Monday, June 24, 2013

டில்லியின் அடுத்த நகர்வும் மேனனும்!

ந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பது 'சவுத் புளொக்'தான். பிரதமரின் அலுவலகம் மட்டுமன்றி பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சு அலுவலகமும் அதற்குள்தான் அமைந்திருக்கின்றன. இந்த சவுத்புளொக்கை ஆக்கிரமித்து இந்திய வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துபவர்கள் மலையாளிகள். அவ்வாறு இந்தியக் கொள்கை வகுப்பில் தற்போது முக்கியமான ஒரு நபராக இருக்கும் ஒரு மலையாளியைப் பற்றித்தான் இந்த வாரம் பார்க்கப்போகின்றோம். அவர்தான் சிவ்சங்கர் மேனன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தியாவுக்கான விஜயத்தை கடந்த வாரத்தில் மேற்கொண்டிருந்த நிலையில் சிவ்சங்கர் மேனனின் பெயர் செய்திகளில் அதிகளவுக்கு இடம்பெற்றிருந்தமையைக் காணமுடிந்தது. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகளை இலங்கை அரசு தீவிரமாக முன்னெடுத்துவரும் நிலையில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷவுடன் தொடர்புகொண்ட மேனன்அந்த முயற்சிகள் கைவிடப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து புதுடில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளின் போதும் மேனன்னின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மேனனை இரண்டு தடவை சந்தித்துப் பேசியுள்ளார்கள். இன்று இலங்கை தொடர்பாக இந்தியா எடுக்கப்போகும் தீர்மானத்தைபபொறுத்தவரையில் சிவ்சங்கர் மேனனின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையில், மேனின் இராஜதந்திரப் பணிகள் தொடர்பில் இந்த வாரம் சுருக்கமாகப் பார்ப்போம்:

இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் இப்போது பணியாற்றினாலும், அடிப்படையில் அவர் ஒரு இராஜதந்திரி! கேரளவில் பாலக்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட மேனனின் குடும்பமே இராஜதந்திரிகள்தான். அவரது தந்தை நாராயண மேனன் இரு சிறந்த இராஜதந்திரி எனப் பெயர் பெற்றவர். அவரது பாட்டனார் கே.பி.எஸ்.மேனன்தான் இந்தியாவின் முதலாவது வெளிவிவகாரச் செயலாளர். நேருவுடன் பணியாற்றியவர். மேனனின் மாமனாரும் ஒரு இராஜதந்திரி.

1972 ஆம் ஆண்டில் 23 ஆவது வயதில் இந்திய வெளியுறவுச் சேவைக்குள் பிரவேசித்த மேனன், தன்னுடைய 41 வருடகால அனுபவத்தில் மிகப்பெரிய சவாலாக இன்று இலங்கைப் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கின்றார். இலங்கையில் உயர் ஸ்தானிகராகப் பணியாற்றியதன் மூலம் இலங்கைப் பிரச்சினையில் ஆழமான அறிவைக்கொண்டுள்ள மேனன், அதன் பின்னர் இந்திய வெளிவிவகாரச் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும் இலங்கைப் பிரச்சினையை பிரதானமாகக் கையாண்டவர்.

இப்போது இலங்கை தொடர்பில் இந்தியா என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வி பலமாக எழுந்துள்ள நிலையில் அனைவருடைய கவனமும் மேனனின் பக்கமே திரும்பியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது: இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் வெளிவிவகாரக் கொள்கையை வகுத்துக்கொள்வதில் அரசியல்வாதிகளைவிட அதிகாரிகளுடைய பங்கே முக்கியமானதாக - செவ்வாக்கைச் செலுத்துவதாக இருக்கின்றது. அந்த வகையில் வெளிவிவகாரச் சேவையில் அனுபவத்தையும் கொண்டுள்ள பாதுகாப்பு ஆலோசகர் மேனன் இந்த விடயத்தில் முக்கிய பங்காற்றக் கூடியவர்.

இரண்டாவதாக: தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடியைக் கையாள்வதற்காக அடுத்த மாத நடுப்பகுதியில் கொழும்புக்கான விஜயம் ஒன்றை அவர் மேற்கொள்ளவிருக்கின்றார். இந்த விஜயம் முக்கியமானதாகக் கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கொழும்பில் இடம்பெறும் நிகழ்வுகள் - குறிப்பாக 13 ஆவது திருத்தத்துக்கு எதிரான செயற்பாடுகள் டில்லிக்கு பெரும் சங்கடத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. இந்தத் திருத்தம் இலங்கை - இந்திய உடன்படிக்கை மூலம் கொண்டுவரப்பட்ட ஒன்று என்பதால் ஒரு தலைப்பட்சமாக அதனை நீர்த்துப்போகச் செய்வதற்காக எடுக்கப்படும் செயற்பாடுகள் இந்தியாவை அமானப்படுத்துவதாகவே இருக்கும். இதனைவிட '13 பிளஸ்' என டில்லிக்கு இலங்கைத் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறுவதாகவும் இவை அமைந்திருக்கின்றன.

இவை அனைத்துக்கும் மேலாக இந்தியாவின் மேலாதிக்க நிலைக்குச் சவால்விடும் சீனாவை கொழும்பு அரவணைத்துச் செல்வதும், அந்த நாட்டுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றைச் செய்திருப்பதாக வந்திருக்கும் செய்திகளும் டில்லிக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இலங்கைக்குள் சீனா அதிகளவுக்குத் தலையைப் போடுவது தமக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகின்றது. இவை தொடர்பில் டில்லியின் கரிசனையைக் கணக்கில் எடுக்க கொழும்பு தயாராகவில்லை. இந்த நிலைமைகள் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸைப் பாதிக்கும்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு பார்க்கும் போது இலங்கை விவகாரத்தில் இந்தியா தன்னுடைய மென்போக்கான அணுகுமுறையை மாற்றிக்கொள்ளலாம் என இராஜதந்திர வட்டாரங்களில் கருதப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இந்தக் கருத்தைத்தான் வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்தியா கையாளப்போகும் எந்த அணுகுமுறையானாலும் அதில் மேனனின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். நாம் முன்னர் குறிப்பிட்டது போல தனது 41 வருடகால இராஜதந்திர அனுபவத்தில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய இராஜதந்திர சவாலை எதிர்கொள்ள மேனனிடம் உள்ள உபாயம்தான் என்ன?

- தவசி

Tuesday, June 18, 2013

இலங்கையில் இந்திய தலையீடு :07 ஈழப்பிரச்சினையில் பார்த்தசாரதியின் பிரவேசம்

1983 ஜூலைக் கலவரத்துக்கு பிந்திய இலங்கை இந்திய அரசியல் நகர்வுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவின் கொழும்பு வருகைக்கு அடுத்தாக 83 ஆகஸ்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத்தின் புதுடில்லி விஜயம் முக்கியமானதாக அமைந்திருந்தது. புதுல்லியில் இடம்பெற்ற தெற்காசிய வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி சென்ற அமைச்சர் ஹமீத், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கை நிலை தொடர்பாக இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்த விஜயத்தின் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் காணப்பட்ட இறுக்கம் தணிந்து இலங்கையின் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக இந்தியாவின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஹமீத்தின் விஜயத்தையடுத்து, இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் பேச்சுக்ளில் இந்திய ஆதரவுடன் இனநெருக்கடிக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகள் தொடர்பில் மேலும் விரிவாக ஆராயப்பட்டது. தீர்வு முயற்சிகளுக்கு தமது அனுசரணையை வழங்குவதற்கு இந்தியா தெரிவித்த விருப்பத்தை இதன்போது ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார்.

இது தொடர்பான விரிவான பேச்சுக்களை நடத்துவதற்காக தன்னுடைய விஷேட தூதுவராக தனது சகோதரர் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனவை அனுப்பிவைப்பதாக ஜனாதிபதி தெரிவித்தமையை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன ஒரு கீர்த்திமிக்க சட்டத்தரணியாகவும், ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரிய ஒரு ஆலோசகராகவும் இருந்தார். இந்தியாவுடனான உறவுகளில் உருவாகிவரும் நெருக்கடிகளை உணர்ந்துகொண்ட ஜனாதிபதி தனக்கு நம்பிக்கைக்குரியவராகவும், இராஜதந்திர விவகாரங்களைச் சிறப்பாகக் கையாளக்கூடியவராகவுமுள்ள ஒருவரையே இந்தியாவுக்கு தனது விஷேட பிரதிநிதியாக அனுப்பிவைக்கத் தீர்மானித்தார். அந்தத் தீர்மானத்தின்படியே தனது சகோதரரை அனுப்பவதற்கு அவர் முன்வந்தார்.

இதனையடுத்து ஒரு சில தினங்களிலேயே புதுடில்லிக்குப் பயணமான எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன இந்தியப் பிரதமருடன் விரிவான பேச்சுக்களை நட்த்தினார். இந்தப் பேச்சுக்கள் பெருமளவுக்கு சுமூகமானதாகவே இடம்பெற்றது.  இந்தப்பேச்சுக்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இந்திரா காந்தி, ‘இலங்கையின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஒற்றுமை என்பவற்றுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இந்தப் பேச்சுக்களை நான் பயன்படுத்திக்கொண்டேன். மற்றைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடாது. இருந்தபோதிலும், இந்த இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான, குறிப்பாக தமிழர்களுக்கும் எமக்கும் இடையிலான சரித்திர, கலாசார மற்றும் நெருக்கமான உறவுகள் காரணமாக அங்கு இடம்பெறும் நிகழ்வுகளால் நாம் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இலங்கை விடயத்தில் தலையிடுவதை இந்திரா காந்தி இவ்வாறு தெளிவாக இராஜதந்திரமாக நியாயப்படுத்தினார். இதற்கு எதிராக எந்தவிதமான நகர்வுகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஜெயவர்த்தனவக்கு ஏற்பட்டது.  இந்தப் பின்னணியில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்திரா காந்தி, இந்தியக் கொள்கைத் திட்டமிடல் குழுவின் தலைவரான கோபாலசாமி பார்த்தசாரதியை தன்னுடைய விஷேட தூதுவராக கொழும்புக்கு அனுப்பிவைப்பதாகத் தெரிவித்தார். இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அநுசரணையை அவர் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஜெயவர்த்தனவைச் சந்திப்பதற்கு கொழும்பு புறப்படுவதற்கு முன்னதாக புதுடில்லியில் இந்திய வெளிவகார அமைச்சு அதிகாரிகள் மற்றும் பிரதமர் இந்திரா காந்தியுடன் விரிவான பேச்சுக்களை நடத்திய பார்த்தசாரதி, அதனையடுத்து சென்னைக்குச் சென்றார். சென்னையில் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் அப்போது சென்னையில் தங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் மற்றும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இனநெருக்கடிக்கு எவ்வாறான தீர்வைக் காணவேண்டும் என்பது தொடர்பில் இவர்கள் தமது கருத்துக்களை பார்த்தசாரதியிடம் தெரிவித்தார்கள்.

தமிழர் தரப்பினரதும் இந்தியத் தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்ட பார்த்தசாரதி, ஆகஸ்ட் 25,(1983) ஆம் திகதி கொழும்பு வந்து ஜனாதிபதி ஜெயவர்த்தனவைச் சந்தித்தார். தமிழர் தரப்புக்கு அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடைமுறைப்படுத்த தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஜெயவர்த்தனவின் இந்தக் கருத்து இந்தியாவுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

1981 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டு வெற்றியளிக்காமல் செயலிழந்துபோன பழைய திட்டத்தையே ஜெயவர்த்தன மீண்டும் எடுத்துவிட்டது தமிழர் தரப்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனவை வழிக்கக் கொண்டுவர அதிகளவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியா கருதியது. …அதேவேளையில் தமிழகத்திலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அலை வேகமாக வீசத் தொடாங்கியது. ..

Monday, June 17, 2013

'13' ஐ ஒழிக்கும் போராட்டமும் விமலும்!

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்துவந்த அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, இதற்காக நாடு தழுவிய ரீதியாக கையெழுத்து வேட்டை ஒன்றையும் நடத்தியிருக்கின்றார். நாடு தழுவிய ரீதியாக எனப் பொதுவாகக் கூறப்பட்டாலும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் அதற்குள் உள்ளடக்கப்படுவதில்லை என்பது இரகசியமானதல்ல. வடக்கு கிழக்குக்குச் சென்றிருந்தால் அங்கு அவர்களுக்கு கையொப்பம் கிடைத்திருக்குமா என்பது வேறு விடயம். நாட்டின் பல பகுதிகளிலுமிருந்தும் சேகரிக்கப்பட்ட பத்து இலட்சத்துக்கும் அதிகமான கையொப்பங்களைப் பெறும் நிகழ்வு கடந்த வாரம் பெரும் ஆரவாரங்களின் மத்தியில் கொழும்பில் இடம்பெற்றது.

13 க்கு எதிராக இன்று சிங்கள - பௌத்த தேசியவாத அமைப்புக்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்தில் முக்கிய போராளிகளில் ஒருவராக விமல் வீரவன்ச உள்ளார்ஹெல உறுமய, பொதுபல சேன,  ராவண சேன என என பல படைப்பிரிவுகள் இன்று 13 க்கு எதிரான போரில் போட்டிபோட்டுக்கொண்டு குதித்துள்ளன. இதில் சுமார் 25 க்கும் அதிகமான அமைப்புக்கள் இணைந்து மாணாண சபைகளுக்கு எதிரான அமைப்பு ஒன்றை உருவாக்கியும் களத்தில் குதித்துள்ளன. இந்தக் கூட்டமைப்புக்களுக்குள் இணைந்து காணாமல் போகாமல் தனித்து நின்று தனது தனித்துவத்தைக் காண்பிப்பதற்கு விமல் வீரவன்ச மேற்கொண்டுள்ள முயற்சிகளில் ஒன்றாகத்தான் 10 இலட்சம் கையொப்பங்களைப் பெறும் அவரது திட்டம் அமைந்திருக்கின்றது எனக் கூறலாம்.

இந்த வகையில் இந்த வாரம் பத்திரிகைச் செய்திகளில் அதிகளவுக்கு இடம்பெற்றிருந்தவர் என்ற முறையில் விமல் வீரவன்சவின் அரசியல் பற்றி சற்று சுருக்கமாகப் பார்ப்போம்!

13 ஐ இல்லாதொழிப்பது என்பது சிங்கள அரசியல் தலைமைகளிடையே இன்று ஒரு போட்டியை உருவாக்கியிருக்கின்றது. இதில் யார் அதிகளவுக்கு ஸ்கோர் பெறுவது என்ற அடிப்படையில் இந்த அமைப்புக்கள் அனைத்தும் களம் இறங்கியுள்ள நிலையில், தினசரி திடுக்கிடும் திருப்பங்களுடன் அரசியல் நகர்ந்துகொண்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமய 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு தனிநபர் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்திருக்கின்றது. இதற்குப் போட்டியாகத்தான் பத்து லட்சம் கையொப்பங்களைச் சேகரிக்கும் பணியில் தமது பரிவாரங்களை இறக்கிவிட்டார் விமல் வீரவன்ச! இந்தக் கையொப்பங்களைப் பெறும் நிகழ்வு கொழும்பில் பெரும் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. இனி இதனை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

விமல் வீரவன்சவைப் பொறுத்தவரையில் அவர் ஒரு சிறந்த பேச்சாளர். தன்னுடைய பேச்சாற்றலால்தான் குறுகிய காலத்திலேயே அரசியலில் அனைவரும் திரும்பிப் பார்க்கத்தக்க ஒரு நபராக அவரால் உயர முடிந்தது. தன்னுடைய பாடசாலைக் காலத்திலேயே அரசியலில் அதிகளவு ஈடுபாட்டைக் காட்டிய விமல், பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்டவுடனேயே 1980 களில் ஜே.பி.வி.யில் இணைந்துகொண்டார். அதேவேளையில் சிறிதுகாலம் லக்பீம பத்திரிகையின் அரசியல் பத்தி எழுதுபவராகவும் இருந்துள்ளார்.

ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் பதவி குறுகியகாலத்துக்குள்ளேயே அவரைத் தேடிவருவதற்கு அவரது பேச்சாற்றல்தான் காரணமாக அமைந்திருந்தது. ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்த போது அதில் வீரவன்ச முன்னணியில் இருந்தார். 2005 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்த ஜே.வி.பி. அரசாங்கத்திலும் இணைந்துகொண்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு முழு ஆதரவை வழங்கியது.

ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு எனப் பெயர் பெற்றிருந்த ஜே.வி.பி.யில் உருவாகிய தலைமைத்துவப் பிரச்சினை காரணமாக அதிலிருந்து வெளியேறி, தனியாக தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை வீரவன்ச அமைத்து ஆளும் கூட்டணியுடன் இணைந்துகொண்டுள்ளார். ஜே.வி.பி.யின் கொள்கைகளைப் பொறுத்தவரையில் அதில் இரண்டு விடயங்கள் முக்கியமாகக் காணப்பட்டது. ஒன்று - கம்யூனிசம். இரண்டு - இனவாதம். இதில் கம்யூனிசத்தை விட்டுவிட்டு இனவாதத்தை மட்டுமே தன்னுடைய புதிய கட்சிக்கான கொள்கையாக விமல் வீரவன்ச கொண்டுவந்தார்.

சிங்கள மக்களின் இரட்சகன் என தன்னைக் காட்டிக்கொள்வதற்காக அவர் முன்னெடுத்த அரசியல் நகர்வுகள் பல. அதனால்தான் ஹெல உறுமய, பொதுபல சேனா மற்றும் ராவண சேனா போன்ற அமைப்புக்களின் அரசியலுக்கு அவரால் தாக்குப் பிடிக்க முடிகின்றது. இப்போது புதிதாக அவர் மேடையேற்றியிருப்பதுதான் 13 க்கு எதிரான போராட்டம். 13 ஐ இல்லாதொழிப்பதற்கான போராட்டத்தில் அமைச்சர் பதவியை இழக்கவும் தயார் என்பதாக அவர் காட்டிக்கொள்கின்றார். கடந்த மே தின பேரணியை ஆளும் கூட்டமைப்புடன் இணையாமல் தனியாக நடத்தியதன் மூலம் 13 ஐ ஒழிப்பதில் தன்னுடைய உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

இப்போது பத்து இலட்சம் கையொப்பங்களுடன் தன்னுடைய பலத்தை வெளிப்படுத்துவதற்கு அவர் தயாராகியிருக்கின்றார். 13 வது திருத்தத்துக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள இரண்டு திருத்தங்களும் போதுமானதல்ல என்பதுதான் அவரது கருத்து. இந்தப் போராட்டத்தில் அவர் வெற்றிபெறுவாரா? அல்லது அரசு 13 ஒழிக்கப்படாவிட்டால் அமைச்சர் பதவியைத் துறப்பாரா? அல்லது ஐ.நா. அலுவலகத்துக்கு முன்னால் அவர் நடத்திய ‘சாகும் வரை உண்ணாவிரதம்” போல இதுவும் முடிவுக்கு வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

- தவசி
தினக்குரல் (16-06-2013)

Friday, June 7, 2013

புத்தர் சிலைகள்

மட்டக்களப்பு நகர நுளைவாயிலில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு சிங்கள பௌத்த தேசியவாதிகள் மேற்கொண்ட முயற்சி மட்டக்களப்பில் பெரும் சர்ச்சையையும் பதற்ற நிலையயும் ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு எதிராக தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து புத்தர் சிலையை அமைக்கும் முயற்சிகள் நிறுத்தப்படும் என இராணுவத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இப்போது "மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் புத்தர் சிலையை வைத்தே தீருவேன்" என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் சபதமெடுத்திருக்கின்றார். சிலை வைக்கும் முயற்சியின் காரணகர்த்தா இவர்தான். தேரரின் இந்த சபதம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தியிருக்கின்றது. பதற்ற நிலை தொடர்வதற்கே இந்தச் சபதம் வழிவகுக்கும்.

புத்தர் சிலைகளுக்கோ அல்லது புத்தரின் போவனைகளுக்கோ தமிழர்கள் எதிரானவர்கள் அல்ல. தமிழர்களைப் பொறுத்தவரையில் பௌத்த மதம் நிராகரிக்கப்படவேண்டிய ஒன்றுமல்ல. தமிழர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றினார்கள் என்பதற்குச் சான்றுகளும் உள்ளன. தமிழர்கள் பலர் தமது வீடுகளில் புத்தர் சிலையை வைத்திருப்பதையும் காணலாம். ஆனால்> சிங்கள பௌத்த இனவாதிகளால் புத்தர் சிலை என்பது இன்று ஒரு ஆக்கிரமிப்பின் சின்னமாக்கப்பட்டுவிட்டது. வீதிகளில் வைக்கப்படும் புத்தர் சிலைகளை தமிழர்கள் ஆக்கிரமிபப்பின் சின்னமாகத்தான் பார்க்கின்றார்கள். இது தமது இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடலாம் என அவர்கள் அஞ்சுவதற்கு தகுந்த காரணங்கள் உள்ளன. புத்தர் சிலைகளைக் கண்டு தமிழர்கள் அச்சமடைவது அதனால்தான்.

தமிழர்கள் பாரம்பரியமாக வசித்துவரும் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கான முன்னோடிகளாக புத்தர் சிலைகளும் அரச மரங்களும்தான் உள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட பகுதி சிங்களவர்களின் பாரம்பரிய வசிப்பிடம் என பினன்னர் அடையாளப்படுத்தப்படுகின்றது. தொடர்ந்து சிங்களக் குடியேற்றம், அதற்கான பாதுகாப்பு என வரும்போது தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படுகின்றது. இவ்வாறு வடக்கு கிழக்கில் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ள அனுபவத்தின் அடிப்படையில்தான் மட்டக்களப்பு நுளைவாயிலில் புத்தர் சிலை அமைக்கப்படுவதை தமிழர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். இருந்தபோதிலும், அமைத்தே தீருவேன் என்பதில் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் உறுதியாக இருப்பது பிரச்சினை தொடரப்போகின்றது என்பதை உணர்த்துகின்றது.

இது தொடர்பாக மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் சிறுபான்மையினருக்கு அச்சத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரும் வழியை அடையாளப்படுத்துவதற்காக மட்டக்களப்பு நகர நுழைவாயில் அமைந்துள்ள பிள்ளையாரடி பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவி விளம்பர பலகை ஒன்றை போடுவதுதான் தன்னுடைய நோக்கம் என தனது செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு அவர் முனைந்திருக்கின்றார். மறுபுறத்தில் "பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்புக்கு வரும் வழியில் அனைத்து இடங்களிலும் நான் புத்தர் சிலைகளை நிறுவுவேன். நாட்டில் புத்தர் சிலைகளை நிறுவி நாட்டை பிடிக்க போகின்றோம் என்று கூறுகின்றனர். இது ஒரு பௌத்த நாடு, நாங்கள் நாட்டை பிடிக்க வேண்டிய அவசியமில்லை" எனவும் அவர் அச்சுறுத்தும் தொனியில் கூறியிருக்கின்றார்.

மங்களராமய விகாரைக்கு வரும் வழியை அடையாளப்படுத்துவதற்காகத்தான் பிள்ளையாரடியில் புத்தர் சிலையை நிறுவப்போவதாக தன்னுடைய நோக்கத்தை நியாயப்படுத்தும் அவர், பொலநவையிலிருந்து மட்டக்களப்புக்கு வரும் பாதை முழுவதும் புத்தர் சிலைகளை நிறுவப்போவதாக சபதமெடுப்பது எதற்காக? அந்தச் சபதத்தின் பின்னணியில் ஒரு ஆக்கிரமிப்பு நோக்கம் இருப்பதையே புரிந்துகொள்ள முடிகின்றது. தாம் செய்வதைத் தட்டிக்கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என அவர் நினைக்கின்றார். அத்துடன் இது ஒரு பௌத்த நாடு எனக் கூறிக்கொள்வதன் மூலம் மற்றைய மதத்தினத் அடங்கிப்போய்விட வேண்டும் என்ற கருத்தையே பிரதிபலிக்கின்றார். போருக்குப் பின்னர் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதாக அரச தரப்பில் கூறிக்கொள்ளப்படும் நிலையில், இவ்வாறான கருத்துக்கள் நல்லிணக்கம் பற்றிய கேள்விகளையே எழுப்புகின்றது.

போருக்குப் பின்னர் வடக்கு கிழக்கில் புத்தர் சிலைகள் நிறுவப்படவில்லை என மற்றொரு தேரர் சொல்லியிருக்கின்றார். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பல புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், பாரம்பரிய தமிழ்க் கிராமங்கள் பலவற்றின் பெயர்கள் சிங்களமாக்கப்பட்டிருப்பதும் அனைவருக்கும் தெரியும். யாழ்ப்பாணத்துக்கு தரைவழியாகச் செல்பவர்கள் இவற்றைத் தாரளமாகப் பார்க்கக்கூடியதாகவுமுள்ளது. இவை அனைத்தும் அரசாங்கத்தினதும், படைத் தரப்பினரதும் ஆதரவுடனேயே இடம்பெற்றிருக்கின்றன. நாட்டை சிங்கள பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகத்தான் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் தேரர் சொல்லியிருக்கும் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

போருக்குப் பின்னரான காலகட்டம் நல்லிணக்கத்துக்கான காலகட்டம் எனப் பொதுவாகக் கூறப்படுகின்றது. போரில் வெற்றிபெற்ற தரப்பே இந்த நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியவர்கள். ஆனால், போரில் தமிழர் தரப்பு தோற்கடிக்கப்பட்டுவிட்டது அவர்கள் இனிமேல் எதனையும் கேட்க முடியாது என்ற உணர்வுடனேயே சிங்களத் தரப்பு காய்களை நகர்துகின்றது. அதாவது, நாட்டை சிங்கள பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக பலவீனமான நிலையில் உள்ளவர்களை மேலும் பலவீனப்படுத்தி ஒன்றுமில்லாதவர்களாக்கும் செயற்பாடுகளே இப்போது முன்னெடுக்கப்படுகின்றது. இதில் ஒரு பகுதியாகத்தான் புத்தர் சிலைகள் திடீரென முளைக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இனங்களிடையே முரண்பாடுகளையே மேலோங்கச் செய்வதாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
 
(ஞாயிறு தினக்குரல் 02-06-2013) ஆசிரியர் தலையங'கம்)