Monday, August 8, 2011

சனல்-4 ஆவணப்படமும் சந்திரிகாவின் மகனும்...

'செம்மணிப் படுகொலைகள் இடம்பெற்ற காலத்தில் கமராவுடன் கூடிய கைப்பேசிகள் இருந்திருக்குமாயின் சந்திரிகா குமாரதுங்கவையும் அம்மா என்று சொல்ல வெட்கப்படுகின்றேன் என லண்டனிலுள்ள அவரது மகன் கூறியிருப்பாரா?"


நீதியரசர் கே.பாலகிட்ணரின் நினைவுச்சொற்பொழிவின் போது 'இலங்கையின் கொலைக்களங்கள்" தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிகழ்த்திய உணர்ச்சிகரமான உரையைப் படித்த நண்பர் ஒருவர் முகப் புத்தகத்தில் பதிவு செய்திருந்த விமர்சனம்தான் இது!

சனல்-04 தொலைக்காட்சி ஒளிபரப்பி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டுள்ள 'இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற தொலைக்காட்சி விபரணப்படம் தொடர்பாக சந்திரிகா வெளிப்படுத்திய கருத்துக்களைவிட அது தொடர்பான இந்த விமர்சனம் அதிகளவுக்கு உணர்ச்சிகரமானதாக அமைந்திருந்தது. அத்துடன் சந்திரிகாவின் உரையைப் படித்து மெய் மறந்துபோயுள்ளவர்களுக்குப் பல உண்மைகளை நினைவூட்டுவதாகவும் அமைந்திருந்தது.

கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த நினைவுப் பேருரையின் போது உணர்ச்சி வசப்பட்டவராக சந்திரிகா தெரிவித்த கருத்துக்கள் அனைத்து மொழிப் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டிருந்தது. அரசாங்கத்துக்கு ஒருவிதமான சங்கடத்தைக் கொடுப்பதாகவும் அவரது உரை அமைந்திருந்தது.

'இலங்கையின் கொலைக்களம் என்ற 50 நிமிட தொலைக்காட்சி ஆவணப்படத்தைப் பார்த்த எனது மகன் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அது தொடர்பாகத் தெரிவித்தார். ஒரு பௌத்தர், சிங்களவர் என்று சொல்லிக்கொள்வதற்கு இதனைப் பார்த்தபின்னர் தான் வெட்கப்படுவதாக அவர் சொன்னார். எனது மகளும் இதேபோன்ற கருத்தைத்தான் சொன்னார்கள். எனது பிள்ளைகளையிட்டு நான் பெருமைப்படுகின்றேன்" என்பதுதாhன் தனது உரையின் இறுதியில் சந்திரிகா அதிரடியாகச் சொன்ன தகவல்!

சந்திரிகாவின் இந்தக் கூற்றில் நிறைய விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. அதனால்தான் அதற்குப் பல இடங்களிலிருந்து எதிரொலிகள் கிளம்பிக்கொண்டுள்ளன. 'சந்திரிகாவின் மகனை இலங்கையர் எனக் கூற வெட்கப்படுகின்றேன்" என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்ட பின்னர் அரசியலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பதை சந்திரிகா குமாரதுங்க பெருமளவுக்குத் தவிர்த்தே வந்துள்ளார். பதிலாக சர்வதேச அரங்கில் தன்னுடைய அனுபவத்தையும், அறிவையும் பயன்படுத்திக்கொள்ளத்தக்க முயற்சிகளிலேயே அவரது கவனம் இருந்துள்ளது. குறிப்பாக கிளின்டன் குளோபல் இனிஷியேட்டிவ், கிளப் டி மற்றிட் போன்ற சர்வதேச பிரபலம் பெற்ற அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதிலேயே அவரது அக்கறை அதிகளவுக்கு இருந்தது.

முன்னாள் அரச தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள கிளப் டி மற்றிட், தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் காண்பதற்கு முன்னாள் அரச தலைவர்களின் அறிவையும், அனுபவத்தையும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டது. இதில் முன்னாள் அரச தலைவர்கள் பல இணைந்திருக்கின்றார்கள். இதில் இணைந்து செயற்படுவதன் மூலம் சர்வதேச ரீதியாக தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் சந்திரிகா நினைத்திருக்கலாம்.

இதனைவிட, உள்நாட்டு அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக்கிக்கொள்ளாமல் இவ்வாறான சர்வதேச நிறுவனங்களுடன் தன்னை இணைத்துக்கொள்வதற்கு சந்திரிகா விரும்பியமைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்! உள்நாட்டு அரசியல் தனக்கு சாதகமானதாக இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். அவர் தலைவியாக 12 வருட காலம் இருந்த கட்சியே இன்று அவருக்குச் சார்பாக இல்லை. உள்நாட்டு அரசியல் தொடர்பிலான அவரது மௌனத்துக்கு அதுவும் ஒரு காரணம்.

இந்த நிலையில்தான் நீதியரசர் பாலகிட்ணரின் நினைவுச் சொற்பொழிவின் போது தன்னுடைய நீண்டகால மௌனத்தை உடைந்துக்கொண்ட சந்திரிகா குமாரதுங்க சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சிலவற்றை முன்வைத்திருக்கின்றார். அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறைகள் பலவற்றையும் விமர்சிப்பதற்கான ஒரு மேடையாக இதனை அவர் பயன்படுத்திக்கொண்டார். குறிப்பாக போர் மற்றும் சமாதான முயற்சிகளில் அரசாங்கத்தின் அணுகுமுறை அவரது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியது.

போரில் அரசாங்கம் வெற்றிபெற்றிருந்தாலும், சமாதானத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கத்தினால் வெற்றிபெற முடியவில்லை என்பதுதான் அவரது கருத்தாக இருந்தது. 'சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, அபிவிருத்திப் பணிகளில் மட்டுமன்றி சிறுபான்மையினரையும் அதிகாரத்தைப் பகிர்வதற்கான அரசாங்கத்தின் செயற்பாடுகளில் சமத்துவமான பங்காளிகளாக இணைத்துக்கொள்ள வேண்டும்" என்பதை சந்திரிகா வலியுறுத்தினார்.

'தென்பகுதி மக்களிடம் ஆணையைப் பெற்றிருக்கும் அரசாங்கம், அதனைப் பயன்படுத்தி வடபகுதி மக்களிடம் தெளிவான ஒரு ஆணையை மீண்டும் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமாக இனநெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் சந்திரிகா இங்குதெரிவித்தார்.

இனநெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதற்கு சந்திரிகா குமாரதுங்கவுக்குக் கிடைத்ததைப் போன்ற சந்தர்ப்பம் இந்த நாட்டில் வேறு எந்த ஜனாதிபதிக்கும் கிடைக்கவில்லை. 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து இன மக்களினதும் ஆதரவைப் பெற்ற ஒருவராகவே அவர் ஜனாதிபதியாகத் தெரிவானார். அப்போது அவருக்கு சுமார் 64 வீதமான வாக்குகள் கிடைத்தன. வேறு எந்த ஜனாதிபதிக்கும் கிடைத்திருக்காத சந்தர்ப்பம் இது.

இதேபோல ரணில் விக்கிரமசிங்க பிரதமராகத் தெரிவான போது இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளை தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்திக் குழப்பியரும் சந்திரிகாதான். ஜனாதிபதியாக இருந்துகொண்டே இதனை அவர் செய்தார். இன்று தனது தந்தை அறிமுகப்படுத்திய தனிச் சிங்களச் சட்டம் போன்றவற்றையும் விமர்சிக்கும் அவர், தனது காலத்தில் இடம்பெற்ற தவறுகளை இன்னும் உணரவில்லையா? அல்லது அவற்றை உணர்ந்தாலும் சொல்லவிரும்பவில்லையா என்பது தெரியவில்லை.

அதிகாரத்தில் இருக்கும்போது, அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதும் அதற்காக எதிரணியினரைப் பலவீனப்படுத்துவதும் மட்டும்தான் தேவையாக இருக்கின்றது. அதனால், நாடு எந்தளவுக்கு மோசமான நிலைக்குச் செல்கின்றது என்பதை எந்தத் தலைவரும் சிந்திப்பதில்லை. அவ்வாறு சிந்திப்பவர்கள் யாராவது இருந்திருந்தால் இன நெருக்கடி என்பதே உருவாகியிருக்காது.

இந்த வகையில்தான் சந்திரிகா தெரிவித்த கருத்துக்களும் உள்ளன. சந்திரிகாவின் காலத்தில்தான் செம்மணிப் படுகொலைகள் இடம்பெற்றன. கிரிஷாந்தி குமாரசாமியின் படுகொலையும் அவரது காலத்தில்தான். இடம்பெற்றது. இதுபோன்ற பல சம்பவங்களைப் பட்டியல் போடலாம். ஆனால், சந்திரிகாவின் அதிர்ஷ்டம் அந்தக் காலத்தில் கமராவுடன் கூடிய கைப்பேசிகள்அறிமுகமாகியிருக்கவில்லை!

இப்போது மீண்டும் இக்கட்டுரையின் முதலாவது பந்தியைப் படியுங்கள்!

No comments:

Post a Comment