Wednesday, March 27, 2013

கண்டனமா? கண்துடைப்பா?

நெடுமாறன் எழுதுகிறார்
'தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்​தினரைத் திரும்பப் பெற வேண்டும்; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ - இப்படி முக்கியமான கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் நவநீதம் பிள்ளை, ஜெனிவாவில் கூடிய கூட்டத்தில் 38 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக முன்​வைத்தார். இந்தச் செய்தி வெளியானபோது உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.

அந்த அறிக்கையில் வேறு முக்கியமான அம்சங்கள் என்ன இருந்தது தெரியுமா?

இலங்கையில் போர் நடைபெற்ற வேளையில் வயதானவர்களும் சிறுமிகளுமாக ஆயிரக்கணக்கான​வர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையையும் இலங்கை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் போருக்குப் பிறகும் ஆள் கடத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவில் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகி​றார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் தமிழ்ப் பெண்களுக்கு பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது.

போருக்குப் பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்தல் போன்​றவை நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல்திட்டத்திலும் அவை புறக்​கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசா​ரணை நடத்துவதாகக் கூறிய இலங்கை அரசு முழுமையான விசாரணை எதுவும் நடத்தவில்லை. இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தும் பணியையும் செவ்வனே செய்ய​வில்லை. 2006-ம் ஆண்டு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. சிறுபான்மையினரான தமிழர்​களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணு​வத்தினரைத் திரும்பப் பெறவேண்டும். இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்​கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.

ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டது.

அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் ஆணையரால் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஆலோசனைகள் இடம்பெறவில்லை. நீர்த்துப்போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. இதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தது.

அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் இதுதான்... 'இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின்போது தமிழர்கள் பலர் காணாமல்போனது கவலை அளிக்கிறது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை முழுமை​யாக நிறைவேற்றும் திட்டம் இலங்​கைக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாகச் செய்யப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.’ - இவைதான் அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம்சம்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவது குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்கத் தீர்மானம் புறந்தள்ளிவிட்டதுடன், அதற்கு எதிராகவும் அமைந்துவிட்டது.

அமெரிக்கத் தீர்மானம் போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை என்பதை ஏற்கவில்லை. மாறாக இலங்கையே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறது.

இலங்கையின் வடக்கு மாநிலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மனித உரிமைகளும் நிலை​நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறதே தவிர, கிழக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் கிழக்கு மாநிலம் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என மறைமுகமாக அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.

வடக்கு மாநிலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுவது கொடுமையான வேடிக்கை. ஏனெனில் வடக்கு மாநிலத்தில் வாழ்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள். தமிழர் பகுதிகளில் வேகமாகவும் தங்குதடையில்லாமலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. வடக்குப் பகுதி ராணுவமயமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரமான தேர்தல் எப்படிச் சாத்தியமாகும்? ஒரு போலியான தேர்தலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு அமெரிக்கத் தீர்மானம் உதவுகிறது.

வெற்று வாக்குறுதிகள் நிறைந்த இந்தத் தீர்மானத்​தில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு சிங்கள அரசுக்கு ஓர் ஆண்டு கால அவகாசத்தை அமெரிக்கத் தீர்மானம் அளித்திருப்பது அவல நகைச்சுவையின் உச்சக்கட்டம். கடந்த ஆண்டு நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதைப் போல ஓர் ஆண்டு கால அவகாசம் சிங்கள அரசுக்கு அளிக்கப்பட்டபோது எத்தகைய நிவாரண நடவடிக்கைகளும் அங்கு நடைபெற​வில்லை.

கடந்த ஆண்டு இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் மேலும் மேலும் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்​பட்டனவே தவிர, நிலைமை சிறிதளவுகூட மாறவில்லை. இப்போது இன்னும் ஓர் ஆண்டு கால அவகாசம் அளிப்பது எஞ்சியுள்ள தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதற்கே உதவும். அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என அழைப்பது மிகத் தவறானதாகும். உலகக் கண்டனத்தில் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் தீர்மானமே அது.

அமெரிக்கத் தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் பங்கு என்பது சூழ்ச்சிகர​மானது. தான் நேரடியாக சம்பந்தப்படாமல் பின்னணியில் இருந்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் தீர்மானத்தை வடிவமைத்தது இந்தியாதான். இலங்கைப் பிரச்னை சம்பந்தமாக இலங்கை அரசுடன் பேசுவதற்கு வழக்கமாக அனுப்பப்படும் பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர​மேனன் இம்முறை அனுப்பப்படவில்லை. மாறாக அரசாங்கத்துடனோ காங்கிரஸ் கட்சியுடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத சுப்பிரமணியன் சுவாமியை, இந்திய அரசு தனது தூதுவராக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியது. அவர் சென்று இந்தியாவின் கருத்தோட்டத்துக்கு ஏற்ப அமெரிக்கா தனது தீர்மானத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தார். சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனி நபர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசிய விவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஒரு தனி நபருக்கு இவ்வளவு செல்வாக்கு அரசு வட்டாரங்களில் இருக்க முடியாது. இந்தியாவின் சார்பில் அவர் சென்றார் என்பதினால்தான் அவரைச் சந்தித்துப் பேச, இலங்கை, அமெரிக்க அரசு உயர் மட்டத்தினர் முன்வந்தனர்.

அது மட்டுமா? நாடாளுமன்றத்தில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் மாறிவிட்டனர். இதற்குப் பின்னணி என்ன? இந்தியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கும் பிரசாத் கரியவாசம், முலாயம் சிங் மற்றும் பல்வேறு வட மாநில முதல்வர்களை எல்லாம் சந்தித்துப் பேசி சிங்கள அரசின் நிலைக்கு ஆதரவாக அவர்களை மாற்றியிருக்கிறார். வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் டெல்லியைவிட்டு வெளியேச் செல்ல வேண்டுமானால்கூட இந்திய அரசின் அனுமதி தேவை. மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதற்கும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆக, இந்திய அரசுதான் அவருக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி, எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சந்தித்துப் பேசச் செய்திருக்கிறது.

ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கடும் எதிர்ப்பும், இதுவரை கூட்டணிக் கட்சியாக இருந்த தி.மு.க. வெளியேறியதும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைப்போல, உதட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமெரிக்காவும் இந்தப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி சீனாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறது.

இலங்கையிலும், குறிப்பாக இந்துமாக்​கடலிலும் சீனாவின் ஆதிக்கம்  ஏற்படுவது தன்னுடைய உலகளாவிய நலன்களுக்கு எதிரானது என அமெரிக்கா கருதுகிறது. இந்தியாவும் தனது தென்னாசிய நலன்​களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலையீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ராஜபக்ஷே அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றே அவர்களது நோக்கம். ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக் கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கி​யமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.

ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து எவ்வளவோ உண்மைகளை வெளிப்படுத்தியும்கூட, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் அரசியல், பொரு​ளாதார நலன்களை மட்டுமே மனதில்கொண்டு ராஜபக்ஷேவின் ரத்த வெறிக்கு ஈழத் தமிழர்களைக் காவு கொடுக்கத் துணிந்துவிட்டன என்பதைத்தான் அமெரிக்கத் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.

எனவே, இது கண்டனத் தீர்மானம் அல்ல... கண்துடைப்புத் தீர்மானம்!

(ஜ+னியர் விகடன்)

Sunday, March 24, 2013

கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? தீர்மானிக்கப்போகும் மார்ச் 26!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதுள்ளதைப் போல ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பாகச் செயற்படப்போகின்றதா அல்லது அதில் பிளவு ஏற்படப்போகின்றதா என்ற கேள்விக்கு இன்னும் இரு தினங்களில் பதில் கிடைத்துவிடும்.

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பாக ஆராய்வதற்காக கூட்டமைப்பிலுள்ள கட்சித் தலைவர்களிடையே கடந்த புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பு வழமைபோல முடிவு இன்றியே முடிவடைந்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர்களிடையே கடுமையான வாக்குவாதங்களை மட்டுமே அன்றும் கேட்க முடிந்தது. இந்த நிலையில்தான் சந்திப்பு நாளை மறுதினம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் மிகவும் முக்கியமான ஒரு தினமாக இருக்கும். ஏனெனில் அன்றைய தினம் இணக்கப்பாடு ஒன்று ஏற்படவில்லையாயின் தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் தனியாகச் செல்வதற்குத் தீர்மானித்துள்ளன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன என்பதைத் தீர்மானிக்கும் நாளாக நாளை மறுதினம் 26 ஆம் திகதி அமையப்போகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு தசாப்தகாலம் கடந்து விட்ட போதிலும்கூட, அதனைப் பதிவு செய்வதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. போர் முடிவுக்கு வந்து, அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்ற போதிலும் கூட, அவற்றை எதிர்கொள்வதற்கான கட்டமைப்புக்கள் எதுவும் கூட்டமைப்பில் இல்லை.

ஆக வெறுமனே தேர்தல்களை எதிர்கொள்வதற்கான ஒரு கூட்டமைப்பாக மட்டுமே இது இருக்கின்றது. ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக, வங்கிக் கணக்கொன்றைக் கொண்ட ஒரு கட்சியாக கூட்டமைப்பு இல்லாமையால் மக்களுக்கான ஒரு அமைப்பாக அது கட்டியெழுப்பப்படவில்லை.

2001 இல் பொதுத் தேர்தலை எதிர்கொண்ட போது விடுதலைப் புலிகளின் ஆதரவுடனேயே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மறைந்த ஊடகவியலாளர் டி.சிவராம் இதனை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி, .பி.ஆர்.எல்.எப்., ரெலோ என்பற்றுடன் தமிழ்க் காங்கிரஸ+ம் இணைந்தே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் அதிலிருந்து விலகிக்கொண்டது.

இந்த நிலையில் கடந்த சுமார் 4 வருட காலமாக தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் .பி.ஆர்.எல்.எப். என்பனவே கூட்டமைப்பாகச் செயற்படுகின்றன. இந்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் என்பன கடந்த வருடத்தில் இதில் இணைக்கப்பட்டன. இப்போது ஐந்து கட்சிகள் இணைந்ததாகத்தான் கூட்டமைப்பு உள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஐந்து கட்சிகளும் இணைந்துதான் எதிர்கொண்டன

இதில் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தம்முடைய மேலாதிக்கத்துக்கு உட்பட்டதாக கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என கருதுவதுதான் இப்போதைய பிரச்சினைகளுக்குக் காரணம். உதயசூரியன் சின்னம் ஆனந்தசங்கரியுடன் சென்றுவிட்டதால் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தையே கூட்டமைப்பு தேர்தல்களுக்குப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இதனால், தமிழரசுக் கட்சி தமது மேலாதிக்கத்தைச் செலுத்துவதற்கு முற்பட்டுள்ளது. தேர்தல்களுக்கு கூட்டமைப்பு என்ற பெயரைப்பயன்படுத்துவதும், பின்னர் தமிழரசுக்கட்சியை வளர்ப்பதும்தான் இவர்களது நோக்கமாகவுள்ளது என மற்றைய 4 கட்சிகளும் குற்றஞ்சாட்டுகின்றன.

தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் தலைமைத்துவக் குழு ஒன்றை அமைப்பது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளன. இந்தக்குழுவே கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்கக்கூடிய தலைமைக்குழுவாக இருக்கும். இக்குழுவுக்கு ஐந்து கட்சிகளின் சார்பாகவும் சம பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் 4 கட்சிகளினதும் நிலைப்பாடு. இதனை கொள்ளையளவில் முதலில் ஏற்றுக்கொண்ட தமிழரசுக்கட்சி, இப்போது தலைமைக்குழுவில் தமக்குப் பெரும்பான்மை வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில்தான் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் முடிவு இன்றி முடிந்தது.

தலைமைக்குழுவில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இடம்பெற வேண்டும் என்பதுடன், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சலருக்கும் அதில் இடமளிக்கப்பட வேண்டும் எனவும் தமிழரசுக்கட்சி கேட்டதாகத் தெரிகின்றது. தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் என எட்டு பேருடைய பெயர்களை அவர்கள் குறிப்பிட்டதாகவும் தெரிகின்றது. ஆனால், கூட்டமைப்பு எம்.பி.க்களாக உள்ளவர்களில் மூன்று பேர் மட்டுமே தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனவும், மற்றையவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நேரடியாக வந்து இணைந்தவர்கள் எனவும் மற்றைய கட்சிகளின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. கூட்டமைப்பில் எம்.பி.யாக வந்த பின்னரே அவர்கள் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களாக்கப்பட்டனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பான வாக்குவாதங்கள் உச்ச கட்டத்தையடைய எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. அன்றைய தினத்தில் இது தொடர்பில் தமது தெளிவான பதிலை தமிழரசுக் கட்சி தெரிவிக்க வேண்டும் என மற்றைய கட்சியினர் கேட்டுள்ளார்கள். இல்லையெனில் தனியான ஒரு கட்டமைப்பை உருவாக்கி கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கலாம் எனத் தெரிகின்றது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பமாகியிருப்பதாகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் கூட்டமைப்பை பதிவு செய்து அதற்கான கட்டமைப்புக்களை உருவாக்குகின்றோம். நீங்களும் விரும்பினால் வந்து இணைந்துகொள்ளலாம் என்ற செய்தியை தமிழரசுக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு நான்கு கட்சிகளும் தனியாகச் செல்லலாம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், அதற்கான தேர்தல் நடைபெறும் வரையில் புதிய கட்சிகளைப் பதிவு செய்ய முடியாத ஒரு நிலை தற்போதுள்ளது. ஆனால், பல கட்சிகள் இணைந்த கூட்டமைப்பு ஒன்றைப் பதிவு செய்ய முடியும் என்பதுடன், ஒரு கட்சியின் பெயரை மாற்றிகொண்டு செயற்பட முடியும். இது தொடர்பில் குறிப்பிட்ட நான்கு கட்சிகளின் பிரமுகர் ஒருவர் தேர்தல்கள் செயலகத்துக்குச் சென்று பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இதில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிகின்றது. இது தொடர்பில் ஏற்கனவே பேச்சுக்கள் இடம்பெற்றிருப்பதை இரு தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. முதலில் நீங்கள் பதிவைச் செய்யுங்கள். அடுத்த கட்டமாக இணைந்து செயற்படுவது தொடர்பாக நாம் ஆராய்ந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம் என கஜேந்திரகுமார் கூறியிருப்பதாகத் தெரிகின்றது.

26 ஆம் திகதிக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சி எவ்வாறான முடிவை வெளியிடப்போகின்றது என்பதிலேயே இதன் அடுத்த கட்ட நகர்வுகள் தங்கியிருக்கின்றன. வடமாகாண சபைக்கான தேர்தலும் நெருங்கிக்கொண்டுள்ள நிலையில், கூட்டமைப்பு பலமான ஒரு சக்தியாக வெளிப்பட வேண்டும் என்பதைத்தான் தமிழர்கள் விரும்புகின்றார்கள். பிளவு ஒன்று உருவானால், அது தேர்தலில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டு தலைவர்கள் செயற்படுவார்கள் என நம்புவோம்!

ஜெனீவா தீர்மானமும் இந்தியாவும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. கடந்தவருடம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக இது அமைந்திருந்தமையால் கடந்த வருடத்தில் ஆதரித்த அனைத்து நாடுகளும் இதனை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இருந்துள்ளன. மறுபுறத்தில் கடந்த வருடத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதால்தான் தற்போதைய தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக, தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதும், கடந்த வருடம் தீர்மானத்தை ஆதரித்த இந்தியா இம்முறையும் ஆதரிக்கும் என்பதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், இந்தத் தீர்மானத்தை மென்மைப்படுத்துவதில் இந்தியா செய்யப்போகும் பங்களிப்பு என்ன என்பதுதான் இறுதிவரையில் கேள்விக்குறியாக இருந்துள்ளது. தீர்மானத்தை மேலும் கடினப்படுத்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு மத்தியில் அதனை மென்மைப்படுத்துவதில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.


'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலை ஊக்குவித்தல்" என்ற பொருளில் கொண்டுவரப்பட்ட அமெரிக்காவின் பிரேரணையைப் பொறுத்தவரையில் அது குறிப்பிட்ட இலக்கில் வலுவான ஒன்றாக இல்லை. போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் நிறைவடையப்போகும் நிலையிலும் நல்லிணக்கத்துக்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. பொறுப்புக்கூறலைப் பொறுத்தவரையில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவமே விசாரணைகளை நடத்தி எதுவும் நடைபெறவில்லை என்ற முடிவைத்தான் கையளித்திருக்கின்றது. காணாமல்போனவர்கள் என்று யாரும் இல்லை என்பதுதான் இந்த இராணுவ விசாரணையின் முடிவாக அமைந்திருந்தது. இது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு முற்றிலும் முரணானதாக அமைந்திருக்கின்றது. அதேவேளையில் உள்நாட்டு விசாரணை ஒன்று இவ்வாறான பெறுபேற்றைத்தான் வெளிப்படுத்தும் என்பது எதிர்பார்க்க வேண்டிய ஒன்றுதான்.


அமெரிக்கப் பிரேரணை வலுவான ஒன்றாக அமைந்திருக்க வேண்டும் என்றே மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியிருந்தன. குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயத்தைப் பொறுத்தவரையில் சர்வதேச விசாரணை அவசியம் என்பது மனித உரிமை அமைப்புக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையிலும் இது வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனைவிட ஐ.நா.வின் விஷேட அறிக்கையாளர்கள் அனுப்பப்படுவது தொடர்பான விடயமும் பிரேரணையின் இறுதி வரைபில் நீக்கப்பட்டுவிட்டது. இவை நீக்கப்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பே காரணமாக இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடமும் இலங்கை தொடர்பான பிரேரணையை ஆதரித்த இந்தியா, அதற்கு முன்னர் பிரேரணையைப் பலவீனப்படுத்தியிருந்தது. அதேபோன்ற ஒரு செயற்பாட்டைத்தான் தற்போதும் இந்தியா மேற்கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் கவனம் செலுத்தப்பட்டதே தவிர, பிரேரணையின் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. பிரேரணையை இந்தியா ஆதரிக்குமா என்பதற்கான பதிலைக் கூறுவதில் டில்லி வேண்டுமென்றே காலத்தைக் கடத்தியது. இக்காலப்பகுதியில் பிரேரணையைப் பலவீனப்படுத்துவதில் இந்தியா வெற்றிபெற்றுவிட்டது. ஆனால் பின்னர் பிரேரணையை இந்தியா பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உச்சநிலைக்குச் சென்ற போது அதனையும் ஏற்றுக்கொள்வதாக இந்தியா கூறியது. இறுதிவேளையில் முன்வைக்கப்பட்ட இந்தத் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. பிரேரணையில் திருத்தம் ஒன்றை முன்வைப்பதாயின், அது உரிய காலத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்பதுடன், உறுப்பு நாடுகளிடம் அதற்கான ஆதரவைக்கோரி பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான கால அவகாசமும் தேவை. இது தொடர்பான இராஜதந்திர நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளாதவர்களாக இந்தியத் தரப்பு நடந்துகொண்டிருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆக, தமிழகத்தை ஏமாற்றி இலங்கை அரசைப் பாதுகாப்பதில் டில்லி வெற்றிபெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

மனித உரிமைகள் பேரவையில் கடுமையான உரை ஒன்றை நிகழ்த்துவதன் மூலம் தமிழகத்தில் உருவாகியிருந்த எதிர்ப்பலைகளைச் சமாளிக்கும் உபாயத்துடன் இந்தியா செயற்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பேரவையில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி, நம்பகரமான சுயாதீனமான விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட வேண்டும் என மட்டுமே கூறியிருந்தார். இந்திய காங்கிரஸின் தலைவி சோனியா காந்தியும் இரண்டு தினங்களுக்கு முன்னர் இதே வார்த்தைகளைத்தான் வெளிப்படுத்தியிருந்தார். ஆக, அவரது உரை டில்லியில் தயாரிக்கப்பட்டது என்பது உறுதியாகின்றது. நம்பகரமான சுயாதீன விசாரணை என்பது சர்வதேச விசாரணையைக் குறிப்பதல்ல. இந்த சுயாதீன விசாரணை என்ன என்பதை இலங்கையே தீர்மானிக்கும். அது முன்னர் இடம்பெற்றதைப்போன்ற ஒரு இராணுவ விசாரணையாகவும் இருக்கலாம். சுயாதீன விசாரணையை வலியுறுத்திய இந்தியப் பிரதிநிதி, இலங்கையுடனான உறவுகளை முறித்துக்கொள்ள முடியாது எனக்கூறி கொழும்பையும் குளிர்விக்க முயன்றுள்ளார். அதாவது, ஒரே உரையில் தமிழகத்தையும், கொழும்பையும் சாந்தப்படுத்துவது டில்லியின் நோக்கமாக இருந்துள்ளது. இலங்கை விடயத்தில் எவ்வாறான அணுகுமுறையைக் கையாள்வது என்பதில் இந்தியா தெளிவாக இருந்துள்ளது என்பதை இந்தியப் பிரதிநிதியின் உரையும், இந்தியாவின் அணுகுமுறையும் வெளிப்படுத்தியுள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரையில் தமக்கு எதிரான பிரேரணை ஒன்று சர்வதேச அரங்கில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதால் சீற்றமடைந்திருக்கின்றது. போர்க் குற்றங்களை வெளிப்படுத்தும் வகையிலான சனல்-4 வெளியிட்ட ஆவணப்படங்கள் இலங்கைக்கு சர்வதேச சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், பிரேரணை கடந்த வருடத்தைவிடவும் மென்மையானதாக இருப்பதால் பிரேரணை தொடர்பில் இலங்கை அலட்டிக் கொள்ளப்போவதில்லை. கடந்தகால வரலாறு இதனைத் தெளிவாக உணர்த்துகின்றது. ஐ.நா. செயலாளர் பான் கீ மூனுக்குக் கொடுத்த வாக்குறுதி, கடந்த வருட தீர்மானம் என்பன குப்பைக்கூடைக்குள்தான் போடப்பட்டன. அந்தக் கதிதான் தற்போதைய தீர்மானத்துக்கும் கிடைக்கும். இதனைத் தாம் முற்றாக நிராகரிப்பதாக இலங்கை தெளிவாகக் கூறிவிட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் பிரேரணை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் பெற்றுத்தரப்போவதில்லை!

Wednesday, March 20, 2013

அமெரிக்காவின் பிரேரணை

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை வியாழக்கிழமை அமெரிக்கா உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பித்திருக்கின்றது. இதன் மூலம் ஜெனீவா இராஜதந்திரக் களம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறும் கடமைப்பாட்டையும் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிரேணை  விவாதத்துக்கு விடப்பட்டு, அதன் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும். அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையின் உள்ளடக்கம் எவ்வாறானது என்பதை நோக்கியே அனைவரது கவனமும் திரும்பியுள்ள இன்றைய நிலையில், இலங்கை இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பதும், இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறானதாக அமையும் என்பதும்தான் இப்போது கேள்விக்குறியாக இருக்கின்றது.

இலங்கை தொடர்பான பிரேரணையின் வரைபை அமெரிக்கா கடந்த வாரம் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடையே சுற்றுக்கு விட்டிருந்தது. அது தொடர்பில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. இலங்கைக்கு ஆதரவான பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கியூபா உட்ப பல நாடுகள் இந்தப் பிரேரணை மென்மைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தன. இதில் பல நாடுகளுக்கு மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமை இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மறுபுறத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா போன்ற நாடுகள் பிரேரணை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன. இருந்தபோதிலும், இலங்கைப் பிரச்சினையுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள இந்தியா, இந்த விவாதங்களின் போது மௌனமாகவே இருந்துள்ளது.

இந்தப்பின்னணியில் தற்போது அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் தீர்மானம், ஏற்கனவே சுற்றுக்கு விடப்பட்டிருந்த நகல் பிரேரணைகளில் சிறுமாற்றங்கள் செய்யப்பட்டு சற்று மென்மைத் தன்மை கொண்டதாக மாற்றப்பட்டிருப்பதாக ஒரு கருத்து வெளியிடப்பட்டது. உறுப்பு நாடுகளுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட நகல் பிரேரணையில் வலியுறுத்துவது அல்லது எச்சரிக்கின்றது என்ற சொற்பதங்கள் காணப்பட்டன. இருந்தபோதிலும், இறுதியாகச் சமர்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பிரேரணையில் அவற்றுக்குப் பதிலாக ஊக்குவிக்கின்றது என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது சொற்பதத்தில் செய்யப்பட்டுள்ள ஒரு மென்மைப்படுத்தலே தவிர, உள்ளடக்கத்தில் செய்யப்பட்டுள்ள ஒரு மாற்றமல்ல.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் பிரேரணை, அந்த அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதை ஊக்குவிப்பதாகவும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனைவிட முக்கியமாக, இலங்கையில் மனித உரிமைகளைப் பேணுவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கையை ஊக்குவிப்பதெனவும், இதன் முன்னேற்றம் தொடர்பான வாய்மொழிமூலமான அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் 24 ஆவது கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும் என அமெரிக்க பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

25 ஆவது கூட்டத் தொடரில் இது தொடர்பான விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றைவிட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் சுயாதீனமான செயற்பாடுகளை வலியுறுத்துவதாகவே அமெரிக்காவின் பிரேரணை அமைந்திருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது. இவை எதுவும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளக்கூடியவையல்ல என்பதால் இலங்கை இவற்றை கடுமையாக எதிர்க்கும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். 

இதேவேளையில், வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இடம்பெற்ற சர்வதேச காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தில் பங்குகொண்டு உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, இலங்கையின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு முற்பட்டார். இலங்கையில் 30 வருடகாலமாக இடம்பெற்ற மோதல் மிகவும் மோசமானதாக இருந்தமையால், அதற்கு உடனடியாகத் தீர்வைக்கண்டுவிட முடியாது எனவும் இதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது இலங்கை அரசாங்கம் வழமையாகக் கடைப்பிடிக்கும் காலத்தைக் கடத்தும் உபாயமாகவே தோன்றுகின்றது. இலங்கையின் இந்த அணுகுமுறையை மனித உரிமைகள் பேரவையில் பல நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

போர் முடிவுக்கு வந்து இப்போது நான்கு வருடங்கள் பூர்த்தியாகப்போகின்றது. இக்காலத்தில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான செயன்முறைகள் எதனையும் அரசாங்கம் சுயமாக முன்னெடுக்கவில்லை. சர்வதேசத்தின் அழுத்தங்கள் காரணமாகத்தான் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இது ஒரு உள்நாட்டுப் பொறிமுறையாக இருந்தாலும் கூட அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உளப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. பரிந்துரைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என்பதை மனித உரிமைகள் அமைப்புக்களின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. அதற்குக் கூட சர்வதேச அழுத்தங்கள்தான் அவசியமானதாக இருக்கின்றது.

அமெரிக்க தொடர்ந்தும் இரண்டாவது வருடமாகக் கொண்டுவந்திருக்கும் பிரேணையைப் பொறுத்தவரையில் சில விடயங்கள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இது மேலும் காலத்தைக் கடத்துவதற்கான வாய்ப்பைக் கொடுப்பதாக இதுவும் அமைந்துவிடுமா என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகின்றது. எதிர்வரும் 21 ஆம் திகதி பிரேரணை விவாதத்துக்கு விடப்படும் போது இதில் மேலும் திருத்தங்கள் செய்யப்படலாம். இதனை மேலும் கடினமானதாக்கும் வகையிலான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என தமிழகத்திலிருந்து கொடுக்கப்படும் அழுத்தங்களுக்குப் புதுடில்லி செவிசாய்க்குமா என்பது தெரியவில்லை. பிரேரணையின் இறுதிவாசகங்கள் வெளியான பின்னர் தமது நிலைப்பாடு அறிவிக்கப்படும் என இந்தியா தெரிவித்திருந்த போதிலும் தொடர்ந்தும் மௌனமாகவே இருக்கின்றது.

போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் எதுவும் அரசாங்கத்தினால் உளப்பூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை. உண்மையான நல்லிணக்க முயற்சி ஒன்றுக்கு பொறுப்புக்கூறல் அவசியம். அந்தவகையில்தான் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் அமெரிக்கப் பிரேரணையை வரவேற்றிருந்தன. இவ்விடயத்தில் மேலும் காலத்தைக் கடத்தும் உபாயத்தைக் கையாளாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரோக்கியமான செயற்திட்டம் ஒன்றை அரசு முன்வைப்பது அவசியமானதாகும்.

(ஞாயிறு தினக்குரல்: 2013-03-17)

வீடுகளை அழிக்க தயாராக புல்டோசர்கள்: போராடத் தயாராக முள்ளியவளை மக்கள்!!

போர் இடம்பெற்ற போது ஆட்டிலறி ஷெல்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் துரத்த வீடு வாசல்களை இழந்து ஓடினார்கள் வன்னி மக்கள்..

இப்போது போரும் இல்லை.. ஆட்டிலறி ஷெல்களும் இல்லை....

"சமாதானம் ஏற்பட்டுவிட்டது. இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றிவிட்டோம். நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திவிட்டோம்" என ஜெனீவாவில் உலக நாடுகளின் முன்பாக இலங்கை அரசாங்கம் கற்பூரம் கொழுத்திச் சத்தியம் செய்கின்றது.

ஆனால், கள நிலைமைதான் என்ன?

புல்டோசர்கள் தயாராக நிற்கின்றன...வீடுகளையும் உடைமைகளையும் அப்படியே கைவிட்டுவிட்டு ஓடுவதற்குத் தயாராகியிருக்கின்றார்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை மக்கள்!

போரின் முடிவு என்பது தமிழர்களின் அவல வாழ்க்கைக்கான முடிவாக அமைந்துவிடவில்லை என்பதை கடந்த சில வாரகாலமாக முள்ளியவளையில் இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.

40 வருடகாலமாக முள்ளியவளையில் வாழும் தமிழ் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவமும் வனபரிபாலன சபை அதிகாரிகளும் கொடுக்கும் அழுத்தங்களால் அடுத்தது என்ன என்ற கேள்விக்குறியுடன் வாழ்கின்றார்கள் அங்குள்ள மக்கள். இந்தப் பகுதியில் இரண்டு திட்டங்களுடன் அரசு செயற்படுகின்றது.

1. முள்ளியவளை மத்திய பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐந்து ஏக்கர் காணி அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது. இந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். அதற்காக பலாத்காரத்தையும் பயன்படுத்த அரச தரப்பு தயாராகவுள்ளது.

2. முள்ளியவளை மத்திய பகுதியில் காடுகளைச் சுத்தப்படுத்தி பாரிய முஸ்லிம் குடியேற்றம் ஒன்றுக்குத் திட்டமிடப்படுகின்றது. இதற்காக காடுகளை அழித்து புதிய குடியேற்றத்தை அமைக்கும் போது இப்போது தமிழர்கள் வசிக்கும் பகுதியையும் அதனுடன் உள்ளடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்க் கிராமவாசிகளை அங்கிருந்து அகற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

முள்ளியவளையிலுள்ள தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பங்களைப் பராமரித்துவரும் இந்தக் கிராம மக்கள் இறுதிவரையில் போராடுவதற்குத் தீர்மானித்துவிட்டார்கள். ஆனால், ஒருபுறம் இராணுவமும் மறுபுறத்தில் வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகளும் கொடுத்துவரும் அழுத்தங்களால், மக்கள் நிம்மதி இழந்துவிட்டார்கள். எந்தநேரமும் தயாராக நிற்கும் புல்டோசர்கள் வீடுகளை அழிக்கப் புறப்படலாம் என்ற அச்சத்துடன் வாழும் மக்கள் அதனை எதிர்கொள்வதற்கும் தயாராகத்தான் உள்ளனர்.

இந்த நிலையில்தான் இவ்வார ஆரம்பத்தில் இந்தக் கிராமத்துக்குள் புகுந்த வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் ஆறு குடும்பஸ்த்தர்களைக் கைது செய்து கொண்டு சென்றிருக்கின்றார்கள். இவர்கள் இரண்டுவார விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய குடும்பஸ்த்தர்களும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் இங்கு பெரும் பீதி காணப்படுகின்றது. படையினரையோ வன திணைக்கள் அதிகாரிகளையோ கண்டால் காடுகளுக்குள் ஒழித்துவிடும் நிலையிலேயே குடும்பஸ்த்தர்கள் உள்ளனர்.

1972 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் காடுகளை வெட்டி குடியிருப்புக்களை அமைத்த இந்தக் கிராம மக்கள் இறுதிக்கட்டப் போரின் போது அனைத்தையும் இழந்து மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்திருந்தார்கள். பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் விடுவிக்கப்பட்ட இவர்கள், வீடுகளை அமைப்பதற்கோ வாழ்வாதாரங்களைப் பெறுவதற்கோ வசதியில்லாத நிலையில் தமது உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களிலேயே தங்கியிருந்தனர்.

தற்போது தமக்குக் கிடைத்த குறைந்த பட்ச வசதிகளுடன் சிறிய சிறிய கொட்டில்களை அமைத்து அங்கு குடியிருக்க மக்கள் முற்பட்டுள்ள நிலையில்தான் இராணுவத்தினர் அங்கு முகாம் அமைப்பதற்கு 5 ஏக்கர் காணி வேண்டும் எனக் கேட்டு வற்புறுத்தத் தொடங்கியிருப்பதாக நேரில் நிலைமைகளைப் பார்வையிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தினக்குரலுக்குத் தெரிவித்தார். இதனால் மக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இப்பகுதி மக்கள் தமக்குரிய குடில்களை அமைப்பதற்குத் தேவையான கிடுகுகளையும் தடிகளையும் பெற்றுக்கொள்வதற்குக்கூட முடியாதவர்களாக உள்ளனர். அரசாங்கத்தினால் இவர்களுடைய மீள்குடியேற்றத்துக்காக எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை. போரின் போது அனைத்தையும் இழந்த இவர்களுக்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தில் கூட உதவி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 40 வருட காலமாக வசித்துவரும் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேற முடியாது எனத் தெரிவித்துள்ள மக்கள் தமது நிலங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக போராடவும் தயாராகவிருப்பதாக இருக்கின்றார்கள்.

வன்னியைப் பொறுத்தவரையில் காடுகளை வெட்டி குடியிருப்புக்களை அமைத்துக்கொள்வது என்பது மிகவும் கடினமானது. 1972 ஆம் ஆண்டளவில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பொருளாhர நெருக்கடியின்போதுதான் வன்னியில் காடுகளை வெட்டி பெருமளவு மக்கள் குடியேறினார்கள். மிகவும் வரண்ட பகுதியான வன்னியில் இவ்வாறான குடியிருப்புக்களை அமைப்பதிலுள்ள சிரமம் சொல்லித் தெரிய வேண்டியதல்ல.

இவ்வாறு காடுகளை வெட்டிக்குடியேறுபவர்கள் தாம் குடியிருக்கும் காணிகளை சொந்தமாக்கிக் கொள்வது வன்னியில் காணப்படும் ஒரு வழமை. இவற்றுக்கு பின்னர் பெர்மிட்ட வழங்கப்படுவதும் உண்டு.

இவ்வாறு கடந்த 40 வருடமாக வாழ்ந்தவர்கள்தான் முள்ளியவளை மக்கள். தமது வியர்வையாலும், இரத்தத்தாலும் தாம் வளப்படுத்திய மண்ணைவிட்டு வெளியேற இன்று நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுடைய பிரச்சினை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அப்பகுதிக்கு அடிக்கடி சென்று வந்துள்ள வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தனிடம் கேட்டோம். முள்ளியவளைக்கு நேரில் சென்று வன பரிபாலன திணைக்கள அதிகாரிகளுடனும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகத்துடனும் கடுமையாக முரண்பட்ட சிவசக்தி முள்ளியவளை நிலை தொடர்பில் கடுமையாகச் சீற்றமடைந்தவராகக் காணப்பட்டார்.

'முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு முதல் கொக்கிளாய் வரையிலான பகுதிகளில் காடு அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை அனைத்தும் இராணுவ ஆதரவுடன், அரச உயர் மட்டத்தின் அங்கீகாரத்துடன் இடம்பெறுகின்றது|| எனச் சுட்டிக்காட்டிய சிவசக்தி ஆனந்தன், 40 வருடங்களின் முன்னர் முள்ளியவளையில் குடியேறிய மக்களை மட்டும் அது வனபரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமான காணி எனக் கூறி வெளியேற்றுவதில் என்ன நியாயம் இருக்கின்றது? எனக் கேள்வி எழுப்பினார்.

முள்ளியவளை கிராமத்துக்கு வந்திருந்த வன பரிபாலன திணைக்கள அதிகாரிகளிடமும் இதேகேள்வியை அவர் கேட்ட போது அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. மேலிடத்து உத்தரவு நாம் செய்கின்றோம் என மட்டுமே அதிகாரிகள் பதிலளித்தார்கள்.

இக்கிராமத்தின் குடும்பத் தலைவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர்களுடைய குடும்பத்தவர்கள் வீதியில் நிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கைதான குடும்பஸ்த்தர் ஒருவரின் மனைவி இது தொடர்பாக தான் முள்ளியவளை சென்றபோது நேரில் வந்து முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்த அவர், இவர்கள் அனைவரும் அடுத்த வேளை உணவுக்கே கூலி வேலை செய்து உழைப்பவர்களாக இருப்பதால், கைதானவர்களின் குடும்பங்கள் பெரும் நெருக்கடிக்குள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகத்துக்கு தான் பலதடவை தெரியப்படுத்தியபோதிலும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டினார். முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தளபதி மார்க்குடன் இது தொடர்பில் தான் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக இதன்போது வேதநாயகம் உறுதியளித்திருக்கின்றார். இராணுவத்தினர் தமக்கு முகாம் அமைக்க இடம் தேவை எனில் மக்கள் வசிக்காத பகுதிகளில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசாங்க அதிபர் முதலில் தெரிவித்திருக்கின்றார். ஆனால், இது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை.

முள்ளியவளை மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டால், அந்த மக்கள் அரசாங்க அதிபரின் செயலகத்தில்தான் வந்து தஞ்சமடைய நேரிடும் எனவும் ஆனந்தன் எச்சரித்திருப்பதாகத் தெரிகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்கள் பலவும் இவ்விடயத்தில் அரசாங்க அதிபரின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளன. அவர் அரசாங்கத்துக்கு விசுவாசமான ஒரு அதிபராகச் செயற்பட முற்பட முற்படுகின்றாரே தவிர, மக்களுடைய பிரச்சினைகளை முன்னெடுக்கும் ஒருவராகச் செயற்படுவதாகத் தெரியவில்லை என பொது அமைப்பு ஒன்றின் பிரதிநிதி குற்றஞ்சாட்டியிருக்கின்றார். அவருடைய மட்டத்திலேயே இந்தப் பிரச்சினையை அவர் தீர்த்துவைத்திருக்க முடியும். குடியிருப்பாளர்களை வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் கைது செய்துகொண்டு சென்றுள்ள போதிலும், அரச அதிபர் மௌனமாகவே இருப்பதாகக் கூறும் அவர், இவ்விடயத்தில் மாவட்ட அரசாங்கப் பிரதிநிதி என்ற முறையில் அரச அதிபர் கடுமையாக நடந்துகொண்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் ஆராயப்பட்டுவரும் நிலையில்தான் இவை அனைத்தும் நடைபெறுகின்றன. இது முள்ளிவளையுடன் மட்டும் நின்றுவிடப்போவதில்லை. அதனையும் தாண்டியும்  செல்லப்போகின்றது. ஜெனீவாவினால் இதனைத் தடுத்துவிட முடியாது. இறுதிவரை போராடுவதற்கு முள்ளியவளை மக்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், பல்வேறு பக்கங்களாலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ள இந்த மக்களால் எந்தளவுக்குத்தான் பலமாக எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும்?

- பார்ர்தீபன். (ஞாயிறு தினக்குரல்)