மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறித்தெடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த பொருளாதார அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலம் அரசியலில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசியலமைப்புப் பேரவை ஆராய்ந்துகொண்டிருக்கும் நிலையில், இவ்வாறான சட்டமூலம் ஒன்றை அவசரமாக் கொண்டுவரவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டிருக்கின்றது என்ற கேள்வியும் எழுகின்றது. மாகாண சபைகள் ஒவ்வொன்றாக இதனை நிராகரித்துவருவது அரசாங்கத்தின் இந்தத் திட்டத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறித்தெடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்படும் என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.
இந்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னதாக, மாகாணசபைகளின் ஒப்புதலை பெற வேண்டும் என்பதாலேயே, இது மாகாணசபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மூன்று மாகாண சபைகள் இந்தச் சட்டமூலத்தை நிராகரித்திருக்கின்றன. ஊவா மாகாண சபை, வடமத்திய மாகாண சபை, வடமாகாண சபை என்பனவே இதனை நிராகரித்திருக்கின்றன. இதற்கு மேலாக மாகாண முதலமைச்சர்களும் இதனைத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்கள். அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே முதலமைச்சர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். இந்த நிலையில் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக பிரதமர் உறுதியளித்திருக்கின்றார். மாகாண சபைகள் எதிர்க்கும் நிலையில் இதைனைவிட வேறு தெரிவுகள் எதுவும் பிரதமரிடம் இருக்கப்போவதில்லை.
மாகாண சபைகள் என்பது அரசாங்கத்தினால் விரும்பிக்கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல. இலங்கை - இந்திய உடன்படிக்கையின் மூலம் திணிக்கப்பட்ட ஒன்றுதான் அது. அதற்கு அதிகாரங்களை வழங்கக்கூடாது என்பதில் அன்றுமுதல் மத்திய அரசும், சிங்களத் தேசியவாதிகளும் கவனமாகவே இருந்தார்கள். ஆனால், இந்த விடயத்தில் ஒரு தலைகீழ் மாற்றத்தை இப்போது அவதானிக்க முடிகின்றது. 1987 இல் ஐ.தே.க. அரசாங்கத்தினால் மாகாண சபைகள் கொண்டுவரப்பட்ட போது, பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி மாகாண சபைகளுக்கான தேர்தலையும் பகிஷ்கரித்தது. ஆனால், இன்று வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏழு மாகாண சபைளும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதானமாகக் கொண்ட ஐ.ம.சு.மு.வின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அதுமட்டுமன்றி, மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு எதிராக அவை ஓங்கிக் குரல் கொடுப்பதையும் காணமுடிகின்றது.
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக்கொண்டுவருவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்களை வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாண மக்கள் அதிகளவுக்கு அனுபவிக்கின்றார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். அதேவேளையில் அந்த அதிகாரங்களை விட்டுக்கொடுக்க அந்த மாகாண சபைகள் கூட தயாராகவில்லை. மூன்று மாகாண சபைகள் சட்டமூலத்தை நிராகரித்திருக்கும் நிலையில், ஏனைய மாகாண சபைகளில் அடுத்துவரும் வாரங்களில் இது குறித்த விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவிருக்கின்றது. முதலமைச்சர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏனைய மாகாண சபைகளும் இதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இந்த மாகாண சபைகள் ஐ.ம.சு.மு.வின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்ற ஒரு அரசியல் காரணமும் இதற்கு இருக்கின்றது. எது எப்படியிருந்தாலும் அதிகாரப் பகிர்வை அர்தபூர்வமாக்குவதற்கு இவ்வாறான சட்டமூலங்கள் தடையாகவுள்ளன என்பதை மாகாண சபைகள் ஏற்றுக்கொண்டிருப்பது ஆரோக்கியமான ஒரு முன்னேற்றம்தான்.
"மாகாணசபையின் அதிகாரங்களை பறிக்கும் வகையிலும், அதிகாரப் பகிர்வை அர்த்தமற்றதாக்கும் வகையிலும் இந்தச் சட்டமூலம் அமைந்திருக்கின்றது" என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாணசபை அமர்வில் இது குறித்த விவாதம் இடம்பெற்ற போது குறிப்பிட்டார். மத்திய அரசாங்கம் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பிடுங்கும் செயலை மேற்கொள்வதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்தெடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டும் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார். மாகாண சபைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் அவற்றுக்கு அரசியல் யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
அரசாங்கம் மாகாண சபைகளை செயற்றிறன் மிக்கதாய் மாற்றும் சட்ட மூலங்களை கொண்டுவர வேண்டும் என்றும் மாகாணங்களில் மத்திய அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மாகாண சபைகளின் பங்களிப்புடன் நடைபெற வேண்டும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் அதில் மாகாண சபைகள் தொடர்பான விடயங்களுக்கு மாகாணங்களின் ஆலோசனைகளை பெற்று அவற்றை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது இணக்கம் தெரிவித்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார், மாகாணங்களுக்கு காணி, நிதி போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், அதிகாரப் பகிர்வைத் துரிதப்படுத்துவதன் மூலமாகவே இதனைச் சாத்தியமாக்க முடியும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சித்திருப்பது அதன் நோக்கங்களில் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் எதிர்பார்க்கப்படும் விடயங்களில் அதிகாரப் பரவலாக்கல் பிரதானமானதாகும். அதற்கான முயற்சிகளை அரசியலமைப்புப் பேரவை ஒரு புறத்தில் முன்னெடுத்துவரும் நிலையில் இது போன்ற சட்டமூலங்களைக் கொண்டுவர முயற்சிப்பது ஒரு கையால் கொடுத்து மறுகையால் எடுத்துக்கொள்வதைப் போன்றதாகவே இருக்க முடியும். மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளை மாகாண சபைகளின் ஊடகச் செய்வதே அதிகாரப் பரவலாக்கலையும் அர்த்தமுள்ளதாக்கும். நிர்வாகத்தை கீழ் மட்டத்துக்குக் கொண்டு செல்லவும் இதுவே வழிவகுக்கும். இவ்விடயத்தில் மாகாண முதலமைச்சர்களின் ஆலோசனையுடன் அரசாங்கம் செயற்படுவது தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்க்க உதவும்.
(ஞாயிறு தினக்குரல்)
No comments:
Post a Comment