Saturday, July 30, 2016

அதிகாரம் யாருக்கு?

வடமாகாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் குடியேற்றங்கள் மேற்கொள்வதாக இருந்தால், வடமாகாண சபையின் அனுமதியுடனேயே அவற்றை மேற்கொள்ள வேண்டுமென்ற தீர்மானம் வடமாகாண சபையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. வடமாகாணத்தில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் இடம்பெறக்கூடிய திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுக்கும் நோக்கத்துடனேயே இந்தத் தீர்மானம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. வடமாகாண சபையும், மத்திய அரசும் மற்றொரு விடயத்தில் மோதல் போக்கில் செல்லத் தொடங்கியிருப்பதை இச்சம்பவம் வெளிப்படுத்துகின்றது.

வடக்கில் மீள்குடியேற்றம் மேற்கொள்வதற்கான செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த செயலணியில் வர்த்தக வாணிப அமைச்சர், ரிசாட் பதியூதீன் மற்றும் அமைச்சர் முஸ்தபா, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாண சபையினதோ முலமைச்சரினதோ கருத்துக்கள் எதுவும் பெறப்படாமல் இவ்வாறான செயலணி ஒன்று அமைக்கப்பட்டிருப்பது நிச்சயமாக வடமாகாண விவகாரத்தில் மேலாதிக்கம் செலுத்தும் மத்திய அரசாங்கத்தின் போக்கைத்தான் வெளிப்படுத்துகின்றது. அதேவேளையில், மீள்குடியேற்றம் என்ற பெயரில் வடக்கின் இன விகிதாசாரத்தைப் பாதிக்கும் வகையிலான குடியேற்றங்களை முன்னெடுப்பதற்கான திட்டங்களும் இதன் பின்னணியில் இருக்கலாம் என்ற சந்தேகம் நியாயாகவே எழுகின்றது.

இந்த செயலணி உருவாக்கப்பட்டமை வடக்கு மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என கருதி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தப் பிரேரணையினை சபையில் சமர்ப்பித்தார். அதன்போது உரையாற்றிய அவர், "வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களை வடமாகாண சபையுடன் கலந்துரையாடி மேற்கொள்ளுமாறு ஆளுநருடன் கலந்துரையாடி சில தீர்வுகளை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதிக்கு கூறியிருந்தேன். சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதாக இருந்தால், அவற்றினையும் எம்முடன் கலந்துரையாடியே உள்ளடக்க வேண்டும். தீர்மானங்களையும் கருத்துப் பரிமாற்றங்களை எடுக்கும் போதும், மக்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்து எமது ஆட்சேபனையினை மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

அதிகார பரவலாக்கம் என்ற வகையில் மாகாண சபை உருவாக்கப்பட்டன. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கூட அதற்கு வழங்கப்படாமல் முடக்கப்பட்ட நிலைதான் தொடர்கின்றது. அதனால்தான் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைக் கோரி மாகாண முதலமைச்சர்கள் குரல் கொடுத்துவருகின்றார்கள். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் காணி, பொலிஸ் அதிகாரங்களுக்காக கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றார்கள். அரசியலமைப்பில் இருக்கக்கூடிய அதிகாரங்களைக்கூட வழங்காமலிருப்பது மத்திய அரசின் மேலாதிக்கப்போக்கை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். இந்த நிலையில் இவ்வாறான செயலணி ஒன்று அமைக்கப்பட்டிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்துவது தவிர்க்கமுடியாததாகவே இருக்கும்.

போர் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்துள்ள போதிலும் மீள்குடியேற்றம் இன்னமும் முழுமையாகவில்லை. வலி வடக்கு உட்பட பல பகுதிகளில் இராணுவம் தொடர்ந்தும் இருப்பது இதற்குக் காரணமாக உள்ளது. இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றவர்கள் கூட ஒரு சிறு பகுதியினர்தான் மீளக்குடியேறியிருக்கின்றார்கள். போரினால் மூவின மக்களும் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். இதில், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவதை இலக்காகக்கொண்டுதான் இந்தச் செலயணி அமைக்கப்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீளவந்து குடியேற முடியும் என ஏற்கனவே வடமாகாண சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முஸ்லிம்கள் முழுமையாக மீள்குடியேறவில்லை என்பது உண்மைதான்.

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையானவர்கள் போர் ஆரம்பமாகமுன்னர் வசித்து வந்திருந்தார்கள் என்பது உண்மை. ஆனால், அவர்கள் பூர்வீகமாக யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர்களல்ல. தொழில் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்தவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். இவர்களில் ஒருபகுதியினர் வர்ததக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இவர்களில் கணிசமானவர்கள் வாடகை வீடுகளிலேயே தங்கியிருந்துள்ளார்கள். அவர்களுக்குச் சொந்தமான வீடுகளோ சொத்துக்களோ யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. ஆக, மீள்குடியேற்றம் என்ற பெயரில் அவர்களை மீளக்கொண்டுவந்து குடியேற்ற முற்படுவது திட்டமிட்ட குடியேற்றமாகவே இருக்கும். இவ்வாறான குடியேற்றங்களை முன்னின்று நடத்துவதற்காகத்தான் அமைச்சரவையின் உப குழு அமைக்கப்பட்டிருக்கின்றதா என்ற சந்தேகம் நியாயமாகவே எழுகின்றது.

தமிழ் மக்களாக இருந்தால் என்ன முஸ்லிம் மக்களாக இருந்தால் என்ன மீள்குடியேற்றம் என வரும் போது வடமாகாண சபையினரே இதனையிட்டுத் தீர்மானிக்க வேண்டும். அமைச்சரவை தீர்மானிக்க வேண்டிய விடயங்கள் அதிகாரங்களும் இருக்கின்றது. இது அவ்வாளான ஒரு அதிகாரம் அல்ல. அதிகாரங்களை வழங்குவது போன்று வழங்கி விட்டு மீண்டும் பறிப்பதாகவே இந்தச் செயற்பாடு அமைந்திருக்கின்றது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு வடமாகாண சபை இடமளிக்கப்போவதில்லை என்பதால் இவ்வாறான உப குழு ஒன்றை அமைத்து வடமாகாண சபையின் செயற்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? இவ்வாறான ஒரு நிலையில் கருத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்று எப்படிச்சாத்தியமாகும்?

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை வடமாகாண அரசின் ஊடாக நிறைவேற்ற வேண்டும். அது எந்தத் திட்டமாக இருந்தாலும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையை ஓரங்கட்டிவிட்டு இவ்வாறான செயற்பாடுகளை தமது கைகளில் எடுத்துக்கொள்ள மத்திய அரசாங்கம் முயற்சிக்குமாயின், நல்லிணக்கம் என்று சொல்லக்கொள்வதில் அர்த்தமிருக்கப்போவதில்லை. அதனைத் தமிழ் மக்கள் நம்பப்போவதுமில்லை. வடமாகாண அரசுடன் கலந்துரையாடி குடியேற்றம் மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே நல்லிணக்கத்தில் தமக்குள்ள அக்கறையை மத்திய அரசு வெளிப்படுத்த முடியும். அதனைச் செய்வார்களா?
(ஞாயிறு தினக்குரல்: 2016-07-24)

Sunday, July 17, 2016

நிஷாவின் விஜயம்

வெளிநாட்டு இராஜதந்திரிகளின் இலங்கைக்கான விஜயங்கள் அண்மைக் காலங்களில் அடிக்கடி இடம்பெறுகின்ற போதிலும், அவை செய்திகளில் பெறும் முக்கியத்துவத்துக்கு மேல், அரசியலில் தாக்கம் எதனையும் ஏற்படுத்துவதில்லை. இந்த விஜயங்களின் போது இடம்பெறும் சந்திப்புக்களும், அதன்போது பரிமாறப்படும் கருத்துக்களும்தான் பல செய்திகளை அல்லது உண்மைகளை எனக்கு வெளிப்படுத்துகின்றன. தற்போது இலங்கை வந்து சென்றுள்ள அமெரிக்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வாளின் விஜயத்தையும் அவடவாறானதாகவே நோக்க வேண்டியுள்ளது. அவரது விஜயம் அரசியல் ரீதியில் ஒரு திருப்பத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தக்கூடிய இயலுமையை கொண்டிருக்காத போதிலும்,  அவரது சந்திப்புக்களின் பின்னர் வெளிவரும் தகவல்கள்தான் பல உண்மைகளை வெளிப்படுத்துவனவாக உள்ளன.

போர்க் குற்ற விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பு, நல்லிணக்க முயற்சிகள், அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் போன்ற விடயங்களில் அமெரிக்கா எவ்வாறான அணுகுமுறையை வெளிப்படுத்தும் என்பது தொடர்பாகவே நிஷாவின் விஜயத்தின் போது முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டது. இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது. போர்க் குற்ற விசாரணைகளில் கலப்புப் பொறிமுறை ஒன்று தொடர்பானதாகவே இந்தப் பிரேரணை அமைந்திருந்தது. அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணைக்கு ஆச்சரியப்படத்தக்க வகையில், இலங்கையும் அநுசரணை வழங்கியது. மேற்கு நாடுகளுடனான தமது நெருக்கமான உறவுகளை வெளிப்படுத்தும் வகையிலான ஒரு இராஜதந்திர நகர்வாகவே இலங்கையின் இந்தச் செயற்பாடு அமைந்திருந்தது.

ஜெனீவாவில் பிரேரணைக்கு ஆதரவாக பச்சைக்கொடி காட்டிய இலங்கை அரசாங்கம் கொழும்பில் அவ்வாறு செயற்பட முடியவில்லை. சிங்களக் கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே கொழும்பின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. ஜனாதிபதியும், பிரதமரும் போர்க் குற்ற விசாரணையில் சர்வதேச பங்களிப்பை ஏற்கமுடியாது என கடும் போக்கை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைப் பொறுத்தவரையில் இதற்கு முரணான ஒரு நிலைப்பாட்டை எடுத்து சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த முனைகின்றார். ஜனாதிபதியின் கருத்து அவரது தனிப்பட்ட நிலைப்பாடு எனப் பிரகடனப்படுத்தும் அளவுக்கு வெளிவிவகார அமைச்சரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது. ஆக, இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது யார்?

இலங்கை தொடர்பான பிரேரணையை ஜெனீவாவில் கொண்டுவந்தவர்கள் என்ற முறையில், நிஷா பிஸ்வாளின் விஜயத்தின் போது இதற்கான பதில் எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பது பகிரங்கப்படுத்தப்படும் என்பதும், சர்வதேச பங்களிப்பு உட்பட பல்வேறு விடயங்களிலும் அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் எனவும் 'வழமைபோல' எதிர்பார்க்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், கிழக்கு மாகாண முதலமைச்சர், வெளிவிவகார அமைச்சர் என முக்கிய பிரதிநிதிகளை அவர் சந்தித்துச் சென்றிருந்தபோதிலும் எதிர்பார்க்கப்பட்ட விடயங்களில் தமது நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்த நிஷா தவறியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், வழமைபோல தமது 'முறைப்பாடுகளை' அவர்கள் முன்வைத்திருக்கின்றார்கள். அதற்குத் திட்டவட்டமான பதில் எதுவும் அமெரிக்க தரப்பிலிருந்து வரவில்லை.

"அர­சாங்­கத்தின் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை அமைக்­கப்­ப­டும்­போது சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பு குறித்த அமெ­ரிக்­காவின் நிலைப்­பாடு அறி­விக்­கப்­ப­டு­ம். எவ்­வா­றா­யினும், அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யா­னது பொது­மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளிக்கும் வகையில் அமை­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது" என நிஷா பிஸ்வால் நழுவல் போக்கில் வழமைபோன்ற ஒரு பதிலைத்தான் தமது நிலைப்பாடாக கூட்டமைப்பின் தலைவர்களுக்குக் கூறிச்சென்றிருக்கின்றார். பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை அமைக்கப்படுவதற்கு முன்னதாக அது தொடர்பில் கருத்துக்களை வெளிப்படுத்துவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அவர் விளக்கிக் கூறியிருக்கின்றார். ஜெனீவா பிரேரணை நிறைவேற்றப்பட்டு பத்து மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், அதனைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்குப் பதிலாக, அதற்கு எதிரான கருத்துக்கள் மேலோங்கிவருவதைத்தான் அவதானிக்க முடிகின்றது. சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என ஜனாதிபதியும், பிரதமரும் போட்டிபோட்டுக் கூறிவருவது ஜெனீவா பிரேரணைக்கு எதிரான போக்கை மேலோங்கச் செய்வதாகவே அமைந்திருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

நிஷாவுடனான சந்திப்பின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால், வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் தொடர்ந்து கொண்டு இருக்கின்றமை தொடர்பாகவும், பௌத்த மதத்தை பரப்பும் வகையிலான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றமை குறித்தும் , இராணுவத்தின் தேவைக்காக தொடர்ந்தும் காணிகள் அடையாளம் காணப்பட்டு திட்டமிட்ட முறையில் சுவீகரிக்கப்படும் நிலைமை முற்றுப்பெறாது இடம்பெற்று வருகின்றமை தொடர்பாகவும் தெரியப்படுத்தப்பட்டது. இதனைவிட, ஜெனீவா பிரேரணையில் ஒப்புக்கொள்ளப்பட்ட பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக கைதிகளின் விடுதலை வெறும் பத்திரிகை அறிக்கையாக மட்டும்தான் உள்ளது போன்ற விடயங்களும் தெரியப்படுத்தப்பட்டது. இவை தொடர்பில் அரச தரப்பினருடனான சந்திப்புக்களின் போதும் ஆராயப்படும் என வழமைபோல நிஷா பதிலளித்துச் சென்றிருக்கின்றார்.

ஆட்சி மாற்றத்தின்போது பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், அதனை நடைமுறைப்படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டிருக்கின்றது. அபோல ஜெனீவாவில் கடந்த வருடம் வழங்கிய உறுதிமொழிகளின் நிலையும் உள்ளது. மகிந்த ராஜபக்‌ஷ உட்பட சிங்களத் தீவிரவாதிகளின் எழிச்சி இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்துகின்றது. அல்லது அதனைக்காணமாகக் காட்டி தமது உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதற்குத்தான்  முன்னுரிமை கொடுக்கின்றது. மறுபுறத்தில், தமிழர் தரப்பையும் சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக நிஷா போன்ற மேற்கு நாடுகளின் இராஜதந்திரிகள் கொழும்பு வந்து கூட்டமைப்பின் தலைவர்கள் சொல்லும் முறைப்பாடுகளை அனுதாபத்துடன் கேட்டுக்கொண்டுக்கொண்டு விமானம் ஏறிச் சென்றுவிடுவதும் சகஜமாகவிட்டது. இதனால்தான், மேற்கு நாட்டு இராஜதந்திரிகளின் வருகை பத்திரிகைச் செய்திகளில் பெறும் முக்கியத்துவத்தை அரசியல் ரீதியாகப் பெற்றுக்கொள்வதில்லை.

(ஞாயிறு தினக்குரல்: 2016-07-17)

Sunday, July 10, 2016

கொத்துக் குண்டுகள்: விசாரணை நடத்தப்படுமா?

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் இலங்கைப் படையினரால் சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்டுள்ள கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டனவா? அவ்வாறு பயன்படுத்தப்பட்டிருந்தால் அது சர்வதேச விதி முறைகளை மீறிய ஒரு செயற்பாடா? இலங்கை அரசியல் வட்டாரங்களில் கடந்த சில வாரங்களாக எழுப்பப்படும் கேள்விகளாக இவை உள்ளன. இறுதிக் கட்டப் போரில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்ற தகவலை லண்டன் கார்டியன் பத்திரிகை இரு வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது முதல் இது தொடர்பான விவாதம் ஒன்று இலங்கை அரசியலில் இடம்பெற்றுவருகின்றது. இறுதியாக காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம வெளியிட்ட தகவல்களும், அதற்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொடுத்திருக்கும் பதிலும், இந்தப் பிரச்சினையை உச்ச கட்டத்துக்குக்கொண்டு சென்றிருக்கின்றது.

இறுதிக்கட்டப் போரின் போது கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்ற தகவல் வெளிவருவது இதுதான் முதன்முறையல்ல. போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியிலேயே தமிழர் தரப்பினராலும், மனித உரிமை அமைப்புக்கள் சிலவற்றினாலும், இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.நா. நிபுணர் ஒருவரும் 2012 இல் இது தொடர்பான தகவலை வெளியிட்டிருந்தார். வெடிக்காத நிலையில் கொத்துக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்ற தகவலை அவர் அப்போது முன்வைத்திருந்தார். இலங்கை அரசாங்கம் ஆரம்பம் முதல் இதனை மறுதலித்தே வந்திருக்கின்றது. இருந்தபோதிலும் இப்போது வெளிப்படுத்தப்படும் தகவல்கள் அரசாங்கத்துக்கு அதிகளவுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றமையையும் அவதானிக்க முடிகின்றது. சர்வதேச ரீதியாக புகழ் பெற்ற ஊடகமான லண்டன் கார்டியன் இது குறித்த செய்தியை ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கின்றது. இதனையடுத்தே இந்த விவகாரம் தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தை இலங்கையின் பக்கம் திருப்பியிருக்கின்றது. இலங்கை அரசுக்கு உள்ள பிரச்சினைகளுக்குள் இது புதிய நெருக்கடி ஒன்றைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது என்பது உண்மை. போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்ற கோரிக்கைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக இது அமைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த பின்னணியிலேயே இந்தச் செய்திகள் வெளியாகியிருந்தமையும் கவனிக்கத்தக்கது. அதனால் ஐ.நா.வின் கவனத்தையும் இது ஈர்ந்திருக்கின்றது. கொத்துக்குண்டு பயன்படுத்தப்பட்தப்பட்டுள்ளது என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து இலங்கை அரசு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கை இராணுவத்தை நியாயப்படுத்தும் வகையில் உள்ளக விசாரணையை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதில் கொத்துக்குண்டு பயன்படுத்தப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமான செயல் அல்ல என்று அவர் நியாயப்படுத்தியிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் உடன்படிக்கை 2010 ஆம் ஆண்டில்தான் கைச்சாதிடப்பட்டிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டும் அவர், இலங்கையின் இறுதிப்போர் 2009 இல் இடம்பெற்றிருப்பதால் அதில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தவறானதல்ல என நியாயப்படுத்த முற்பட்டிருக்கின்றார்.

எனினும், பரணகமவின் இந்தக் கருத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருந்தார். பரணகம அதிமேதாவித் தனமாகப் பேசுகின்றார் என்ற கருத்தையும் அவர் முன்வைத்திருக்கின்றார். அத்துடன், கொத்துக்குண்டு பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இறுதிக்கட்டப்போரை வழி நடத்திய அமைச்சர் சரத் பொன்சேகா கருத்துத் தெரிவிக்கும்போது, "இலங்கை இராணுவம் இறுதி போரின் போது கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை. அவற்றை வாங்குவதற்குரிய பணபலமும் இருக்கவில்லை. எனவே, இது பற்றி எங்கு வேண்டுமானாலும் சாட்சியமளிப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டார்.  கொத்துக்குண்டு குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான தனியான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் தமிழ்த் தலைவர்களும் முன்வைக்கின்றார்கள். கார்டியன் வெளியிட்டுள்ள தகவல்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கோரிக்கை என்பவற்றின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பது இவர்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது.

இரண்டாவது உலகப்போரின்போது பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்ட கொத்துக் குண்டுகள், வியட்நாம் யுத்தம் உட்பட பல்வேறு களமுனைகளில் பாரியளவில் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. விமானத் தாக்குதல்களுக்கு மட்டுமன்றி, ஆட்டிலறி தாக்குதல்களின் போதும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்த முடியும். போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அனைத்துமே ஆபத்தானவைதான். ஆனால், கொத்துக்குண்டுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் மிக மோசமானதாக இருக்கும். இரண்டு காரணங்களால் இவை பொது மக்களுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்துவதாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒன்று: இந்த வகைக் குண்டுகள் பாரிய பிரதேசத்தில் சேதங்களை ஏற்படுத்தக்கூடியவை. அதாவது ஒரு குறிப்பிட்ட எல்லையையும் தாண்டி இது வெடித்துச் சிதறுவதால் பாரியளவிலான மரணங்களை ஏற்படுத்தக்கூடியவை. இரண்டு: இவ்வாறு போடப்படும் குண்டுகளில் சில உடனடியாக வெடித்துச் சிதறினாலும், மேலும் சில குண்டுகள் உடனடியாக வெடிக்காமலிருந்து பின்னர் பொதுமக்களுக்குப் பாரிய உயிராபத்தை அல்லது உடல் அங்க இழப்புக்களை ஏற்படுத்தக்கூடியவை.

பொதுமக்களுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் அபயகரமான ஒரு ஆயுதமாக கொத்துக்குண்டுகள் உள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்தான் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. உட்பட பல்வேறு அமைப்புக்கள் கொத்துக்குண்டுகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. போர்க்களங்களில் பணிபுரியும் அமைப்பு என்ற முறையில் செஞ்சிலுவைச் சங்கம் இது குறித்த தகவல்களைச் சேகரித்திருந்தது. கொத்துக்குண்டுத் தாக்குதல்களின் போது பாதிக்கப்படுபவர்களில் 98 வீதமானவர்கள் பொதுமக்களாகவே இருக்கின்றார்கள் என்பதும் கண்டறியப்பட்டது. இதில் 27 வீதமானவர்கள் சிறுவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. 2005 ஆம் ஆண்டிலிருந்தே கொத்துக்குண்டுகள் தடைசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சர்வதேச அமைப்புக்கள் பலவும் கையெழுத்து வேட்டைகளை ஆரம்பித்திருந்தன. இது குறித்த சர்வதேச உடன்படிக்கைகளும் அன்றிலிருந்தே தயாராகத் தொடங்கிவிட்டது. இலங்கையிலும், இறுதிப்போரின்போது ஏற்பட்ட பாரியளவிலான பொதுமக்கள் இழப்புக்கள் கொத்துக்குண்டுகளால் ஏற்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டை மனித நேய அமைப்புக்கள் ஏற்கனவே முன்வைத்திருந்தன.

"2010 இல்தான் கொத்துக்குண்டுகளைத் தடைசெய்யும் உடன்படிக்கை கைச்சாத்தானது. எனவே இலங்கை இராணுவம் அதனைப் பயன்படுத்தியிருந்தாலும், அது தவறல்ல" என்ற விதமாக மெக்‌ஸ்வெல் பரணகம தெரிவித்திருப்பது மிகவும் மோசமான ஒரு கருத்தாகும். கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரபூர்வமான தகவல்களை லண்டன் கார்டியன் இப்போது வெளியிட்டிருக்கின்றது. வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிய ஐ.நா. அதிகாரி ஒருவர் கூட இதனை ஏற்கனவே இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கின்றார். எதிராளிகளைக் கொல்வதற்குப் பதிலாக பொதுமக்களுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி அவர்களை அச்சுறுத்தும் வகையில் அந்த நோக்கத்துடனேயே கொத்துக்குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன என்பது வெளிப்படையானது. எனவே, இது தொடர்பில் முறையான - நம்பகத்தன்மையான விசாரணை ஒன்றை முன்னெடுப்பதன்மூலமாகவே, உண்மையை வெளிப்படுத்த முடியும். இலங்கை அரசாங்கம் அதற்கு முன்வருமா?

ஞாயிறு தினக்குரல்: 2016-07-10

Wednesday, July 6, 2016

அடுத்து என்ன?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்திருக்கின்றது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் ஹ+ஸைன் வெளியிட்ட வாய்மூல அறிக்கைதான் ஜெனீவா நோக்கி இலங்கையர்களின் கவனத்தைத் திருப்பியிருந்தது. இது வெறுமனே காலங்கடத்தலாக முடிந்துவிடப் போகின்றதா அல்லது பயனுள்ள விளைவுகளைத் தரப்போகின்றதா என்பதுதான் இப்போது எம்முன்பாக எழும்கேள்வி. ஆணையாளரின் வாய்மூலமான அறிக்கையும், அதற்குப் பதிலளித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நிகழ்த்திய உரையும்தான் அடுத்த கட்டம் எவ்வாறானதாக அமையும் என்பதை மதிப்பிடுவதற்கு உதவக்கூடியவை.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக அக்கறைகாட்டி வருவதை ஆணையாளரின் அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றமை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது தொடர்பாக வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றாமை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொது மக்கள் தொடர்ச்சியாக கண்கானிப்புக்கு உட்படுத்தப்படல் போன்ற விடயங்களை ஆணையாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் காணப்படும் தாமதம், அவர்களுக்கு வீடுகள், வாழ்வாதார வழிமுறைகள் மற்றும் ஏனைய வசதிகள் என்பவற்றினைப் பெற்றுக்கொடுத்து அவர்களது அன்றாட வாழ்க்கையினை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிலே தொடர்ந்தும் காட்டப்பட்டுவருகின்ற அசமந்தப் போக்கு காரணமாக நல்லிணக்கச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்கின்ற போது நல்லிணக்க ஆணைக்குழுக்களை அமைத்துச் செயற்படுவது எந்தளவுக்கு பலனளிப்பதாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. அது வெறுமனே சர்வதேசத்தை சமாதானப்படுத்துவதற்கும், காலத்தைக் கடத்துவதற்குமான உபாயமாகத்தான் இருக்க முடியும்.

பொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேசம் சம்பந்தப்படுத்தப்பட வேண்டும் என்பதை தன்னுடைய வாய்மூலமான அறிக்கையிலும் ஆணையாளர் வலியுறுத்தியிருந்தார். இலங்கையும் அனுசரணை வழங்கி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணையிலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகள் சம்பந்தப்படுத்தப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜெனீவாவில் இதனை ஏற்றுக்கொண்டு இணை அநுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கத் தரப்பினர் கொழும்பு வந்து இதனைச் செயற்படுத்த விரும்பவில்லை. இது சிங்களக் கடும் போக்காளர்களைச் சீற்றமடையச் செய்யும் என்பதும், மகிந்த ராஜபக்‌ஷ தரப்பு தமது அரசியலுக்கு இதனைப் பயன்படுத்திக்கொண்டுவிடும் என்பதும்தான் இலங்கை அரசாங்கத்தின் தடுமாற்றத்துக்குக் காரணம்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசம் சம்பந்தப்பட வேண்டும் என்பதை ஆணையாளர் மீண்டும் வலியுறுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் இந்தத் தடுமாற்றம்தான் பிரதான காரணம். ஜெனீவா கூட்டத் தொடரிலும், பக்க நிகழ்வுகளிலும் கலந்துகொண்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், தமிழர் தரப்பினரும் இந்த விடயத்தை முக்கியமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். அதனை வலியுறுத்தியிருந்தார்கள். ஆணையாளர் இவ்விடயத்தை தமது கவனத்தை மீண்டும் குவித்திருப்பதற்கு இந்த அழுத்தங்களும் காரணமாக இருந்திருக்கலாம். ஆணையாளரின் அறிவிப்பு, மனித உரிமை அமைப்புக்களின் அழுதம் என்பன இலஙகை அரசாங்கத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதனால்தான், சர்வதேச சம்பந்தத்தை தாம் ஒரேயடியாக நிராகரிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது பதிலுரையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசாங்கத்தின் மீது ஆணையாளர் விமசனங்களை முன்வைத்திருந்தாலும், இவை கடுமையானவையாக இருக்கவில்லை. இடையிடையே இலங்கை அரசாங்கம் செய்த நல்ல விடயங்களைப் பாராட்டியும் இருக்கின்றார். மைத்திரி - ரணில் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மேற்கு நாடுகளுக்கு வேண்டப்பட்ட ஒரு அரசாகவே அது இருக்கின்றது. இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க சர்வதேசம் விரும்பப்போவதில்லை. இந்த நிலையில், இலங்கையில் உறுதியளிக்கப்பட்ட பல விடயங்கள் நடைபெறாமையால் அதனை மனித உரிமைகள் ஆணையாளர் விமர்சித்திருந்தாலும், இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்க அவர் விரும்பியிருக்கமாட்டார்.  அதேவேளையில், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தமிழர் தரப்பின் அழுத்தம் காரணமாக சில விடயங்களைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக மனித உரிமை பேரவையின் நம்பவகத் தன்மையைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் இருந்துள்ளது.

எது எப்படியிருந்தாலும், பக்கச்ச்சார்பானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்குசர்வதேச பங்களிப்பு அதியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் இருப்பது தமிழ்த் தரப்பினரால் வரவேற்கப்பட்டுள்ளது. போர்க் குற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகிய தமிழர்களும், பொறுப்புக்கூறல் செயன்முறைகள்  உள்ளக ரீதியாக நிர்வகிக்கப்படுவதை நிராகரித்தும், சர்வதேச பொறுப்புகூறல் செயன் முறைகளையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட  தீர்மானமானது, ஒரு உள்ளகப் பொறிமுறையினையே ஏற்படுத்தி அதில் வெளிநாட்டு  மற்றும் பொதுநலவாய நாடுகளை சேர்ந்த நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணையாளர்களை ஈடுபடுத்துவதை ஊக்குவிப்பதாக தெரிவித்து இருந்தது. இதற்கு அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கம் பின்னர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில், சர்வதேசப்பங்களிப்பை நாம் முற்றாக நிராகரிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் இப்போது றியிருக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தல் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். அதற்கமையை சர்வதேச சம்பந்தத்துடனான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். சர்வதேச சமூகமும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் இவ்விடயத்தில் அதிகளவு அழுத்தங்களை இலங்கை மீது கொடுப்பது அவசியம். அதன்மூலமாகவே நம்பகத்தன்மையான ஒரு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியும்.
2016-07-03 தினக்குரல்