Saturday, October 29, 2011

அரசு முன்வைக்கப்போகும் தீர்வு என்ன: 13வது திருத்தத்துடன் முடக்க திட்டமா?

'இலங்கையின் இனப் பிரச்சினைக்கான முதற் கட்டத் தீர்வாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 வது திருத்தத்தை அமுல் செய்வது அவசியம்" என அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா பேட்டி ஒன்றில் வலியுறுத்தியிருக்கின்றார்.

'தமிழ்ப் பகுதிகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்படுவதையிட்டு தென்பகுதியில் அதிருப்தி காணப்படுவதால் அதனை தற்போதைக்கு நிறுத்தலாம்" எனவும் அவர் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறான கருத்தை அமைச்சர் தெரிவிப்பது இதுதான் முதன் முறையல்ல. ஆனால், இப்போது இதனை அவர் சொல்லியிருக்கும் தருணம் முக்கியமானது.

வடமாகாண சபைக்கான தேர்தலை அரசாங்கம் அடுத்த வருட முற்பகுதியில் நடத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்திருக்கும் இந்தக் கருத்தில் பல அர்த்தங்கள் உள்ளன. அதில் முக்கியமானது காணி, பொலிஸ் அதிகாரங்கள் அற்றவகையில்தான் வடமாகாண சபைக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தப்போகின்றது என்ற கருத்து உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. ஒரு அமைச்சர் என்ற முறையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உள்வாங்காமல் இவ்வாறான ஒரு கருத்தை அவர் முன்வைத்திருப்பார் எனக் கருத முடியாது.

வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தாமல் காலங்கடத்தி வந்த அரசாங்கம் இப்போது அதனை அடுத்த வருட முற்பகுதியில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை அவரமாக நடத்திமுடித்த அரசாங்கம், வடமாகாணத் தேர்தலை நடத்தாமல் காலந்தாழ்த்தியமைக்கான காரணம் வெளிப்படையானதுதான். வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி தவிர்க்க முடியாது என்பதுதான் அந்தக் காரணம். ஆனால், இப்போது, வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்திவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்தது என சர்வதேசத்துக்கக் காட்டிக்கொள்ள முடியும் என அரசாங்கம் கணக்குப் போடுகின்றது.

டக்ளஸ் தேவானந்தா
அதனால், கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. வடக்கில் ஜனநயகம் நிலை நிறுத்தப்பட்டு விட்டது எனக் காட்டிக் கொள்வதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்வது அரசாங்கத்தின் உபாயமாக  இருக்கின்றது.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் பெரும் பெருக்கடியை சர்வதேச ரீதியாக எதிர்கொள்கின்றது என்பது உண்மை. இறுதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை செய்திருந்தாலும் கூட, அவ்வாறான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டமையே இலங்கைக்கு பெரும் பின்னடைவு என்பது உண்மை. இதனைவிட, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா என பல நாடுகளில் போர்க் குற்றவழக்ககள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இதனைவிட, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரும் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பின்னணியில்தான் இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தமது நலன்களை நோக்கி காய்களை நகர்த்திக் கொண்டுள்ளார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் போர்க் குற்றச்சாட்டு விவகாரத்திலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதுதான் அதன் பிரதான இலக்காக இருக்கும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், தமிழக அழுத்தங்கள் காரணமாக அதனை வெளிப்படையாகச் செய்யும் நிலையில் இந்தியா இல்லை. ஆனால், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொது நலவாய உச்சி மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வறானதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி மகிந்த
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இறுதியாகச் சந்தித்த போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படுத்தியிருந்த செய்தியும் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறானதாக இருக்கும் என்பதைக் காட்டியிருக்கின்றது. 'இன நெருக்கடிக்குக்கான அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலமாக போர்க் குற்றச்சாட்டுக்களினால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களைத் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்" என்பதே மன்மோகன்சிங் ஜனாதிபதிக்கு வழங்கிய அறிவுறுத்தல். இந்தப் பின்னணியில்தான் அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை இந்தியா கொடுத்துவந்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் பேச்சுவார்த்தை மேசையில் இருக்குமாறு இந்தியா அறிவுறுத்தியதும் இந்தப் பின்னணியில்தான்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுக்களிலிருந்து வெளியேறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் பேச்சுக்களுக்குச் சென்றமையும் இதற்காகத்தான் எனக் கூறப்படுகின்றது.

ஜனவரியில் ஆரம்பமான பேச்சுவார்த்தைகள் இப்போது 10 மாத காலத்தில் 12 சுறு;றுக்களாக இடம்பெற்றிருக்கின்ற போதிலும், இதுவரையில் பேச்சுக்காளால் காணப்பட்ட பலன் எனச் சொல்லிக்கொள்வதற்கு எதுவும் இல்லை. குறிப்பாக அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களில் கூட்டமைப்பு சில யோசனைகளை முன்வைத்திருக்கின்ற போதிலும், அரசாங்கம் அவை தொடர்பில் தன்னுடைய தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. சிங்களப் பேரினவாத அமைப்புக்களின் கோபத்துக்கு உள்ளாகக் கூடாது என்பதிலும் அரசாங்கம் அவதானமாகவே இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்
கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில் இன நெருக்கடித் தீர்வுக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கப் போவதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்தார். இந்தத் தெரிவுக்குழு மூலமாகவே இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்படும் எனவும் அவர் கூறினார். ஆனால், இது தொடர்பில் அரச தரப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குழப்பமானவையாகவே இருந்துள்ளன. இப்போது இந்தத் தெரிவுக்குழு விவகாரம் கேள்விக் குறியாகவே இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது பிரதான எதிர்க்கட்சியான ஐ.க்கிய தேசியக் கட்சியோ பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்படும் என்ற யோசனையை வரவேற்றவில்லை.


ரணில் விக்கிரமசிங்க
ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் இவ்வருட இறுதிக்குள் முடிவுக்கு வர வேண்டும் எனவும், அதன் மூலமாக ஏற்படக்கூடிய தீர்வை ஆதரிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது. இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை எற்படுத்தாத அதிகாரப் பகிர்வு யோசனையை அரசாங்கம் வருட முடிவுக்குள் முன்வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதேபோல இவ்வருட இறுதிக்குள் பேச்சுக்கள் முடிவுக்குக்கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதாகத் தெரிகின்றது.

மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரைக் கவனத்திற்கொண்டுதான் இவ்வாறு டிசெம்பருக்குள் அரசாங்கம் தனது தீர்வுத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுவதாகக் கருதலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருப்பதும், அங்கு இடம்பெறும் பேச்சுக்களும் கூட இதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதாகவே அமைந்திருக்கும்.

இந்தப் பின்னணியில்தான் வடமாகாண சபைக்கான தேர்தலை அடுத்த வருட முற்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது. இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு வந்த இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாயுடனான பேச்சுக்களின் போதும் வடமாகாண சபைக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். வடமாகாண சபைக்கான தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாகவும் இருந்தமையால்தான் இதனை ஜனாதிபதி இந்தியாவுக்குத் தெரிவித்திருந்தார்.

ரஞ்சன் மாத்தாய்
இந்தியாவைப் பொறுத்தவரையில், வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டுவிட்டதென்றால் தமிழகத்திலிருந்து கிளம்பக்கூடிய தமிழ் உணர்வாளர்களின் எழிச்சியைத் தடுத்துவிட முடியும் எனக் கருதுகின்றது. வடக்கு நிலை தொடர்பாகவும், போர்க் குற்றம் தொடர்பாகவும் கடுமையான ஒரு நிலைப்பாட்டை தமிழகம் எடுத்திருந்தது. வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் கீழ் மாகாண சபை நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுவிட்டால் தமிழகத்தில் காணப்படும் கொந்தளிப்பைத் தணிக்க முடியும் என்பது டில்லியின் கணக்கு! அதனால்தான் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் எனக் கூறி இந்தியாவைச் சாந்தப்படுத்த ஜனாதிபதி முயன்றிருக்கின்றார்.

இந்த இடத்தில்தான் முக்கியமான சில கேள்விகள் எழுகின்றன. 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய உணன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபை வடக்கும், கிழக்கும் இணைந்ததாக இருந்தது. அதற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அரசியலமைப்பின் மூலமாக வழங்கப்பட்டிருந்தது. இப்போது வடக்கும் கிழக்கும் பிளவுபடுத்தப்பட்டுவிட்டது. அத்துடன், அரசியலமைப்புக்கு முரணானவகையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுடன் இணைந்திருக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் காணி, பொலிஸ் அதிகாரங்களை இப்போது கேட்டகக்கூடாது எனச் சொல்கின்றார்கள். சிங்களவர்களைத் திருப்திப்படுத்துவதாகவே தீர்வு அமைய வேண்டும் எனவும் தமது நிலைப்பாட்டை அவர்கள் நியாயப்படுத்த முற்படுகின்றார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அதனைத்தான் இப்போது சொல்லியிருக்கின்றார்.

அரசுடனான நல்லிணக்க அரசியல் என்பது இதுதான் என்பது அரசுடன் இணைந்திருக்கும் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடாகவுள்ள நிலையில், காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத மாகாண சபைகள் எதற்காக என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத நிலையில் வடக்கு கிழக்கு மக்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அன்றாடச் செய்திகளாகியுள்ளன.

‘இப்போது இனை ஏற்றுக்கொள்வோம். பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” என்பதுதான் டக்ளஸின் நிலைப்பாடாக உள்ளது. மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவதானால் பாராளுமன்றத்தின் மூலமாக அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும். தற்போதுள்ள நிலையில் மாகாண சபையைத் தமிழ்க் கட்சிகள் ஏற்றுக்கொண்டுவிட்டால், அதற்கான அதிகாரங்களை எதிர்காலத்தில் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரும் என்பதை எவ்வாறு நம்ப முடியும்? மகாண சபை நிர்வாகத்தை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுவிட்டால் அதற்கான அதிகாரங்களைப் பெறுவதற்கான போராட்டங்கள் நலிவடைந்துவிடும் என அரச தரப்பு கருதுவதாகத் தெரிகின்றது.

இதேகேள்விதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கியும் கேட்கப்படுகின்றது. இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு எனக் கூறி வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்திமுடித்துவிடுவதுதான் அரசின் தற்போதைய திட்டம். 13 பிளஸ் பிளஸ் என ஜனாதிபதி சொன்னவை அனைத்தும் வெற்றுக்கோஷங்காகிவிட்டன என்பதும் தெரிகின்றது. இப்போது 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தில் இருப்பதைக் கூட வழங்க அரசாங்கம் தயாராக இல்லை என்பதைத்தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கூற்று உறுதிப்படுத்தியிருக்கின்றது. இந்தியாவும் தனது நலன்களைக் கருத்திற்கொண்டு இதனை ஆதரிக்கும் என்பதுடன் இதனை ஏற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் வலியுறுத்தலாம்.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கப்போகும் நிலைப்பாடு எவ்வாறானதாக இருக்கும்?

- சபரி
ஞாயிறு தினக்குரல் (30-10-2011)

No comments:

Post a Comment