Monday, June 17, 2013

'13' ஐ ஒழிக்கும் போராட்டமும் விமலும்!

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்துவந்த அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, இதற்காக நாடு தழுவிய ரீதியாக கையெழுத்து வேட்டை ஒன்றையும் நடத்தியிருக்கின்றார். நாடு தழுவிய ரீதியாக எனப் பொதுவாகக் கூறப்பட்டாலும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் அதற்குள் உள்ளடக்கப்படுவதில்லை என்பது இரகசியமானதல்ல. வடக்கு கிழக்குக்குச் சென்றிருந்தால் அங்கு அவர்களுக்கு கையொப்பம் கிடைத்திருக்குமா என்பது வேறு விடயம். நாட்டின் பல பகுதிகளிலுமிருந்தும் சேகரிக்கப்பட்ட பத்து இலட்சத்துக்கும் அதிகமான கையொப்பங்களைப் பெறும் நிகழ்வு கடந்த வாரம் பெரும் ஆரவாரங்களின் மத்தியில் கொழும்பில் இடம்பெற்றது.

13 க்கு எதிராக இன்று சிங்கள - பௌத்த தேசியவாத அமைப்புக்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்தில் முக்கிய போராளிகளில் ஒருவராக விமல் வீரவன்ச உள்ளார்ஹெல உறுமய, பொதுபல சேன,  ராவண சேன என என பல படைப்பிரிவுகள் இன்று 13 க்கு எதிரான போரில் போட்டிபோட்டுக்கொண்டு குதித்துள்ளன. இதில் சுமார் 25 க்கும் அதிகமான அமைப்புக்கள் இணைந்து மாணாண சபைகளுக்கு எதிரான அமைப்பு ஒன்றை உருவாக்கியும் களத்தில் குதித்துள்ளன. இந்தக் கூட்டமைப்புக்களுக்குள் இணைந்து காணாமல் போகாமல் தனித்து நின்று தனது தனித்துவத்தைக் காண்பிப்பதற்கு விமல் வீரவன்ச மேற்கொண்டுள்ள முயற்சிகளில் ஒன்றாகத்தான் 10 இலட்சம் கையொப்பங்களைப் பெறும் அவரது திட்டம் அமைந்திருக்கின்றது எனக் கூறலாம்.

இந்த வகையில் இந்த வாரம் பத்திரிகைச் செய்திகளில் அதிகளவுக்கு இடம்பெற்றிருந்தவர் என்ற முறையில் விமல் வீரவன்சவின் அரசியல் பற்றி சற்று சுருக்கமாகப் பார்ப்போம்!

13 ஐ இல்லாதொழிப்பது என்பது சிங்கள அரசியல் தலைமைகளிடையே இன்று ஒரு போட்டியை உருவாக்கியிருக்கின்றது. இதில் யார் அதிகளவுக்கு ஸ்கோர் பெறுவது என்ற அடிப்படையில் இந்த அமைப்புக்கள் அனைத்தும் களம் இறங்கியுள்ள நிலையில், தினசரி திடுக்கிடும் திருப்பங்களுடன் அரசியல் நகர்ந்துகொண்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமய 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு தனிநபர் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்திருக்கின்றது. இதற்குப் போட்டியாகத்தான் பத்து லட்சம் கையொப்பங்களைச் சேகரிக்கும் பணியில் தமது பரிவாரங்களை இறக்கிவிட்டார் விமல் வீரவன்ச! இந்தக் கையொப்பங்களைப் பெறும் நிகழ்வு கொழும்பில் பெரும் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. இனி இதனை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

விமல் வீரவன்சவைப் பொறுத்தவரையில் அவர் ஒரு சிறந்த பேச்சாளர். தன்னுடைய பேச்சாற்றலால்தான் குறுகிய காலத்திலேயே அரசியலில் அனைவரும் திரும்பிப் பார்க்கத்தக்க ஒரு நபராக அவரால் உயர முடிந்தது. தன்னுடைய பாடசாலைக் காலத்திலேயே அரசியலில் அதிகளவு ஈடுபாட்டைக் காட்டிய விமல், பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்டவுடனேயே 1980 களில் ஜே.பி.வி.யில் இணைந்துகொண்டார். அதேவேளையில் சிறிதுகாலம் லக்பீம பத்திரிகையின் அரசியல் பத்தி எழுதுபவராகவும் இருந்துள்ளார்.

ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் பதவி குறுகியகாலத்துக்குள்ளேயே அவரைத் தேடிவருவதற்கு அவரது பேச்சாற்றல்தான் காரணமாக அமைந்திருந்தது. ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்த போது அதில் வீரவன்ச முன்னணியில் இருந்தார். 2005 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்த ஜே.வி.பி. அரசாங்கத்திலும் இணைந்துகொண்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு முழு ஆதரவை வழங்கியது.

ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு எனப் பெயர் பெற்றிருந்த ஜே.வி.பி.யில் உருவாகிய தலைமைத்துவப் பிரச்சினை காரணமாக அதிலிருந்து வெளியேறி, தனியாக தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை வீரவன்ச அமைத்து ஆளும் கூட்டணியுடன் இணைந்துகொண்டுள்ளார். ஜே.வி.பி.யின் கொள்கைகளைப் பொறுத்தவரையில் அதில் இரண்டு விடயங்கள் முக்கியமாகக் காணப்பட்டது. ஒன்று - கம்யூனிசம். இரண்டு - இனவாதம். இதில் கம்யூனிசத்தை விட்டுவிட்டு இனவாதத்தை மட்டுமே தன்னுடைய புதிய கட்சிக்கான கொள்கையாக விமல் வீரவன்ச கொண்டுவந்தார்.

சிங்கள மக்களின் இரட்சகன் என தன்னைக் காட்டிக்கொள்வதற்காக அவர் முன்னெடுத்த அரசியல் நகர்வுகள் பல. அதனால்தான் ஹெல உறுமய, பொதுபல சேனா மற்றும் ராவண சேனா போன்ற அமைப்புக்களின் அரசியலுக்கு அவரால் தாக்குப் பிடிக்க முடிகின்றது. இப்போது புதிதாக அவர் மேடையேற்றியிருப்பதுதான் 13 க்கு எதிரான போராட்டம். 13 ஐ இல்லாதொழிப்பதற்கான போராட்டத்தில் அமைச்சர் பதவியை இழக்கவும் தயார் என்பதாக அவர் காட்டிக்கொள்கின்றார். கடந்த மே தின பேரணியை ஆளும் கூட்டமைப்புடன் இணையாமல் தனியாக நடத்தியதன் மூலம் 13 ஐ ஒழிப்பதில் தன்னுடைய உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

இப்போது பத்து இலட்சம் கையொப்பங்களுடன் தன்னுடைய பலத்தை வெளிப்படுத்துவதற்கு அவர் தயாராகியிருக்கின்றார். 13 வது திருத்தத்துக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள இரண்டு திருத்தங்களும் போதுமானதல்ல என்பதுதான் அவரது கருத்து. இந்தப் போராட்டத்தில் அவர் வெற்றிபெறுவாரா? அல்லது அரசு 13 ஒழிக்கப்படாவிட்டால் அமைச்சர் பதவியைத் துறப்பாரா? அல்லது ஐ.நா. அலுவலகத்துக்கு முன்னால் அவர் நடத்திய ‘சாகும் வரை உண்ணாவிரதம்” போல இதுவும் முடிவுக்கு வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

- தவசி
தினக்குரல் (16-06-2013)

No comments:

Post a Comment