அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கம் இடையிலான பேச்சுக்கள் கடந்த வியாழக்கிழமை மாலை ஆரம்பமானபோது வழக்கம் போல எல்லாம் சுமூகமாகத்தான் இருந்தது. பாராளுமன்றத் தெரிவுக்குழு என்ற விடயத்தில் அரச தரப்பின் அக்கறை இப்போது அதிகமாக இருப்பதால் அதற்கான ஆதரவைப் பெறுவது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமாக இருந்தது. அரச தரப்பினர் அது தொடர்பாக விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்கள். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பிக்கை இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அரசாங்கத் தரப்பு முடிக்கட்டும் என பொறுமையாக இருந்தார்கள்.
அரசாங்கத் தரப்பு முடித்த பின்னர் தன்னுடைய உரையை ஆரம்பித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அந்த அதிர்ச்சிக் குண்டைத் தூக்கிப் போட்டார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று நிபந்தனைகளை விதிக்கின்றது. அவை நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு வார கால அவகாசம் தரப்படும். அதற்குள் அவை நிறைவேற்றப்படவில்லை என்றால் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொள்வதுதான் கூட்டமைப்பின் முடிவாக இருக்கும்" என்பதுதான் சம்பந்தனின் வெளியிட்ட அறிவிப்பின் சாராம்சம்! இந்த முடிவுக்கு தாம் வந்தமைக்கான காரணம் என்ன என்பதையும் சம்பந்தன் விளக்கினார். சம்பந்தனின் குரலில் உறுதி தெரிந்தது. அந்த உறுதி அரசுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஏழு மாதங்களுக்கும் மேலாக 10 சுற்றுப்பேச்சுக்களை நடத்தியும் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் நடைபெறவில்லை. இனநல்லிணக்கத்துக்கான முக்கிய படியாக தமிழர்களின் பிரதான பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துகின்றோம் என சர்வதேசத்தையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்கு அரசாங்கம் போடும் நாடகத்துக்கு தாமும் பங்குதாரிகளாக இருக்கக்கூடாது என்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த அதிரடியான முடிவுதான் இந்த நிபந்தனைகளும் காலக்கெடுவும். பேச்சுவார்த்தை மேசையில் இவ்வாறான ஒரு தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அறிவிக்கும் என்பதை அப்போது யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது உண்மை.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு கிழக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், வடக்கு கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைதல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பன தொடர்பாகவே கடந்த ஏழு மாத காலமாக நடைபெறும் பேச்சுக்களில் ஆராயப்பட்டது. இவை தொடர்பாக தமிழத் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் நடைபெறவில்லை. இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாமைக்கான காரணங்களையும் அரசாங்கம் தெரிவிப்பதில்லை. உண்மையில் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அரச தரப்பில் அக்கறை காட்டப்படவில்லை என்பதும் உண்மை!
இதனைவிட அரச தரப்ப கேட்டுக்கொண்டமைக்கு இணங்க, அரசியல் தீர்வுக்கான அடிப்படைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது. இது தொடர்பில் அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரச தரப்பு நிறைவேற்றவில்லை. பேச்சுவார்த்தை ஒன்றுக்குச் செல்லும் போது அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துவது அவசியம். ஜனாதிபதி 13 பிளஸ் என அடிக்கடி கூறுகின்றார். ஹெட்லைன் ருடே தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பாதுபாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ தற்போதுள்ள அரசியலமைப்பில் மாற்றம் தேவையில்லை என்று அறிவித்திருக்கின்றார். அரச தரப்பிலிருந்து முரண்பாடான கருத்துக்களே வெளிவருகின்றது. தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை அரச தரப்பு தெளிவாக வெளிப்படுத்தத் தவறியமையால் அரசியல் தீர்வு தொடர்பில் காத்திரமான பேச்சுவார்த்தை எதனையும் முன்னெடுக்க முடியவில்லை. இவற்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது தெரியப்படுத்தியிருக்கின்றது.
வடபகுதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று மக்களுடைய அங்கீகாரத்தைப் பெற்று பலமாக உள்ள ஒரு நிலையிலேயே 3 நிபந்தனைகளுக்காக காலக்கெடு ஒன்றை முன்வைப்பது என்ற இந்த முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கின்றது.உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் பின்னர் இடம்பெறும் முதலாவது பேச்சுவார்த்தை இதுதாhன் என்பதும் கவனிக்கத்தக்கது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் பின்னர் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும் ஒரு நிலையில்தான் பேச்சுக்களில் தொடர்வதற்கான நிபந்தனைகளை கூட்டமைப்பு முதல் தடவையாக விதித்திருக்கின்றது.
கூட்டமைப்பின் இந்த அறிவிப்பு அரசாங்கத்துக்கு ஒரு அதிர்ச்சிவைத்தியமாக அமைந்திருந்தது. தன்னுடைய நிலைப்பாட்டை கூட்டமைப்பு தெளிவாக அறிவித்திருக்கும் நிலையில் பந்து இப்போது அரசாங்கத்தின் பக்கத்துக்குச் சென்றுள்ளது. இவ்விடயத்தில் தெளிவான பதிலைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அரச தரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த சஜின் வாஸ் குணவர்த்தன வெளியிட்டுள்ள அறிவிப்புக்கள் வெறுமனே உணர்ச்சிவசப்பட்டவையாகவும், சிங்கள இனவாதத்தைத் துண்டிவிடுவதாகவும் இருந்ததே தவிர கூட்டமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான உறுதியான பதிலாக இருக்கவில்லை.
கூட்டமைப்பின் கோரிக்கைகள் விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை ஒத்தவையாக உள்ளன எனவும், கூட்டமைப்பினரும் புலிகளின் பாணியில் காலக்கெடுக்களை விதிக்கின்றார்கள் எனவும் சஜின் வாஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். சஜின் வாஸைப் பொறுத்தவரையில் அவர் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர் என்ற முறையிலேயே இந்தப் பேச்சுக்களில் கலந்துகொள்கின்றார். ஆனால், இன நெருக்கடியை நீண்டகாலமாகக் கையாண்டுவரும் சிரேஷ்ட அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரும் இந்தப் பேச்சுக்களில் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கும் நிலையில், அவர்கள் மௌனம் காக்க சஜின் மட்டும் எதற்காக இவ்வாறு முழக்கமிடுகின்றார் என்பது தெரியவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்பதில் அரச தரப்பு ஆரம்பம் முதல் அக்கறை காட்டவில்லை. சிங்கள இனவாதத்தையே தமது அரசியலுக்கான அடிப்படையாகக் கொண்டதாக உள்ள அரசாங்கத்துக்கு இவ்வாறான பேச்சுகளுக்குச் செல்வது ஏற்புடையதாக இருக்காது என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். இருந்தபோதிலும், இந்தியாவின் அழுத்தமும், போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் அழுத்தங்களும்தான் இவ்வாறான பேச்சுவார்த்தைக்குச் செல்வதற்கான நிர்ப்பந்தத்தை அரசுக்கு ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், தீர்மானம் எடுக்கக்கூடியளவுக்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளவர்களை இந்தப் பேச்சுக்களுக்கு அரசாங்கம் அனுப்பவில்லை. ஒவ்வொரு பேச்சுவார்தையின் போதும் இணக்கம் காணப்பட்ட விடயங்களை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்கான விளக்கத்தைக் கூறுவதாகவே அடுத்த கட்டப் பேச்சுக்கள் இருந்துள்ளன. உதாரணமாக கைதிகளின் விபரங்கள் வெளியிடப்படும் என்ற வாக்குறுதி இரண்டாம் கட்டப் பேச்சுக்களின் போது ஆராயப்பட்டு இணக்கம் காணப்பட்ட போதிலும், பத்தாவது கட்டப்பேச்சுக்கள் இடம்பெறும் போது கூட அது நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு என்ற யோசனையை அரசாங்கம் முன்வைத்தது. பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமாகத்தான் அரசியல் தீர்வை அரசாங்கம் காணப்போகின்றது என்றால் அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை எதற்காக என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக கூட்டமைப்பு கேள்வி எழுப்பிய போது, அரசு - கூட்டமைப்பு பேச்சுக்களில் இணக்கம் காணப்படும் விடயங்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்வைக்கப்படும் என அரச தரப்பு பதிலளித்திருந்தது. இருந்தபோதிலும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான வரையறைகளில் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு மற்றும், அதிகாரப் பரவலாக்கல் திட்டம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அரசு - கூட்டமைப்புப் பேச்சுக்களில் இறுக்கத்தை ஏற்படுத்திய காரணிகளில் ஒன்றாக இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழு விவகாரமும் இருந்தது.
கூட்டமைப்பு பேச்சுக்களிலிருந்து விலகிக்கொள்ளுமானால் - பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாகவே இன நெருக்கடிக்குத் தீர்வு காணபபடும் என அரச தரப்பில் இப்போது கூறப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும், அரசின் இந்த நிலைப்பாட்டை சர்வதேச சமூகமோ இந்தியாவோ ஏற்றுக்கொள்ளும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்களை வரவேற்று லோக்சபாவில் அறிக்கை ஒன்றை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வெளியிட்டு 24 மணி நேரத்துக்குள் பேச்சுக்களிலிருந்து விலகுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கின்றது.
கடந்த ஏழு மாத காலமாக இடம்பெறும் பேச்சுக்களில் என்ன நடைபெறுகின்றது என்பதை இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வப்போது விளக்கியே வந்திருக்கின்றது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தின் பின்னணியை அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். பேச்சுவார்த்தையின் அவசியத்தை இந்தியத் தரப்பினரும் அரசுக்கும், கூட்டமைப்புக்கு அவ்வப்போது உணர்த்திவந்திருக்கின்றார்கள் என்பதும் உண்மை. பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு இந்தியா கொடுத்த அழுத்தங்கள்தான் அடிப்படையாக அமைந்திருந்தது என்பதும் உண்மை. ஆனால், தற்போது கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவின் பின்னணியில் யாரும் இல்லை எனவும், குறிப்பாக இந்தியா இல்லை எனவும் இது கூட்டமைப்பினரால் தனித்து எடுக்கப்பட்ட ஒரு முடிவு எனவும் கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
இருந்த போதிலும், இந்த முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் அதற்கான காரணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துக்கு விளக்கிவருகின்றது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தமது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கியிருப்பதுடன், அது தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையையும் கையளித்திருக்கின்றது. இதேபோல மேற்குலகுக்கு நிலைமைகளை விளக்குவதும் கூட்டமைப்பின் திட்டமாக உள்ளது. இது அரசுக்கு சர்வதேச அழுத்தங்களை அதிகரிப்பதாக அமையும். இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்துக்குப் பதிலளிப்பது என்பது அரசுக்குக் கடினமானதொன்றாகவே இருக்கும்.
விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றததகத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துவரும் ஒரு நிலையிலேயே கூட்டமைப்புடனான பேச்சுக்களை அரசு ஆரம்பித்தது. சிறுபான்மையினரின் அபிலாஷைகளை நிறைவேற்றுதற்கு நாம் தயாராக உள்ளோம் எனக் காட்டிக்கொள்வதன் மூலம் போர்க் குற்றச்சாட்டுக்களை வலுவிழக்கச் செய்ய முடியும் என்பதும் அரசின் உபாயமாக இருந்தது. போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாகக் காணப்படும் அக்கறைகள் மேலும் வலுவடைந்துவரும் ஒரு நிலையில் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடு அரசுக்கு அதிகளவு நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக அமையும்.
அதேவேளையில், ஜெயலலிதாவின் வருகையின் பின்னர் இந்தியத் தரப்பின் நிலைப்பாடும் கடினமானதாகவே சென்றுகொண்டிருக்கின்றது. போர்க் குற்றங்கள் தொடர்பில் அண்மைக்காலம் வரையில் மௌனமாக இருந்த புதுடில்லி இப்போது அவை தொடர்பாக தனது கரிசனையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. சர்வதேச ரீதியாகக் காணப்படும் இந்த நிலைமைகளையும் கவனத்திற்கொள்ளாமல் கூட்டமைப்பு தனது காய் நகர்த்தல்களை மேற்கொண்டிருக்கும் என எதிர்பார்க்க முடியாது.
கூட்டமைப்பின் அறிவிப்பு அரசை ஒரு நெருக்கடியான நிலைக்குத் தள்ளுவதாகவே அமைந்துள்ளது. சஜின் வாஸ் வெளியிட்டது போன்ற அறிவிப்புக்களைவிட நிதானமான முறையில் பிரச்சினைகளை அரசாங்கம் அணுகுகுவதுதான் இன்றைய தேவை!
- சபரி. (ஞாயிறு தினக்குரல்)
No comments:
Post a Comment