சி இரண்டாகப் பிளவுபட்ட நிலையில் செயற்படுவது தெளிவாகத் தெரியத் தொடங்கியிருக்கின்றது.

அதிருப்தியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை ரணில் தீவிரப்படுத்தியிருக்கும் அதேவேளையில், தலைமைக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்த அதிருப்தியாளர்கள் திட்டமிட்டு வருகின்றார்கள். ஆக, கட்சிக்குள் இடம்பெறும் உட்கட்சி மோதல்கள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கலாம்! பிரச்சினை வீதிக்கு வந்துவிட்ட நிலைதான் காணப்படுகின்றது. அதேவேளையில் தொடரும் இந்த உட்கட்சி மோதல் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எதனையும் தீவிரப்படுத்த முடியாமல் ஐ.தே.க.வைக் கட்டிப்போட்டுவைத்திருக்கும் என்பதும் உண்மை.

கட்சித் தலைமைப் பதவியைத் தக்கவைத்துக்கொண்ட பின்னர் அதிருப்தியாளர்கள் விடயத்தில் மென்மைப்போக்கைக் கடைப்பிடித்து அவர்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்கள் விடயத்தில் கடுமையான அணுகுமுறையை விக்கிரமசிங்க கையாள்வது கட்சிக்குள் பதற்றநிலை ஒன்றைத்தான்தொடர்ந்தும் வைத்திருப்பதாக இருக்கின்றது.  இவ்விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் இராஜதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டை அதிகார மாற்றத்துக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தியிருக்கும் விக்கிரமசிங்க, அதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்துவதை தவிர்த்துவிட்டு அதிருப்தியாளர்கள் மீது போரைத் தொடுத்துள்ளார். அவர்களைத் துரோகிகள் என வர்ணித்துள்ள அவர், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்திருக்கின்றார். புத்தாண்டில் அவர் வெளியிட்ட முதலாவது அறிவிப்பாக இதுவே வெளியாகியிருந்தது.

இந்த அறிவிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து அதிருப்தியாளர் குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான தயாசிறி ஜெயசேகராவை நீக்கியிருக்கின்றார். இதனைவிட கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதி எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கின்றார். கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக்குழுவின் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. புதுவருடத்தில் இடம்பெற்ற ஆலோசனைக்குழுவின் முதலாவது கூட்டத்தில் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

கட்சியின் தலைமைப் பதவிக்காக கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமானது எனவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தமையால்தான் தயாசிறி ஜெயசேகரா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக மன்னிப்புக்கோருமாறு அவர் கட்சித் தலைமையால் கேட்டுக்கொள்ளப்பட்ட போதிலும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர் மறுத்துவிட்ட நிலையிலேயே ஆலோசனைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்ததாக கட்சித் தலைமை அறிவித்திருக்கின்றது. இருந்த போதிலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தயாசிறி அறிவித்திருக்கின்றார்.

ஐ.தே.க.வில் உருவாகிய தலைமைத்துவப் பிரச்சினை, தலைமைப் பதவிக்காக நடைபெற்ற தேர்தலுடன் முடிவடைந்துவிடவில்லை என்பதைத்தான் கடந்தவாரத்தில் வெளியாகிய  செய்திகள் புலப்படுத்தியிருக்கின்றது. தலைமைப் பதவியைத் தக்கவைத்துக்கொண்ட பின்னர் தனக்கு விரோதமானவர்களை அந்நியப்படுத்துவதற்கான செயற்பாடுகளையே ரணில் விக்கிரமசிங்க தீவிரப்படுத்தியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அவர்களை வளரவிடுவது எதிர்காலத்திலும் தனக்கு ஆபத்தானதாக அமையலாம் என ரணில் கணக்குப் போட்டுவைத்திருக்கின்றார் போலுள்ளது.  அதேவேளையில் இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகின்றது.

இதேவேளையில், கட்சித் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த கரு ஜயசூரிய இப்போது பெருமளவுக்கு அமைதியாக இருந்தாலும், கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவும், தயாசிறி ஜெயசேகராவும் ரணில் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள். அதனால் இந்த இருவரையும் இலக்குவைத்ததாகவே ரணில் விக்கிரமசிங்கவின் தாக்குதல்களும் அமைந்திருக்கின்றன.

சஜித் குழுவினர் கட்சிக்குள் கணிசமான ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ளவர்கள் என்பதுடன், அடிமட்ட மக்கள் மத்தியிலும் கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ள ஒருவராகவே சஜித் உள்ளார் என்பதும் கவனிக்கப்படவேண்டும். கட்சியின் அடுத்த தலைமைப் பதவிக்கு தன்னைத் தயார்படுத்துவதில் சஜித் தீவிரமாக உள்ளது தெளிவாகத் தெரிகின்றது.

இந்த நிலையில் ரணில் நடத்திய புத்தாண்டு நிகழ்வில் சஜித் குழுவினர் கலந்துகொள்ளாதததும், சஜித்தின் பத்தாண்டு நிகழ்வில் ரணில் குழுவினர் கலந்துகொள்ளாமையும் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுச்செயற்படுவதை தெளிவாகப் புலப்படுத்தியிருக்கின்றது.

கட்சியைப் பிளவுபடுத்த முயல்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கும் அதேவேளையில், விக்கிரமசிங்க மீதுதான் முதலில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என சஜித் பதிலடிகொடுத்திருக்கின்றார். தொடர்ச்சியாக 20 தேர்தல்களில் கட்சிக்கக் கிடைத்த தோல்விகளுக்கு காரணமாக இருந்தவர் என்ற முறையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் கூறியிருக்கின்றார்.

ஐ.தே.க.வில் நடைபெறும் நிகழ்வுகள் தலைமைத்துவப் பிரச்சினைக்கு இப்போதைக்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதைப் புலப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. கட்சியின் அதிருப்தியாளர் குழுவைப் பொறுத்தவரையில் சிங்கள பௌத்த கடும்போக்கைக் கையாள்வதன் மூலமாகத்தான் மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது.  மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் இருப்பதால் அதேபாதையில் சென்றால்தான்   அரசுக்குச் சவால்விடக்கூடிய ஒரு எதிர்க்கட்சியாக முடியும் என இவர்கள் கருதுவதாகத் தெரிகின்றது.

இரு தரப்பினருக்கும் உள்ள பொதுவான அம்சம் ஒன்று மட்டும்தான் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இரு தரப்பினரும் கிரமமாகச் சந்தித்து வருகின்றார்கள்.  சரத்தின் ஆதரவு தமக்குள்ளதாகக் காட்டிக்கொள்ள இருவரும் விரும்புகின்றார்கள். சஜித் குழுவினரைப் பொறுத்தவரையில் பொன்சேகா விடுதலையானால் அவரை முன்னிறுத்தி ரணிலின் முக்கியத்துவத்தைக் குறைக்க முடியும் என்ற ஒரு கணிப்பு உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாறுதான் நடந்தது.

இந்தப் பின்னணியில்தான் ஐ.தே.க.வின் உட்கட்சி மோதலால்தான் சரத்தின் விடுதலை தடைப்படுகின்றது என்ற கருத்தை ஜனநாயக தேசிய முன்னணியின் பிரமுகர் ஒருவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ரணில் தரப்பைப் பொறுத்தவரையில் பொன்சேகாவின் விடுதலைக்காக அவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தாலும், அவர் வெளியே வந்தால் ரணிலின் தலைமைக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளனமையும் புரிந்துகொள்ள முடிகின்றது. ஏனெனில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்று அமைக்கப்படுமாயின் அதில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவராக பொன்சேகாதான் இருப்பார்.

எது எப்படியிருந்தாhலும், ஐ.தே.க.வின் உட்கட்சிப் போராட்டம் முடிவுக்கு வராத வரையில் பலமான ஒரு எதிரணி உருவாகப்போவதில்லை என்பதுடன், அரசுக்கும் தான் நினைத்ததைச் செய்துகொண்டு போவதற்கு அது வாய்ப்பாகிவிடும் என்பதே உண்மையாகும்!

No comments:

Post a Comment