Monday, February 20, 2017

அலரி மாளிகை பேச்சுக்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடு எதுவுமின்றி முடிவடைந்திருக்கின்றது. தோல்வியில் பேச்சுக்கள் முடிவடைந்திருப்பது அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை முற்றாக இழந்திருக்கின்றார்கள். இது வெளிப்படையாத் தெரிகின்றது. அதனால்தான் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் வவுனியாவில் ஆரம்பித்தார்கள். அலரி மாளிகைப் பேச்சுக்களில் ஓரளவுக்காவது நம்பிக்கை வைத்தார்கள். உண்ணாவிரதத்தை இடைநிறுத்தி கொழும்புக்கு அவர்கள் வந்தது அந்த நம்பிக்கையில்தான். அலரி மாளிகை பேச்சுக்களும் இப்போது தோல்வியில் முடிந்திருக்கின்றது.

போர்க்காலத்தில் உருவான இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, போரின் முடிவுடன் தீவிரமடைந்தது.  30 ஆயிரம் பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் சொல்கின்றது. இதில் பெரும்பாலானவர்கள் படையினரிடம் சரணடைந்தவர்கள், அல்லது கைதானவர்கள். மேலும் சிலர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் உள்ள சிலர் ஆயுதப் படையினரால்தான் கடத்தப்பட்டிருந்தார்கள். இதனை நீதிமன்ற விசாரணைகள் கூட வெளிப்படுத்திவருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் படையினரே பின்னணியில் இருந்துள்ளார்கள் எனக் கூறுவதற்கு இதனைவிட மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. இந்த நிலையில், படையினரைப் பாதுகாக்கும் வகையில்தான் அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற கேள்வியைத்தான் அலரிமாளிகைப் பேச்சுக்களும் எழுப்புகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை விசாரணை செய்வதற்கு பல குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு மேலும் கால அவகாசம் தேவை எனவும் அலரி மாளிகைப் பேச்சுக்களின் போது அரசாங்கத் தரப்பால் சொல்லப்பட்டது. இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. விசாரணைகள் நடைபெற்றன. அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த அறிக்கைகளும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டன. இவ்வளவுக்குப் பின்னரும் "குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். கால அவகாசம் தேவை" என அவராங்கம் சொல்லிக்கொள்கின்றது. இது வெறுமனே காலத்தைக் கடத்துவதற்கான ஒரு உபாயமாக மட்டுமே இருக்க முடியும். இந்தக் காலங்கடத்தும் அரசாங்கத்தின் உபாயங்களால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்கனவே விரக்தியடைந்திருக்கின்றார்கள். மீண்டும் கால அவகாசத்தை அரசாங்கம் கேட்டபோதே அவர்கள் சீற்றமடைந்தார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் படையினர் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது அரசாங்கத்துக்குத் தெரியாததல்ல. அது குறித்த விசாரணைகளை முன்னெடுக்கச் சென்றால், "போர் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோரை அரசாங்கம் காட்டிக்கொடுக்கின்றது" என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும். அதனைத்தான் ராஜபக்‌ஷ அணியினரும் எதிர்பார்த்துள்ளார்கள். உள்நாட்டு அரசியலுக்கு அது அவர்களுக்குத் தேவையாகவுள்ளது. மைத்திரியை வீழ்த்துவதற்கு அவர்களிடம் இருக்கின்ற ஒரு துரும்புச் சீட்டு அது. அதனால் என்ன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் இறங்கிவரும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. காலத்தைக் கடத்துவதற்காக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படலாம். காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவரவில்லை என இந்தக் குழுக்கள் கையை விரிப்பதற்கு அப்பால் எதுவும் நடைபெறப்போவதில்லை.

அதனால்தான், சர்வதேச விசாரணையைக் கோரி போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதனைக் கவரும் வகையில் இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பதுதான் அவர்களின் திட்டம் எனத் தெரிகின்றது. ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவுமே அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பில் ஜெனீவாவிலிருந்து மேலும் அழுத்தங்கள் வரும் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதாக இல்லை. மைத்திரி - ரணில் அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கு மேற்கு நாடுகள் தயாராக இல்லை என்பதும் தெரிகின்றது. இதனைப்பயன்படுத்தி மேலும் இரு வருடகால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் சொல்லப்படுகின்றது.

இவற்றைப் பார்க்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஆதங்கம் எந்தளவுக்குக் கவனத்தைப் பெறும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். போரில் இடம்பெற்ற மிகப்பெரிய மனிதாபிமானப் பிரச்சினை காணாமல் ஆக்கப்படுதல்தான். அவர்களின் உறவினர்களின் துயரம் அளவிட முடியாதது. புறக்கணிக்க முடியாததது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான முழு உரிமையும் அவர்களுக்கு உள்ளது. அது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் கொல்லப்பட்டிருந்தால், யாரால், எப்போது எதற்காகக் கொல்லப்பட்டார்கள் என்பது தெரிவிக்கப்பட வேண்டும். அதற்கான நீதி விசாரணை வேண்டும். அதற்குரிய நட்டவீடு வழங்கப்பட வேண்டும். உள்நாட்டு விசாரணை ஒன்றின் மூலம் அவை நடக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. அதனால்தான் சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதை உறவினர்கள் சொல்கின்றார்கள். அலரி மாளிகைப் பேச்சுக்களின் முடிவும் இதனைத்தான் உணர்த்துகின்றது. 
(ஞாயிறு தினக்குரல் 2017-02-12)

ஜெனீவாவை கூட்டமைப்பு பயன்படுத்திக்கொள்ளுமா?



0 உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் அண்மைக்காலத்தில் நடைபெறப்போவதில்லை
0 சர்வஜன வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள தயாராகவில்லாத ஶ்ரீல.சுதந்திரக் கட்சி
0 வழிநடத்தல் குழுவில் இணக்கப்பாடு ஏற்படாதுள்ள 2 விடயங்கள்
0 13 க்குள்தான் தீர்வு என்றால் கூட்டமைப்பு எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன?

- பாரதி -

மைச்சர் லக்ஷமன் கிரியெல்லை தெரிவித்த இரண்டு கருத்துக்கள் அரசியலரங்கில் சர்ச்சைகைளையும், வாதப் பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாவே அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் எனவும், அதற்கு மேல் ஒரு அங்குலம் கூட செல்லப்போவதில்லை எனவும் அவர் தெளிவாகக் கூறிவிட்டார். இதனைவிட, மக்கள் கருத்தை அறிவதற்காக புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் எனவும் அவர் சொல்லியிருக்கின்றார். அதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் அடித்துக் கூறுகின்றார். ஆனால், "இது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல. அரசாங்கத்தில் இருக்கும் .தே..வின் நிலைப்பாடுதான் இது. சர்வஜனவாககெடுப்புக்கு ஶ்ரீல.சு.. ஆதரவளிக்கப்போவதில்லை" என அக்கட்சி பிரமுகர் ஒருவர் சொல்கின்றார். ஆக, தெளிவை விட குழப்பங்களே அதிகரிக்கின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் தீர்வு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை கிரியெல்லையின் அறிவிப்பு மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே கொள்ள முடியும்.

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் மந்த கதியில் சென்றுகொண்டிருக்கின்றது. கடந்த 7,8,9 ஆம் திகதிகளில் வழிநடத்தல் குழு கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 7 ஆம் திகதி கூடியபோது ஶ்ரீல.சு.க. மேலும் காலஅவகாசம் கேட்டதால் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு இது ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 21 ஆம் திகதியாவது ஶ்ரீல.சு.க. தமது யோசனைகளை முன்வைக்குமா என்பது நிச்சயமற்றதுதான். புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஒரு வரி கூட இதுவரை எழுதப்படவில்லை என உத்தியோகபூர்வமாகச் சொல்லப்படுகின்ற போதிலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முன்வைத்துவருகின்றார்கள். "சாதாரண மக்களும் புரிந்துகொள்ளத்தக்கவகையில் எழிமையான மொழியில் புதிய அரசியலமைப்பை எழுத வேண்டும்" என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியிருப்பதாக கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

மைத்திரியின் நோக்கம்

ைத்திரி இவ்வாறு சொல்லியிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல. புதிய அரசியலமைப்பு தொடர்பில் சிங்கள மக்களைக் குழப்பும் வகையில் மகிந்த ராஜபக் செயற்பட்டுவருகின்றார். நாட்டைப் பிளவுபடுத்துவதற்காகத்தான் இந்த அரசியலமைப்பு என்ற பிரச்சாரம் அவரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வழிநடத்தல் குழுவில் கூட்டு எதிரணியைப் பிரதிநித்துவப்படுத்துபவர்கள் கூட இவ்வாறான பிரச்சாரத்தைத்தான் முன்னெடுக்கின்றார்கள். இந்த நிலையில், புதிய அரசியலமைப்பு குறித்து சிங்கள மக்களை யாரும் குழப்பக்கூடாது என்ற நோக்கத்துடன்தான் இவ்வாறான அறிவுறுத்தலை மைத்திரி விடுத்திருக்கின்றார். மைத்திரியின் எதிர்பார்ப்பின்படி பார்த்தாலும் 13 க்கு மேல் செல்ல வாய்ப்பில்லை. ஶ்ரீல.சு.. அது தொடர்பில் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டது. இந்த ஒரு புள்ளியில் மட்டும்தான் .தே..வும், ஶ்ரீல.சு..வும் சந்திக்கின்றன. 13க்கு மேல் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதைத்ததான் லக்ஷமன் கிரியெல்லையின் அறிவிப்பும், மைத்திரியின் அறிவுறுத்தலும் உணர்த்துகின்றன.

அரசியலமைப்பு சீர்திருத்தம் 3 நோக்கங்களுக்காகச் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றுதான் அதிகாரப் பரவலாக்கல். அதனைப் பொறுத்தவரையில் 13 க்குள் தீர்வு என்பதில் இரு பிரதான கட்சிகளுடன் மகிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணியும் இணங்கிப்போய்விடும். கூட்டமைப்பின் தலைமையும் அதற்கு மேலாக எதனையும் வலியுறுத்தும் என்பதையும் எதிர்பார்க்க முடியாது. ஏனைய இரு விடயங்களைப் பொறுத்தவரையிலும், முரண்பாடுகள் நீடிப்பதாவே தெரிகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதில் காணப்பட்ட கருத்தொருமைப்பாடு இப்போது காணாமல்போய்விட்டது. ஶ்ரீல.சு..வின் மைத்திரி பிரிவினர் ஜனாதிபதி முறை தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டை இப்போது எடுத்திருக்கின்றார்கள். கட்சிக்குள் உருவாகியிருக்கும் பிளவு இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்தநிலை வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகளை மேலும் காலதாமதப்படுத்துவதாகவே இருக்கும்.

இதேபோலத்தான் தேர்தல் முறை மாற்றம் குறித்தும் இணக்கப்பாடு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. தற்போதைய தேர்தல் முறை மாற்றப்படுவதை .தே..விரும்பவில்லை. முன்னைய தேர்தல் தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையைத்தான் ஶ்ரீல.சு.. விரும்புகின்றது. இரண்டையும் இணைத்த கலப்பு தேர்தல் முறை தொடர்பில் முழு அளவிலான இணக்கம் எதுவும் இதுவரையில் ஏற்பட்டுவிடவில்லை.  உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுவிட்ட போதிலும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் இப்போதைக்கு நடைபெறப்போவதில்லை. சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இதனை தினக்குரலுக்கு நேற்றைய தினம் உறுதிப்படுத்தியிருக்கின்றார். தேசிய அரசில் உள்ள இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளும், மகிந்த ராஜபக் தரப்பினரது செயற்பாடுகளும்தான் இதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சர்வஜன வாக்கெடுப்பு?

இவ்வாறு முரண்பாடுகள் நிறைந்திருக்கும் நிலையில் (13க்குள் அதிகாரப்பரவலாக்கல் என்பதைத் தவிர) பிரதான 2 விவகாரங்கள் தொடர்பில் வழிநடத்தல் குழுவில் இணக்கப்பாடு எதுவும் ஏற்படப்போவதில்லை. மேலும் காலதாமதப்படுத்தப்படும் நிலைதான் காணப்படுகின்றது. அதேவேளையில், புதிய அரசியலமைப்பு சர்வஜனவாக்கெடுப்புக்கு விடப்படும் என்ற கருத்தை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லை முன்வைத்திருக்கின்றார். இதுவும் சர்ச்சைக்குரய ஒன்றாகத்தான் உள்ளது. 13க்கு மேலாகச் செல்ல வேண்டும் என்றால் அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டும் என்றால் மட்டுமே சர்வஜனவாக்கெடுப்பு அவசியம் என அரசியலமைப்பு நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஜனாதிபதி மைத்திரிபால தரப்பினர் இதற்குத் தயாராகவில்லை என்பது தெரிகின்றது. வழிநடத்தல் குழுவில் உள்ள ஶ்ரீலசு.. அமைச்சர்கள் பலரும் இதனை எதிர்ப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று: ஶ்ரீல.சு..வில் இப்போது உருவாகியிருக்கும் தலைமைத்துவ முரண்பாடுகளால் 'ஜனாதிபதிப் பதவி' தொடர்ந்தும் இருப்பது தமக்குப் பாதுகாப்பானது என மைத்திரி தரப்பினர் கருதுகின்றார்கள். இரண்டாவது: சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதை 'றிஸ்க்'கான ஒரு விடயமாக அவர்கள் கருதுகின்றார்கள். இதில் தோல்வியடைந்தால் அரசாங்கம் பதவி விலக நிர்ப்பந்தம் கொடுக்கப்படலாம். சர்வஜன வாக்கெடுப்பு என்பது வெறுமனே குறிப்பிட்ட விடயத்துடன் நிற்பதாக இருக்காது. அரசங்கத்துக்கான ஆதரவை அளவிடுவதாகவும் இருக்கும். விலைவாசி உயர்வு உட்பட பல விடயங்கள் இதில் செல்வாக்கைச் செலுத்தும். அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ராஜபக் தரப்பினர் களத்தில் இறங்கி கடுமையாக உழைப்பார்கள். அந்த றிஸ்க்கை எடுப்பதற்கு மைத்திரி தரப்பு தற்போதைக்குத் தயாராகவில்லை என்பதுதான் உண்மை.

கூட்டமைப்பின் நிலை

உருவாகியிருக்கும் முரண்பாடுகளைப் பார்க்கும் போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதிகாரப்பரவலாக்கல் தெடர்பில் தற்போதுள்ள 13 வது திருத்தத்துக்கு மேலாக எதுவும் இடம்பெறப்போவதில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மாற்றப்படப்போவதில்லை. ஜனாதபதி ஆட்சி முறை தொடர்பான மைத்திரி தரப்பின் இந்த நிலைப்பாட்டுக்கு சிறுபான்மையினக் கட்சிகளும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆக, தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதில் மட்டும்தான் பொது இணக்கப்பாடு உள்ளது. அதுவும் கூட எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதில் முரண்பாடுகள் தொடர்கின்றன. இதனால்தான், அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது தேர்தல் முறையை மாற்றுவதற்கான 20 வது திருத்தத்துடன் முடிந்துவிடலாம் என முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தோம்.

இவ்வாறு நடைபெறும் நிலையில் கூட்டமைப்பு என்ன செய்யும் என்ற கேள்வி பரவலாகவுள்ளது. கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களாகவுள்ள சம்பந்தனும், சுமந்திரனும் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. "தமிழ் மக்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் நாம் ஏற்கப்போவதில்லை" என அடிக்கடி சொல்லும் சம்பந்தன் அதற்கு மேல் ஒன்றும் சொல்வதாக இல்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகளும், அது குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடும் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவை அதிகரிப்பதாகவும், அவர்களுடைய பிரச்சாரங்களை நியாயப்படுத்துவதாகவுமே உள்ளது. மட்டக்களப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வுக்கு கிடைத்த அமோக ஆதரவும் இதன் பிரதிபலிப்புதான்! காலம் கடத்தப்படும் நிலையில் தீர்வுக்கான வாய்ப்புக்களே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.

இம்மாத இறுதியில் மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. இலங்கை விவகாரமும் அதில் வரப்போகின்றது. இவையெல்லாம் அரசின் மீது அழுத்தத்தைக் கொடுப்பதற்காக கூட்டமைப்புக்குக் கிடைத்திருக்கும் துரும்புச் சீட்டுகள். கையில் இருக்கும் துரும்புச் சீட்டு. 16 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கூட்டமைப்பிடம்தான் எதிர்க்கட்சித் தலைமையும் உள்ளது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தும் அவர்களுக்குத்தான் உள்ளது. இது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு சர்வதேச அந்தஸ்த்து. இதனைக் கூட்டமைப்பு பயன்படுத்துமா
(ஞாயிறு தினக்குரல் 2017-02-12)