இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் கொழும்பு வந்து சென்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் அமெரிக்க விஜயம் தொடர்பான அறிவிததல் வெளியாகியிருக்கின்றது.
கூட்டமைப்புத் தலைவர்களின் அமெரிக்க விஜயம் இலங்கையின் இன நெருக்கடியைப் பொறுத்தவரையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவதாக அமையும் எனக் கருதப்படுகின்றது. அதேவேளையில், வடமாகாண சபைக்கான தேர்தலை அவசரமாக நடத்துவதற்கான முயற்சிகளை அரச தரப்பு முடிக்கிவிட்டிருக்கின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்றது. கடந்த மாதம் இடம்பெற்ற இதன் 18 வது கூட்டத் தொடரில் பெரும் நெருக்கடி ஒன்றை இலங்கை எதிர்கொண்டிருந்த போதிலும் கூட, இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாமையால் இலங்கை தப்பித்துக்கொண்டது. இருந்த போதிலும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் அடுத்த கூட்டத் தொடர் இலங்கையைப் பொறுத்தவரையில் தீவிரமான நெருக்கடியைக் கொடுக்கக்கூடியதாகவே இருக்கும். இதற்கான தயாரிப்புக்களை மனித உரிமை அமைப்புக்கள் ஏற்கனவே முடுக்கிவிட்டுள்ளன.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தற்போது இடம்பெற்றுவரும் அரசியல், இராஜதந்திர நகர்வுகள் அனைத்தும் இந்த ஜெனிவா கூட்டத் தொடரை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளன. போர்க் குற்றத்தை மையப்படுத்தி இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளிவிடுவதை இலக்காகக் கொண்டதாகவே இலங்கைக்கு எதிராகச் செயற்படும் மனித உரிமைகள் அமைப்புக்கள் அனைத்தினதும் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான உபாயங்களை கொழும்பு வகுத்துவருகின்றது. அதேவேளையில் இந்தியா, அமெரிக்கா என்பனவும் இதனை மையப்படுத்தியே தமது நகர்வுகளை மேற்கொண்டுள்ளன.
ஜெனிவாவில் உருவாகக்கூடிய நெருக்கடியைத் தணிப்பதற்கு ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவு மட்டும் போதுமானதாக இருக்கப்போவதில்லை என்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குத் தெரியும். இந்தியாவின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலமாக மட்டுமே சர்வதேச ரீதியாக உருவாகக்கூடிய நெருக்கடிகளை ஓரளவுக்காவது சமாளிக்கக்கூடியதாக இருக்கும். கடந்த வாரம் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாயும் இதனைத்தான் உணர்த்திவிட்டுச் சென்றிருப்பதாகத் தெரிகின்றது. இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்கு இந்தியாவுக்கு தற்போதைக்குக் கிடைத்துள்ள ஒரு 'பிடி' இது!
ஜெனிவா கூட்டத்தொடரை மையப்படுத்தி இந்தியா வகுத்துக்கொண்டிருக்கும் வியூகத்தின் முதலாவது நகர்வுதான் ரஞ்சன் மாத்தாயின் கொழும்பு விஜயமும், இலங்கைக்கு அவர் கொடுத்திருக்கும் செய்தியும்!
இந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் நிலைப்பாடு. அதனால்தான் பேச்சுவார்த்தை மேசையில் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா தொடர்ந்தும் அறிவுறுத்திவருகின்றது. கடந்த வாரம் கொழும்பு வந்த ரஞ்சன் மாத்தாய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பேச்சுக்களில் இருப்பதையிட்டு தனது திருப்தியை வெளியிட்டிருந்தமை கவனிக்கத்தக்கது. கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கு உகந்த தருணம் ஒன்று வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே பேச்சுவர்த்தை மேசையில் தொடர்ந்தும் இருக்குமாறு கூட்டமைப்புக்கு டில்லி அறிவுறுத்திவருகின்றது.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை தண்டிக்கப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் தமிழகத்தில் அதிகரித்துவருகின்றன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் தன்னை ஒரு கடும்போக்காளராகவே வெளிப்படுத்திவருகின்றார். இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகளும், அமைப்புக்களும் கூட இவ்விடயத்தில் இந்திய அரசுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துவருகின்றன. இருந்தபோதிலும் போர்க் குற்ற விவகாரம் தொடர்பில் இலங்கையை குற்றவாழிக்கூண்டில் ஏற்றுவதற்கு இந்தியா ஒருபோதும் துணைபுரியப் போவதில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதன் மூலமாகவும், ஜனநாயக சூழல் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலமாகவும் இந்த போர்க் குற்ற விவகாரத்தை தணித்துவிட முடியும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு!
அரசியல் தீர்வு, ஜனநாயக சூழல் என்பன ஏற்படுத்தப்பட்டால் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையைப் பாதுகாப்பதற்கு இந்தியா முற்படும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறான ஒரு சூழலில் அதனை டில்லியால் நியாயப்படுத்தவும் முடியும். இந்தியாவின் அணுகுமுறைக்கு எதிராக எழக்கூடிய எதிர்ப்பலைகளையும் அதன் மூலமாகச் சமாளிக்கலாம். இந்தப் பின்னணியிலேயே இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் கொழும்பு விஜயம் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்த ரஞ்சன் மாத்தாய், ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்திக்காமல் சென்றதும் கவனிக்கத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமான பேச்சுக்களின் மூலமாக நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை மார்ச் மாதத்துக்கு முன்னதாக ஏற்படுத்த வேண்டும் என்பதும், வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தி அங்கு ஒரு ஜனநாயக சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதும்தான் கொழும்புக்கு டில்லி கொடுத்துள்ள செய்தியாக உள்ளது. ரஞ்சன் மாத்தாயுடனான பேச்சுக்களின் போதும், வியாழக்கிழமை இடம்பெற்ற தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதும் வடமாகாண சபைக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதிப்படுத்தியிருந்தார்.
இருந்தபோதிலும், இந்த அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவதற்கு முன்னதாகவே வடமாகாண சபைத் தேர்தலை நோக்கிய காய்நகர்த்தல்களை அரசாங்கம் முடுக்கிவிட்டிருந்தது. ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தர்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு அவர்கள் களத்தில் இறக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது. வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பன முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆளும் கட்சி வட்டாரங்களிலிருந்து கசியும் தகவல்களின்படி எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் எனத் தெரிகின்றது.
மார்ச் மாதம் நடைபெறம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தின் போது வடக்கில் மாகாண சபை அமைக்கப்பட்டுவிட்டது. ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுவிட்டது எனக்காட்டிக்கொள்வது கொழும்பின் உபாயமாக இருக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரையிலும்கூட, வடக்கில் மாகாண சபை அமைக்கப்படுவதுதான் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு. தமிழகத்திலிருந்து கிளம்பக்கூடிய எதிர்ப்பலைகளை அடக்குவதற்கு இது போதுமானது என இந்தியா கருதுகின்றது. இருந்தபோதிலும் கவர்னருக்கு அதிகளவுக்கு அதிகாரங்களைக் கொடுத்துள்ள தற்போதைய மாகாண மாகாண சபைத் திட்டம் இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வாக எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்கள், கவன்னரின் பங்கு என்பன தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த 3 ஆம் திகதி பேச்சுக்கள் இடம்பெறுவதாக இருந்த போதிலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களைக் காரணம் காட்டி அதனை அரசாங்கம் ஒத்திவைத்தது. ஆனால், அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கான திகதி இதுவரையில் நிர்ணயிக்கப்படவில்லை. அரசின் சார்பில் பேச்சுவார்த்தைக்குத் தலைமைதாங்கும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா நோர்வே சென்றுள்ளார். இம்மாத இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா செல்லவிருக்கின்றது. ஆக, அடுத்த கட்டப் பேச்சுக்கள் நவம்பருக்குச் செல்லலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆரோக்கியமான முறையில் பேச்சுக்களை முன்னெடுத்து மாகாண சபையை அதிகாரம் மிக்க ஒன்றாக உருவாக்காமல், மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி வடக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுவிட்டதாகவும், இனநெருக்கடி தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் சர்வதேசத்துக்கு – குறிப்பாக இந்தியாவுக்குக் காட்டிக்கொள்வதுதான் கொழும்பின் திட்டம்போலத் தெரிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறப்பான அரசியல் கட்டமைப்புக்களையே, எதிர்காலத் திட்டத்தையே கொண்டதாக இருக்காமையால் அரசின் ஒவ்வொரு நகர்வுக்கும் பதில் நகர்வை மேற்கொள்ள இந்தியாவின் ஆலோசனையைக் கேட்டுக் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இம்மாத இறுதியில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளும் விஜயங்களும் இனநெருக்கடி விவகாரத்தில் பரிமாணம் ஒன்றை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும். அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான வெளிவிவகாரச் செயலாளர் றொபோர்ட் பிளேக் கடந்த முறை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது விடுத்திருந்த அழைப்புக்கு இணங்கவே கூட்டமைப்புத் தலைவர்கள் அமெரிக்காவுக்கான இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்கள். இனநெருக்கடி தொடர்பாக ஆராய்வதற்காக இந்தியா தவிர்ந்த மற்றொரு நாட்டுக்கு கூட்டமைப்பின் தலைவர்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வது இதுவே முதல்தடவையாகும்;. இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுவதற்கு அதுமட்டும் காரணமல்ல. சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் சூழ்நிலையும் இதற்குக் காரணம். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளினடனையும் இவர்கள் சந்தித்துப் பேசவிருப்பது இந்த விஜயத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கின்றது.
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் இதுவரையில் ஓரளவுக்கு இந்தியாவின் மேற்பார்வையிலேயே நடந்துவந்தன. இதில் அமெரிக்காவும் ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்ளப்போகின்றது என்பதை உணர்த்துவதாகவே கூட்டமைப்பின் வாஷிங்டன் விஜயம் அமையப் போகின்றது. அதனைவிட இந்தப் பேச்சுக்களை சர்வதேச மயப்படுத்துவதாகவும் இந்த விஜயம் அமையும். கூட்டமைப்புடன் அரசு நடத்தும் பேச்சுக்களுக்கு சர்வதேச அந்தஸ்த்தையும் அங்கீகாரத்தையும் கொடுப்பதாகவும் இந்த விஜயம் அமையும் என்பதால் இது கொழும்புக்கு சீற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அமையலாம். அதேவேளையில், இந்தியாவின் சம்மதம் இல்லாமல் இந்த நகர்வை கூட்டமைப்பு மேற்கொண்டிருக்காது.
அமெரிக்காவின் இந்தப் பிரவேசத்தை இனவாத சக்திகள் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. அமெரிக்காவுக்கும், கூட்டமைப்புக்கும் எதிரான பிரசாரங்களை இனவாத சக்திகள் அடுத்துவரும் வாரங்களில் தீவிரப்படுத்தலாம். ஆனால், இனவாத அமைப்புக்கள் அனைத்தும் இன்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், அரசின் சம்மதம் இல்லாமல் இவற்றினால் செயற்பட முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதிபலிப்புக்கள் எவ்வாறானதாக இருக்கும் என்பதிலேயே அடுத்த கட்டம் தங்கியுள்ளது.
- சபரி
ஞாயிறு தினக்குரல் (16-10-2011)
ஞாயிறு தினக்குரல் (16-10-2011)
No comments:
Post a Comment