Wednesday, March 20, 2013

வீடுகளை அழிக்க தயாராக புல்டோசர்கள்: போராடத் தயாராக முள்ளியவளை மக்கள்!!

போர் இடம்பெற்ற போது ஆட்டிலறி ஷெல்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் துரத்த வீடு வாசல்களை இழந்து ஓடினார்கள் வன்னி மக்கள்..

இப்போது போரும் இல்லை.. ஆட்டிலறி ஷெல்களும் இல்லை....

"சமாதானம் ஏற்பட்டுவிட்டது. இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றிவிட்டோம். நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திவிட்டோம்" என ஜெனீவாவில் உலக நாடுகளின் முன்பாக இலங்கை அரசாங்கம் கற்பூரம் கொழுத்திச் சத்தியம் செய்கின்றது.

ஆனால், கள நிலைமைதான் என்ன?

புல்டோசர்கள் தயாராக நிற்கின்றன...வீடுகளையும் உடைமைகளையும் அப்படியே கைவிட்டுவிட்டு ஓடுவதற்குத் தயாராகியிருக்கின்றார்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை மக்கள்!

போரின் முடிவு என்பது தமிழர்களின் அவல வாழ்க்கைக்கான முடிவாக அமைந்துவிடவில்லை என்பதை கடந்த சில வாரகாலமாக முள்ளியவளையில் இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.

40 வருடகாலமாக முள்ளியவளையில் வாழும் தமிழ் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவமும் வனபரிபாலன சபை அதிகாரிகளும் கொடுக்கும் அழுத்தங்களால் அடுத்தது என்ன என்ற கேள்விக்குறியுடன் வாழ்கின்றார்கள் அங்குள்ள மக்கள். இந்தப் பகுதியில் இரண்டு திட்டங்களுடன் அரசு செயற்படுகின்றது.

1. முள்ளியவளை மத்திய பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐந்து ஏக்கர் காணி அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது. இந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். அதற்காக பலாத்காரத்தையும் பயன்படுத்த அரச தரப்பு தயாராகவுள்ளது.

2. முள்ளியவளை மத்திய பகுதியில் காடுகளைச் சுத்தப்படுத்தி பாரிய முஸ்லிம் குடியேற்றம் ஒன்றுக்குத் திட்டமிடப்படுகின்றது. இதற்காக காடுகளை அழித்து புதிய குடியேற்றத்தை அமைக்கும் போது இப்போது தமிழர்கள் வசிக்கும் பகுதியையும் அதனுடன் உள்ளடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்க் கிராமவாசிகளை அங்கிருந்து அகற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

முள்ளியவளையிலுள்ள தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பங்களைப் பராமரித்துவரும் இந்தக் கிராம மக்கள் இறுதிவரையில் போராடுவதற்குத் தீர்மானித்துவிட்டார்கள். ஆனால், ஒருபுறம் இராணுவமும் மறுபுறத்தில் வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகளும் கொடுத்துவரும் அழுத்தங்களால், மக்கள் நிம்மதி இழந்துவிட்டார்கள். எந்தநேரமும் தயாராக நிற்கும் புல்டோசர்கள் வீடுகளை அழிக்கப் புறப்படலாம் என்ற அச்சத்துடன் வாழும் மக்கள் அதனை எதிர்கொள்வதற்கும் தயாராகத்தான் உள்ளனர்.

இந்த நிலையில்தான் இவ்வார ஆரம்பத்தில் இந்தக் கிராமத்துக்குள் புகுந்த வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் ஆறு குடும்பஸ்த்தர்களைக் கைது செய்து கொண்டு சென்றிருக்கின்றார்கள். இவர்கள் இரண்டுவார விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய குடும்பஸ்த்தர்களும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் இங்கு பெரும் பீதி காணப்படுகின்றது. படையினரையோ வன திணைக்கள் அதிகாரிகளையோ கண்டால் காடுகளுக்குள் ஒழித்துவிடும் நிலையிலேயே குடும்பஸ்த்தர்கள் உள்ளனர்.

1972 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் காடுகளை வெட்டி குடியிருப்புக்களை அமைத்த இந்தக் கிராம மக்கள் இறுதிக்கட்டப் போரின் போது அனைத்தையும் இழந்து மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்திருந்தார்கள். பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் விடுவிக்கப்பட்ட இவர்கள், வீடுகளை அமைப்பதற்கோ வாழ்வாதாரங்களைப் பெறுவதற்கோ வசதியில்லாத நிலையில் தமது உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களிலேயே தங்கியிருந்தனர்.

தற்போது தமக்குக் கிடைத்த குறைந்த பட்ச வசதிகளுடன் சிறிய சிறிய கொட்டில்களை அமைத்து அங்கு குடியிருக்க மக்கள் முற்பட்டுள்ள நிலையில்தான் இராணுவத்தினர் அங்கு முகாம் அமைப்பதற்கு 5 ஏக்கர் காணி வேண்டும் எனக் கேட்டு வற்புறுத்தத் தொடங்கியிருப்பதாக நேரில் நிலைமைகளைப் பார்வையிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தினக்குரலுக்குத் தெரிவித்தார். இதனால் மக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இப்பகுதி மக்கள் தமக்குரிய குடில்களை அமைப்பதற்குத் தேவையான கிடுகுகளையும் தடிகளையும் பெற்றுக்கொள்வதற்குக்கூட முடியாதவர்களாக உள்ளனர். அரசாங்கத்தினால் இவர்களுடைய மீள்குடியேற்றத்துக்காக எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை. போரின் போது அனைத்தையும் இழந்த இவர்களுக்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தில் கூட உதவி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 40 வருட காலமாக வசித்துவரும் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேற முடியாது எனத் தெரிவித்துள்ள மக்கள் தமது நிலங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக போராடவும் தயாராகவிருப்பதாக இருக்கின்றார்கள்.

வன்னியைப் பொறுத்தவரையில் காடுகளை வெட்டி குடியிருப்புக்களை அமைத்துக்கொள்வது என்பது மிகவும் கடினமானது. 1972 ஆம் ஆண்டளவில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பொருளாhர நெருக்கடியின்போதுதான் வன்னியில் காடுகளை வெட்டி பெருமளவு மக்கள் குடியேறினார்கள். மிகவும் வரண்ட பகுதியான வன்னியில் இவ்வாறான குடியிருப்புக்களை அமைப்பதிலுள்ள சிரமம் சொல்லித் தெரிய வேண்டியதல்ல.

இவ்வாறு காடுகளை வெட்டிக்குடியேறுபவர்கள் தாம் குடியிருக்கும் காணிகளை சொந்தமாக்கிக் கொள்வது வன்னியில் காணப்படும் ஒரு வழமை. இவற்றுக்கு பின்னர் பெர்மிட்ட வழங்கப்படுவதும் உண்டு.

இவ்வாறு கடந்த 40 வருடமாக வாழ்ந்தவர்கள்தான் முள்ளியவளை மக்கள். தமது வியர்வையாலும், இரத்தத்தாலும் தாம் வளப்படுத்திய மண்ணைவிட்டு வெளியேற இன்று நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுடைய பிரச்சினை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அப்பகுதிக்கு அடிக்கடி சென்று வந்துள்ள வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தனிடம் கேட்டோம். முள்ளியவளைக்கு நேரில் சென்று வன பரிபாலன திணைக்கள அதிகாரிகளுடனும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகத்துடனும் கடுமையாக முரண்பட்ட சிவசக்தி முள்ளியவளை நிலை தொடர்பில் கடுமையாகச் சீற்றமடைந்தவராகக் காணப்பட்டார்.

'முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு முதல் கொக்கிளாய் வரையிலான பகுதிகளில் காடு அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை அனைத்தும் இராணுவ ஆதரவுடன், அரச உயர் மட்டத்தின் அங்கீகாரத்துடன் இடம்பெறுகின்றது|| எனச் சுட்டிக்காட்டிய சிவசக்தி ஆனந்தன், 40 வருடங்களின் முன்னர் முள்ளியவளையில் குடியேறிய மக்களை மட்டும் அது வனபரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமான காணி எனக் கூறி வெளியேற்றுவதில் என்ன நியாயம் இருக்கின்றது? எனக் கேள்வி எழுப்பினார்.

முள்ளியவளை கிராமத்துக்கு வந்திருந்த வன பரிபாலன திணைக்கள அதிகாரிகளிடமும் இதேகேள்வியை அவர் கேட்ட போது அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. மேலிடத்து உத்தரவு நாம் செய்கின்றோம் என மட்டுமே அதிகாரிகள் பதிலளித்தார்கள்.

இக்கிராமத்தின் குடும்பத் தலைவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர்களுடைய குடும்பத்தவர்கள் வீதியில் நிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கைதான குடும்பஸ்த்தர் ஒருவரின் மனைவி இது தொடர்பாக தான் முள்ளியவளை சென்றபோது நேரில் வந்து முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்த அவர், இவர்கள் அனைவரும் அடுத்த வேளை உணவுக்கே கூலி வேலை செய்து உழைப்பவர்களாக இருப்பதால், கைதானவர்களின் குடும்பங்கள் பெரும் நெருக்கடிக்குள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகத்துக்கு தான் பலதடவை தெரியப்படுத்தியபோதிலும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டினார். முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தளபதி மார்க்குடன் இது தொடர்பில் தான் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக இதன்போது வேதநாயகம் உறுதியளித்திருக்கின்றார். இராணுவத்தினர் தமக்கு முகாம் அமைக்க இடம் தேவை எனில் மக்கள் வசிக்காத பகுதிகளில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசாங்க அதிபர் முதலில் தெரிவித்திருக்கின்றார். ஆனால், இது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை.

முள்ளியவளை மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டால், அந்த மக்கள் அரசாங்க அதிபரின் செயலகத்தில்தான் வந்து தஞ்சமடைய நேரிடும் எனவும் ஆனந்தன் எச்சரித்திருப்பதாகத் தெரிகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்கள் பலவும் இவ்விடயத்தில் அரசாங்க அதிபரின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளன. அவர் அரசாங்கத்துக்கு விசுவாசமான ஒரு அதிபராகச் செயற்பட முற்பட முற்படுகின்றாரே தவிர, மக்களுடைய பிரச்சினைகளை முன்னெடுக்கும் ஒருவராகச் செயற்படுவதாகத் தெரியவில்லை என பொது அமைப்பு ஒன்றின் பிரதிநிதி குற்றஞ்சாட்டியிருக்கின்றார். அவருடைய மட்டத்திலேயே இந்தப் பிரச்சினையை அவர் தீர்த்துவைத்திருக்க முடியும். குடியிருப்பாளர்களை வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் கைது செய்துகொண்டு சென்றுள்ள போதிலும், அரச அதிபர் மௌனமாகவே இருப்பதாகக் கூறும் அவர், இவ்விடயத்தில் மாவட்ட அரசாங்கப் பிரதிநிதி என்ற முறையில் அரச அதிபர் கடுமையாக நடந்துகொண்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் ஆராயப்பட்டுவரும் நிலையில்தான் இவை அனைத்தும் நடைபெறுகின்றன. இது முள்ளிவளையுடன் மட்டும் நின்றுவிடப்போவதில்லை. அதனையும் தாண்டியும்  செல்லப்போகின்றது. ஜெனீவாவினால் இதனைத் தடுத்துவிட முடியாது. இறுதிவரை போராடுவதற்கு முள்ளியவளை மக்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், பல்வேறு பக்கங்களாலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ள இந்த மக்களால் எந்தளவுக்குத்தான் பலமாக எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும்?

- பார்ர்தீபன். (ஞாயிறு தினக்குரல்)

No comments:

Post a Comment