உலகின் முன்னணி சஞ்சிகையான அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'ரைம்' வார இதழ் கடந்த வாரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது. பின்னர் சஞ்சிகை தடை செய்யப்பட்டு சுமார் 4,000 பிரதிகளை சுங்கப் பகுதியினர் கைப்பற்றிக்கொண்டார்கள். சர்வதேச ரீதியில் முன்னணியிலுள்ள சஞ்சிகை ஒன்று இலங்கையில் தடைசெய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பதால் விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கின்றது. ஊடக சுதந்திரம் தொடர்பில் முக்கியமாகப் பேசப்படும் நிலையில் இந்தத் தடை, அதுவும் அமெரிக்காவின் முன்னணி சஞ்சினை ஒன்றின் மீதான தடை அனைவரின் ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றது.
'ரைம்' தடை செய்யப்படுவதற்குக் காரணம் மியன்மாரின் பௌத்த மதத்துறவியான 'விராது' என்பவரைப் பற்றியும், அவரது '969' என்ற இயக்கம் பற்றியும் வெளியாகியிருந்த கட்டுரைதான். இலங்கையின் பலம்வாய்ந்த முன்னணி பௌத்த தேசியவாத அமைப்பான பொது பல சேனாவின் செயற்பாடுகளுடன் 969 இயக்கத்தையும் ஒப்பிட்டு இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பொது பல சேனாவுக்கு சீற்றத்தைக் கொடுத்தது. பொது பல சேனா கொடுத்த அழுத்தம்தான் இந்தத் தடைக்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றது.
'மியன்மாரின் பின் லேடன்' எனக்குறிப்பிடப்படும் பௌத்த மதத் துறவி அல்லது மதத் தலைவரான விராது இன்று அந்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற ஒருவர். மியன்மாரின் ,இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் அமைந்திருக்கும் ஒரு விகாரையிலிருந்துதான் அவர் தன்னுடைய போதனைகளை வெளியிடுகின்றார். அவரது உபதேசங்களைக் கேட்பதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு தினசரி கூடுகின்றார்கள். ஒரு அமைதியான நிகழ்வாக இது தோன்றினாலும், விராதுவின் உபதேசம் மிகவும் சூடானதாகத்தான் இருக்கும். "உங்களுடைய இரத்தம் கொதித்து வெகுண்டு எழ வேண்டிய தருணம் இது" என விராது உணர்ச்சிவசப்பட்டவராக உபதேசிக்க, அவரது உரையின் சூட்டில் மியன்மாரில் பௌத்தர்களின் இரத்தம் கொதித்தெழுகின்றது.
பௌத்தர்களின் இரத்தம் கொதித்தெழுவது முஸ்லிம்கள் இரத்தம் சிந்துவதில் முடிகின்றது. பௌத்த மதக் குழுக்கள் முஸ்லிம் மக்களை இலக்கு வைக்கின்றன. இந்தப் பின்னணியில் முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. இதனைவிட மேலும் பெருந்தொகையானவர்கள் வீடு வாசல்களை இழந்து அகதிகளாகியுள்ளார்கள். முஸ்லிம்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் பல மாதங்களாகத் தொடர்ந்துகொண்டிருந்த போதிலும், மீயன்மார் அரசாங்கம் அதனைக் கண்டும் காணாமலும் இருந்தது. மனித உரிமை அமைப்புக்களின் கரிசனை குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.
மியன்மாரில் சுமார் ஆறு கோடி மக்கள் உள்ளார்கள். இதில் மிகவும் சிறுபான்மையினராக ஐந்து வீதம் மட்டுமே முஸ்லிம்கள். ஆனால், இந்த முஸ்லிம்கள் மியன்மாருக்கும் அதன் கலாசாரத்துக்கும் அச்சுறுத்தல் என்று விராது கருதுகின்றார். அல்லது அவ்வாறு போதிக்கின்றார். "முஸ்லிம்கள் மிகவும் விரைவாகப் பல்கிப் பெருகுகின்றார்கள். அவர்கள் எங்களுடைய பெண்களைக் கவர்ந்து கற்பழிக்கின்றார்கள்" என்று விராது ரைம் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியின் போது குறிப்பிட்டிருக்கின்றார். "முஸ்லிம்கள் எமது நாட்டை ஆக்கிரமிக்க நினைக்கின்றார்கள். ஆனால் நான் அதற்கு அனுமதிக்கமாட்டேன். மியன்மாரை நாம் ஒருபௌத்த நாடாக வைத்திருக்கவே விரும்புகின்றோம்" எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார். அவரது உணர்ச்சிகரமான உரை அவருக்குப் பின்பாக பெருந்தொகையானவர்களை ஒன்று திரட்டுகின்றது.
மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய விராதுவின் சக்திவாய்ந்த பேச்சுக்கள் பௌத்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது. மியன்மமாரின் பௌத்த மக்கள் மத்தியில் தமது மதம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்ற ஒரு அச்ச உணர்வு காணப்படுகின்றது. இந்த அச்ச உணர்வுக்கு வரலாற்று ரீதியான சில காரணங்களும் உள்ளன. குறிப்பாக ஆசியாவில் பௌத்த மதம் வியாபித்திருந்த பல நாடுகள் இப்போது முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான். இங்குள்ள பௌத்த புராதனச் சின்னங்கள் பல முஸ்லிம் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட தகவல்கள் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். மியன்மாரிலும் முஸ்லிம்களின் தொகை அதிகரித்துவருவதாகக் கருதும் பௌத்த தீவிரவாதிகள் அதன் மூலம் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என அஞ்சுகின்றார்கள். அதேபோல மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் நிதி உதவிகள் தொடர்பிலான அச்சமும் இவர்களிடம் காணப்படுகின்றது.
மியன்மாரைப் பொறுத்தவரையில் அங்கு பெரிதும் சிறிதுமாக 135 இனக்குழுக்கள் உள்ளன. இவற்றுக்கிடையிலான ஒற்றுமை என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருந்துள்ளது. தற்போதைய நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பௌத்த இனவாதம்தான் அந்த நாட்டை இரத்தக்களரியாக்கிக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் பெருமளவுக்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் சனத் தொகை அதிகளவில் பெருகிவருவதாகப் பிரச்சாரம் செய்யும் பௌத்த துறவிகள், முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதைத் தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றார்கள். இந்தப் பிரச்சாரங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் இலங்கையில் பொதுபல சேனா முன்னெடுக்கும் பிரச்சாரத்துடன் ஒத்துப்போவதாகவே அமைந்திருக்கின்றது. இதேபோன்ற சில செயற்பாடுகள் தாய்லாந்திலும் காணப்படுகின்றது.
ரைம் சஞ்சிகையின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள மற்றொரு கருத்தும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியதாகும். மதத்தீவிரவாதிகளைப் பட்டியலிடும் போது இந்துத் தேசியவாதிகள், முஸ்லிம் தீவிரவாதிகள், அடிப்படைவாத கிறிஸ்தவர்கள் மற்றும் தீவிரவாத யூதர்கள் என்ற வகையிலான ஒரு கணிப்பீடுதான் அண்மைக்காலம் வரையில் காணப்பட்டது. இந்தப் பட்டியில் பௌத்த தீவிரவாதம் இதுவரைகாலமும் உள்ளடக்கப்படவில்லை. புத்தரினால் தோற்றுவிக்கப்பட்ட பௌத்த மதம் அன்பு மற்றும் கருணை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே அண்மைக்காலம் வரையில் நோக்கப்பட்டது. ஆனால், ஏனைய மதத் தீவிரவாதிகளையொத்ததாகவே அவர்களுடைய செயற்பாடுகளும் அமைந்திருப்பதை மியன்மாரில் நடைபெற்ற நிகழ்வுகளும் இலங்கையில் இடம்பெறும் சம்பவங்களும் உறுதிப்படுத்துகின்றன.
2003 ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக படுகொலையைத் துண்டிவிட்டவர் என்ற குற்றத்துக்காக கைதான விராது ஏழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். சிறையிலிருந்து விடுதலையான பின்னரும் தன்னுடைய கொள்கையை அவர் விட்டுவிடவில்லை. தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த தேசியவாதத்தைப் போசிப்பவராகவே அவர் உள்ளார். சிறைவாசத்தின் பின்னரே 969 என்ற அமைப்பை விராது உருவாக்கினார். 969 என்பது புத்தரின் பல்வேறு குணாம்சங்களைக் குறிப்பிடுவதாக அமைந்திருக்கின்றது. தமது இனத்தையும் மதத்தையும் பாதுகாப்பது என்பது ஜனநாயகத்தைவிட முக்கியமானது என இவ்வமைப்பு பௌத்த மக்களுக்குப் போதிக்கின்றது.
இந்தப் பின்னணியிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இந்த வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அரச தரப்பு எதனையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மனித உரிமைகள் அமைப்புக்காளல் முன்வைக்கப்பட்டது. அதிகமான இடங்களில் இந்த வன்முறை வெறியாட்டங்கள் பிக்குகளின் தலைமையிலேயே நடத்தப்பட்டது.
இது தொடர்பான தகவல்களைத் தாங்கிய ரைம் சஞ்சினை இன நல்லுறவைப் பாதிப்பதாக அமைந்திருப்பதாக தடை செய்யப்படுகின்றது. ஆனால், இன நல்லுறவைப் பாதிக்கும் வகையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்புக்களுக்கு அரச ஆதரவு தாரளமாகக் கிடைக்கின்றது. இதுதான் ஆசியாவின் அதிசயம்!

- பார்த்தீபன்