Sunday, March 24, 2013

ஜெனீவா தீர்மானமும் இந்தியாவும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. கடந்தவருடம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக இது அமைந்திருந்தமையால் கடந்த வருடத்தில் ஆதரித்த அனைத்து நாடுகளும் இதனை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இருந்துள்ளன. மறுபுறத்தில் கடந்த வருடத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதால்தான் தற்போதைய தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக, தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதும், கடந்த வருடம் தீர்மானத்தை ஆதரித்த இந்தியா இம்முறையும் ஆதரிக்கும் என்பதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், இந்தத் தீர்மானத்தை மென்மைப்படுத்துவதில் இந்தியா செய்யப்போகும் பங்களிப்பு என்ன என்பதுதான் இறுதிவரையில் கேள்விக்குறியாக இருந்துள்ளது. தீர்மானத்தை மேலும் கடினப்படுத்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு மத்தியில் அதனை மென்மைப்படுத்துவதில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.


'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலை ஊக்குவித்தல்" என்ற பொருளில் கொண்டுவரப்பட்ட அமெரிக்காவின் பிரேரணையைப் பொறுத்தவரையில் அது குறிப்பிட்ட இலக்கில் வலுவான ஒன்றாக இல்லை. போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் நிறைவடையப்போகும் நிலையிலும் நல்லிணக்கத்துக்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. பொறுப்புக்கூறலைப் பொறுத்தவரையில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவமே விசாரணைகளை நடத்தி எதுவும் நடைபெறவில்லை என்ற முடிவைத்தான் கையளித்திருக்கின்றது. காணாமல்போனவர்கள் என்று யாரும் இல்லை என்பதுதான் இந்த இராணுவ விசாரணையின் முடிவாக அமைந்திருந்தது. இது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு முற்றிலும் முரணானதாக அமைந்திருக்கின்றது. அதேவேளையில் உள்நாட்டு விசாரணை ஒன்று இவ்வாறான பெறுபேற்றைத்தான் வெளிப்படுத்தும் என்பது எதிர்பார்க்க வேண்டிய ஒன்றுதான்.


அமெரிக்கப் பிரேரணை வலுவான ஒன்றாக அமைந்திருக்க வேண்டும் என்றே மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியிருந்தன. குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயத்தைப் பொறுத்தவரையில் சர்வதேச விசாரணை அவசியம் என்பது மனித உரிமை அமைப்புக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையிலும் இது வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனைவிட ஐ.நா.வின் விஷேட அறிக்கையாளர்கள் அனுப்பப்படுவது தொடர்பான விடயமும் பிரேரணையின் இறுதி வரைபில் நீக்கப்பட்டுவிட்டது. இவை நீக்கப்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பே காரணமாக இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடமும் இலங்கை தொடர்பான பிரேரணையை ஆதரித்த இந்தியா, அதற்கு முன்னர் பிரேரணையைப் பலவீனப்படுத்தியிருந்தது. அதேபோன்ற ஒரு செயற்பாட்டைத்தான் தற்போதும் இந்தியா மேற்கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் கவனம் செலுத்தப்பட்டதே தவிர, பிரேரணையின் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. பிரேரணையை இந்தியா ஆதரிக்குமா என்பதற்கான பதிலைக் கூறுவதில் டில்லி வேண்டுமென்றே காலத்தைக் கடத்தியது. இக்காலப்பகுதியில் பிரேரணையைப் பலவீனப்படுத்துவதில் இந்தியா வெற்றிபெற்றுவிட்டது. ஆனால் பின்னர் பிரேரணையை இந்தியா பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உச்சநிலைக்குச் சென்ற போது அதனையும் ஏற்றுக்கொள்வதாக இந்தியா கூறியது. இறுதிவேளையில் முன்வைக்கப்பட்ட இந்தத் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. பிரேரணையில் திருத்தம் ஒன்றை முன்வைப்பதாயின், அது உரிய காலத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்பதுடன், உறுப்பு நாடுகளிடம் அதற்கான ஆதரவைக்கோரி பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான கால அவகாசமும் தேவை. இது தொடர்பான இராஜதந்திர நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளாதவர்களாக இந்தியத் தரப்பு நடந்துகொண்டிருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆக, தமிழகத்தை ஏமாற்றி இலங்கை அரசைப் பாதுகாப்பதில் டில்லி வெற்றிபெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

மனித உரிமைகள் பேரவையில் கடுமையான உரை ஒன்றை நிகழ்த்துவதன் மூலம் தமிழகத்தில் உருவாகியிருந்த எதிர்ப்பலைகளைச் சமாளிக்கும் உபாயத்துடன் இந்தியா செயற்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பேரவையில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி, நம்பகரமான சுயாதீனமான விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட வேண்டும் என மட்டுமே கூறியிருந்தார். இந்திய காங்கிரஸின் தலைவி சோனியா காந்தியும் இரண்டு தினங்களுக்கு முன்னர் இதே வார்த்தைகளைத்தான் வெளிப்படுத்தியிருந்தார். ஆக, அவரது உரை டில்லியில் தயாரிக்கப்பட்டது என்பது உறுதியாகின்றது. நம்பகரமான சுயாதீன விசாரணை என்பது சர்வதேச விசாரணையைக் குறிப்பதல்ல. இந்த சுயாதீன விசாரணை என்ன என்பதை இலங்கையே தீர்மானிக்கும். அது முன்னர் இடம்பெற்றதைப்போன்ற ஒரு இராணுவ விசாரணையாகவும் இருக்கலாம். சுயாதீன விசாரணையை வலியுறுத்திய இந்தியப் பிரதிநிதி, இலங்கையுடனான உறவுகளை முறித்துக்கொள்ள முடியாது எனக்கூறி கொழும்பையும் குளிர்விக்க முயன்றுள்ளார். அதாவது, ஒரே உரையில் தமிழகத்தையும், கொழும்பையும் சாந்தப்படுத்துவது டில்லியின் நோக்கமாக இருந்துள்ளது. இலங்கை விடயத்தில் எவ்வாறான அணுகுமுறையைக் கையாள்வது என்பதில் இந்தியா தெளிவாக இருந்துள்ளது என்பதை இந்தியப் பிரதிநிதியின் உரையும், இந்தியாவின் அணுகுமுறையும் வெளிப்படுத்தியுள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரையில் தமக்கு எதிரான பிரேரணை ஒன்று சர்வதேச அரங்கில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதால் சீற்றமடைந்திருக்கின்றது. போர்க் குற்றங்களை வெளிப்படுத்தும் வகையிலான சனல்-4 வெளியிட்ட ஆவணப்படங்கள் இலங்கைக்கு சர்வதேச சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், பிரேரணை கடந்த வருடத்தைவிடவும் மென்மையானதாக இருப்பதால் பிரேரணை தொடர்பில் இலங்கை அலட்டிக் கொள்ளப்போவதில்லை. கடந்தகால வரலாறு இதனைத் தெளிவாக உணர்த்துகின்றது. ஐ.நா. செயலாளர் பான் கீ மூனுக்குக் கொடுத்த வாக்குறுதி, கடந்த வருட தீர்மானம் என்பன குப்பைக்கூடைக்குள்தான் போடப்பட்டன. அந்தக் கதிதான் தற்போதைய தீர்மானத்துக்கும் கிடைக்கும். இதனைத் தாம் முற்றாக நிராகரிப்பதாக இலங்கை தெளிவாகக் கூறிவிட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் பிரேரணை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் பெற்றுத்தரப்போவதில்லை!

No comments:

Post a Comment