Sunday, December 25, 2016

புதிய அரசியலமைப்புத் திட்டத்தில் 'அதிர்ச்சிகள்' காத்திருக்கின்றனவா?

- பாரதி -

புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் ஜனவரியில் அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவால் முன்வைக்கப்படவுள்ள நிலைமையில், பிரதான அரசியல் அணிகள் அதனைத் தமக்குச் சாதகமாகக் கொண்டு செல்வதற்கான நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. வழிநடத்தல் குழுவில் ஏற்கனவே பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டுவிட்டது. ஊடகங்கள் மூலமாகவும் அவை கசிந்துள்ளன. அதனால், ஜனவரி 9 ஆம் திகதி "பொதி" அவிழ்க்கப்படும் போது அதற்குள் அதிர்ச்சிகள் எதுவும் காத்திருக்கப்போவதில்லை. இப்போது இடம்பெறும் பேச்சுக்களும் அதில் மாற்றம் எதனையும் ஏற்படுத்தப்போவதுமில்லை.

வழிநடத்தல் குழுவில் இடைக்கால அறிக்கை டிசெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வெளியிடப்படும் என்றுதான் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதியில் நாமும் அதனைக் குறிப்பிட்டிருந்தோம். பாராளுமன்றத்தின் இறுதித் தினமும் அன்றுதான். பட்ஜெட் மீதான இறுதி வாக்கெடுப்பும் அன்றுதான் இடம்பெற்றது. அன்று காலை ஒரு மணி நேரம் இடம்பெற்ற அரசியலமைப்புப் பேரவையின் கூட்டத்தில் இதனை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதன் மொழிபெயர்ப்பு வேலைகள் கூட பூர்த்தியாகியிருந்ததாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. 

இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி 9 இல் இதனை வெளியிடத் தீர்மானிக்கப்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இடைக்கால அறிக்கையை வெளியிட்டு ஒரு மாதத்தில் பின்னர் பாராளுமன்றத்தில் அதன் மீதான விவாதத்தை நடத்தும் போது எதிர்ப்புக்கள் அதிகரிக்கலாம் என்பது ஒன்று. டிசெம்பர் 10 இல் இதனை வெளியிட்டிருந்தால், அன்று மாலை நடைபெற்ற பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் பிளவுபட்டிருக்கும். பட்ஜெட்டுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை கூட்டமைப்பை பிளவுபடுத்தக்கூடிய தன்மையைக் கொண்டிருந்தது.

பிரதான இரு கட்சிகளின்
உறுதியான நிலைப்பாடு


அரசியலமைப்புப் பேரவையில் மட்டுமன்றி அதன் வழிநடத்தல் குழுவிலும் கூட்டு எதிரணிதான் (மகிந்த அணி) பலம்வாய்ந்ததாகவும், அழுத்தம் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. குழப்பத்தை ஏற்படுத்துவதும் அதுதான். ஐ.ம.சு.மு.வின் சின்னத்தில் போட்டியிட்ட 52 எம்.பி.க்கள் இந்த அணியில் இருப்பதால் அவர்களுடைய பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது.  அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமது நிலைப்பாட்டை இந்த அணியின் இரு பிரதான தலைவர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்த்தன ஆகியோர் தெளிவுபடுத்தினார்கள். ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கு முதன்மை இடம் என்ற இரண்டையும் தம்மால் விட்டுக்கெடுக்க முடியாது என்பதையும், வடக்கு கிழக்கு இணைப்பை தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்பதையும் அவர் உறுதியாகக்கூறினார்கள்.

இவற்றைவிட பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுவதை தாம் ஏற்கப்போவதில்லை எனவும், மாகாணங்களில் பாதுகாப்புடன் தொடர்பான பிரச்சினைகள் வரும்போது, மத்திய அரசு அதில் தலையிட வேண்டும் என்பதுதான் தமது நிலைப்பாடு எனவும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். தமது இந்த நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கெடுப்புக்கும் இடமில்லை எனவும் தெரிவித்த அவர்கள், தமது இந்த நிலைப்பாடு வழிநடத்தல் குழுவிலும் எடுத்துக்கூறப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்கள். மகிந்த அணி இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், இதற்கு மாறாக - த.தே.கூட்டமைபை திருப்திப்படுத்தக்கூடிய ஒரு நிலைப்பாட்டை மைத்திரி தரப்பு எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.  13 க்குள் தீர்வு என்பதுதான் மைத்திரி தரப்பு நிலைப்பாடாகவுள்ளது.

ஐ.தே.க. எடுத்துள்ள நிலைப்பாடும் இதேபோன்றதாகவே உள்ளது. ஐ.தே.க.வின் உயர் மட்டக் குழுவில் இது தொடர்பாக ஆராயப்பட்டபோது, ஒற்றை ஆட்சி, பௌத்தத்துக்கு முதன்மை இடம் என்பனவற்றுடன், இணைப்பை ஏற்றுக்கொள்வதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. கட்சியின் இந்த நிலைப்பாட்டை கட்சித் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில் பிரதான இரு அணிகளும் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு முரணாக ஒரு தீர்வுத் திட்டத்தை வழிநடத்தல் குழுவால் முன்வைக்க முடியாது. ஆக, கூட்டமைப்பு எதிர்பார்க்கும் ஒரு தீர்வை வழிநடத்தல் குழு முன்வைக்கப்போவதில்லை. ஆனால், வழிநடத்தல் குழு முன்வைக்கும் ஒரு தீர்வை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளத் தயாராகின்றதா என்பதுதான் ஆராயப்பட வேண்டிய விடயம்.

கூட்டமைப்பின் இறுதிக்கட்ட
முயற்சிகள் பலனைத் தருமா?


அரசியலமைப்பு மாற்றம் மற்றைய அரசியல் கட்சிகளைவிடவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் முக்கியமானது. இனநெருக்கடிக்கான நின்று நிலைக்கக்கூடியதும், உறுதியானதுமான தீர்வு ஒன்றை கூட்டமைப்பு எதிர்பார்த்தது. கூட்டமைப்பின் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு வகையில் கூட்டமைப்பின் எதிர்காலமும் இதில் தங்கியுள்ளது. தலைவர் இரா.சம்பந்தனும் இதனைப் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். இந்த வருட இறுதிக்குள் தீர்வு என நம்பிக்கையுடன் உறுதியாகக் கூறிவந்த சம்பந்தனின் "சுருதி" பின்னர் சரியத் தொடங்கியது. இதன் பின்னணியிலுள்ள அரசியல் புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. சிங்களத் தலைமை புதிதாக ஒன்றையும் தரப்போவதில்லை என்பது கூட்டமைப்பின் தலைமைக்கு இப்போது நிச்சயமாகப் புரியத் தொடங்கியிருக்கும்.

"வடக்கு கிழக்கு இணைப்பு (இப்போதைக்கு) சாத்தியமில்லை" என்பதை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார். இப்போதைக்கு சாத்தியமில்லாததது பின்னர் எப்போதாவது சாத்தியமாகுமா என்பதற்கு கூட்டமைப்பிடம் பதில் இல்லை. ஒற்றையாட்சியா சமஷ்டியா என 'பிரான்ட்'  என்ன என்பதைப் பார்க்கத் தேவையிலலை. உள்ளேயுள்ளது என்ன என்பதுதான் முக்கியம் என்ற ஒரு கருத்தும் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. பௌத்தத்துக்கு முதன்மை இடம் என்பதும் மாற்ற முடியாதது. அதாவது இலங்கையை ஒரு மதச்சார்பற்ற நாடாக்க முடியாது. இந்த நிலையில் ஐ.தே.க.வும், மகிந்த அணியும் எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கு அண்மித்ததாகத்தான் கூட்டமைப்பின் நிலைப்பாடும் உள்ளது. அதாவது, "தருவதைப் பெற்றுக்கொள்வோம். கிடைக்காதவைகளையிட்டு பின்னர் பார்ப்போம்" என்ற ஒரு நிலைப்பாடும் உள்ளது.

இந்திய அரசு தொடர்ந்தும்
மௌனமாக இருப்பது ஏன்?


ஆனால், ஊருக்குச் செல்லும் போது வாக்களித்த மக்களுக்கு நாம் என்ன சொல்வது என்ற கேள்வியை கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலர் எழுப்பியிருக்கின்றார்கள். அவர்களைத் திருப்திப்படுத்தத்தான் ஜனாதிபதி மைத்திரிபால மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ என இவ்விவகாரத்தின் முக்கிய புள்ளிகளை கூட்டமைப்புத் தலைமை சந்தித்திருக்கின்றது. மகிந்தவுடன் பேசிப் பாருங்கள் எனக் கூறி, மைத்திரி தமது பொறுப்பைத் தட்டிக்களித்துவிட்டார். மகிந்த ராஜபக்‌ஷவும் தமது நிலைப்பாடு இதுதான் என்பதைத் தெளிவாகக்கூறிவிட்டார். ரணில் விக்கிரமசிங்கவோ ஒற்றையாட்சிக்குள் எவ்வாறு தீர்வைக் காணலாம் என்பதையிட்டு கூட்டமைப்பினருக்குப் பாடம் போதித்திருக்கின்றார். அனைவரும் அதனைக் கேட்டு தலையசைத்துவிட்டு வந்துவிட்டார்கள்.

இந்த மூன்று தரப்புக்களும் தமது நிலையை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அரசியல் தீர்வாக வரப்போவது என்ன என்பதில் கேள்வி இருக்க முடியாது. இதனால், அடுத்த நகர்வு என்ன என்பது கூட்டமைப்புக்கு கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. ஜனவரி 8 இல் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு முக்கியமான கூட்டம் ஒன்று ஏற்பாடாகியிருக்கின்றது. இதில் விடயங்கள் காராசாரமாக விவாதிக்கப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட்டமைப்புக்குப் பலத்தைக் கொடுக்கும் இந்தியாவும் இப்போது மௌனமாக இருக்கின்றது. சம்பூர் விவகாரத்தில் சம்பந்தன் தெரிவித்ததாக சொல்லப்படும் கருத்து ஒன்று கசிந்ததையடுத்து அவர் மீது டில்லி சற்று சீற்றமடைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரத் தகவல் ஒன்று உள்ளது. இந்த விவகாரம் மோடி வரை சென்றுள்ளதாம். அரசியலமைப்பு நகர்வுகள் குறித்து கூட்டமைப்பின் தலைமையுடன் அடிக்கடி தொடர்புகொள்ளும் டில்லி, இப்போது தமது தொடர்புகளை மட்டுப்படுத்திக்கொண்டிருப்பது இதனால்தானாம். அதனால், இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்ற அச்சமும் கொழும்புக்கு இன்று இல்லை. எதனையாவது கொடுத்து மார்ச்சில் வரப்போகும் ஜெனீவா கூட்டத் தொடரைச் சமாளித்தால் போதும் என்பதுதான் கொழும்பில் நிலைப்பாடு!

(ஞாயிறு தினக்குரல் 2016-12-25)

No comments:

Post a Comment