தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதுள்ளதைப் போல ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பாகச் செயற்படப்போகின்றதா அல்லது அதில் பிளவு ஏற்படப்போகின்றதா என்ற கேள்விக்கு இன்னும் இரு தினங்களில் பதில் கிடைத்துவிடும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பாக ஆராய்வதற்காக கூட்டமைப்பிலுள்ள கட்சித் தலைவர்களிடையே கடந்த புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பு வழமைபோல முடிவு இன்றியே முடிவடைந்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர்களிடையே கடுமையான வாக்குவாதங்களை மட்டுமே அன்றும் கேட்க முடிந்தது. இந்த நிலையில்தான் சந்திப்பு நாளை மறுதினம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் மிகவும் முக்கியமான ஒரு தினமாக இருக்கும். ஏனெனில் அன்றைய தினம் இணக்கப்பாடு ஒன்று ஏற்படவில்லையாயின் தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் தனியாகச் செல்வதற்குத் தீர்மானித்துள்ளன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன என்பதைத் தீர்மானிக்கும் நாளாக நாளை மறுதினம் 26 ஆம் திகதி அமையப்போகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு தசாப்தகாலம் கடந்து விட்ட போதிலும்கூட, அதனைப் பதிவு செய்வதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. போர் முடிவுக்கு வந்து, அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்ற போதிலும் கூட, அவற்றை எதிர்கொள்வதற்கான கட்டமைப்புக்கள் எதுவும் கூட்டமைப்பில் இல்லை.
ஆக வெறுமனே தேர்தல்களை எதிர்கொள்வதற்கான ஒரு கூட்டமைப்பாக மட்டுமே இது இருக்கின்றது. ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக, வங்கிக் கணக்கொன்றைக் கொண்ட ஒரு கட்சியாக கூட்டமைப்பு இல்லாமையால் மக்களுக்கான ஒரு அமைப்பாக அது கட்டியெழுப்பப்படவில்லை.
2001 இல் பொதுத் தேர்தலை எதிர்கொண்ட போது விடுதலைப் புலிகளின் ஆதரவுடனேயே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மறைந்த ஊடகவியலாளர் டி.சிவராம் இதனை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ என்பற்றுடன் தமிழ்க் காங்கிரஸ+ம் இணைந்தே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் அதிலிருந்து விலகிக்கொண்டது.
இந்த நிலையில் கடந்த சுமார் 4 வருட காலமாக தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். என்பனவே கூட்டமைப்பாகச் செயற்படுகின்றன. இந்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் என்பன கடந்த வருடத்தில் இதில் இணைக்கப்பட்டன. இப்போது ஐந்து கட்சிகள் இணைந்ததாகத்தான் கூட்டமைப்பு உள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஐந்து கட்சிகளும் இணைந்துதான் எதிர்கொண்டன.
இதில் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தம்முடைய மேலாதிக்கத்துக்கு உட்பட்டதாக கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என கருதுவதுதான் இப்போதைய பிரச்சினைகளுக்குக் காரணம். உதயசூரியன் சின்னம் ஆனந்தசங்கரியுடன் சென்றுவிட்டதால் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தையே கூட்டமைப்பு தேர்தல்களுக்குப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இதனால், தமிழரசுக் கட்சி தமது மேலாதிக்கத்தைச் செலுத்துவதற்கு முற்பட்டுள்ளது. தேர்தல்களுக்கு கூட்டமைப்பு என்ற பெயரைப்பயன்படுத்துவதும், பின்னர் தமிழரசுக்கட்சியை வளர்ப்பதும்தான் இவர்களது நோக்கமாகவுள்ளது என மற்றைய 4 கட்சிகளும் குற்றஞ்சாட்டுகின்றன.
தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் தலைமைத்துவக் குழு ஒன்றை அமைப்பது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளன. இந்தக்குழுவே கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்கக்கூடிய தலைமைக்குழுவாக இருக்கும். இக்குழுவுக்கு ஐந்து கட்சிகளின் சார்பாகவும் சம பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் 4 கட்சிகளினதும் நிலைப்பாடு. இதனை கொள்ளையளவில் முதலில் ஏற்றுக்கொண்ட தமிழரசுக்கட்சி, இப்போது தலைமைக்குழுவில் தமக்குப் பெரும்பான்மை வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில்தான் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் முடிவு இன்றி முடிந்தது.
தலைமைக்குழுவில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இடம்பெற வேண்டும் என்பதுடன், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சலருக்கும் அதில் இடமளிக்கப்பட வேண்டும் எனவும் தமிழரசுக்கட்சி கேட்டதாகத் தெரிகின்றது. தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் என எட்டு பேருடைய பெயர்களை அவர்கள் குறிப்பிட்டதாகவும் தெரிகின்றது. ஆனால், கூட்டமைப்பு எம்.பி.க்களாக உள்ளவர்களில் மூன்று பேர் மட்டுமே தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனவும், மற்றையவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நேரடியாக வந்து இணைந்தவர்கள் எனவும் மற்றைய கட்சிகளின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. கூட்டமைப்பில் எம்.பி.யாக வந்த பின்னரே அவர்கள் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களாக்கப்பட்டனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பான வாக்குவாதங்கள் உச்ச கட்டத்தையடைய எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. அன்றைய தினத்தில் இது தொடர்பில் தமது தெளிவான பதிலை தமிழரசுக் கட்சி தெரிவிக்க வேண்டும் என மற்றைய கட்சியினர் கேட்டுள்ளார்கள். இல்லையெனில் தனியான ஒரு கட்டமைப்பை உருவாக்கி கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கலாம் எனத் தெரிகின்றது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பமாகியிருப்பதாகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் கூட்டமைப்பை பதிவு செய்து அதற்கான கட்டமைப்புக்களை உருவாக்குகின்றோம். நீங்களும் விரும்பினால் வந்து இணைந்துகொள்ளலாம் என்ற செய்தியை தமிழரசுக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு நான்கு கட்சிகளும் தனியாகச் செல்லலாம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், அதற்கான தேர்தல் நடைபெறும் வரையில் புதிய கட்சிகளைப் பதிவு செய்ய முடியாத ஒரு நிலை தற்போதுள்ளது. ஆனால், பல கட்சிகள் இணைந்த கூட்டமைப்பு ஒன்றைப் பதிவு செய்ய முடியும் என்பதுடன், ஒரு கட்சியின் பெயரை மாற்றிகொண்டு செயற்பட முடியும். இது தொடர்பில் குறிப்பிட்ட நான்கு கட்சிகளின் பிரமுகர் ஒருவர் தேர்தல்கள் செயலகத்துக்குச் சென்று பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.
அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இதில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிகின்றது. இது தொடர்பில் ஏற்கனவே பேச்சுக்கள் இடம்பெற்றிருப்பதை இரு தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. முதலில் நீங்கள் பதிவைச் செய்யுங்கள். அடுத்த கட்டமாக இணைந்து செயற்படுவது தொடர்பாக நாம் ஆராய்ந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம் என கஜேந்திரகுமார் கூறியிருப்பதாகத் தெரிகின்றது.
26 ஆம் திகதிக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சி எவ்வாறான முடிவை வெளியிடப்போகின்றது என்பதிலேயே இதன் அடுத்த கட்ட நகர்வுகள் தங்கியிருக்கின்றன. வடமாகாண சபைக்கான தேர்தலும் நெருங்கிக்கொண்டுள்ள நிலையில், கூட்டமைப்பு பலமான ஒரு சக்தியாக வெளிப்பட வேண்டும் என்பதைத்தான் தமிழர்கள் விரும்புகின்றார்கள். பிளவு ஒன்று உருவானால், அது தேர்தலில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டு தலைவர்கள் செயற்படுவார்கள் என நம்புவோம்!
No comments:
Post a Comment