யாழ்ப்பாணம், நல்லூர் கோவிலில் கும்பிட்டுக்கொண்டிருக்கும் போதுதான் அந்த அதாசாதாரண காட்சியைக் காணக்கூடியதாக இருந்தது.
அருகே நின்று நல்லூர் கந்தனை வழிபட்டுக்கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். அதில் பெரும்பாலானவர்கள் பௌத்த விகாரை ஒன்றுக்குச் செல்லும் பாணியில் கைகளில் மலர் தட்டுக்களுடன் வந்திருந்தார்கள். பௌத்த பிக்குகளையும் இந்தக் கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.
இவர்கள் கும்பிட்டுக்கொண்டிருந்தர்கள் என்று சொல்வதைவிட கோவில் சுற்றுவட்டாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும்.
நல்லூர் சுற்றுவட்டாரங்களில் தற்போது சிங்கள மக்களுடைய நடமாட்டமே அதிகளவுக்கு இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தேர்தலில் வாக்கு வேட்டைக்காக வந்த சிங்கள அரசியல்வாதிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் சிங்களவர்களின் எண்ணிக்கை தற்போது பெருமளவுக்கு அதிகரித்திருக்கின்றது.
யாழ்ப்பாணம் வரும் சிங்களவர்கள் எல்லோருமே தமது விஜயத்தின் முதலாவது கட்டமாக நல்லூர் கந்தசுவாமி கோவிலைத் தரிசிக்க அல்லது பார்வையிட வருவார்கள். அதனால் நல்லூர் சுற்றுவட்டாரங்களில் நின்றுகொண்டால் தினசரி யாழ்ப்பாணத்துக்கு எவ்வளவு சிங்களவர்கள் வந்து செல்கின்றார்கள் என்பதை ஓரளவுக்குக் கணக்கிட்டுக்கொள்ள முடியும்.
ஏ-9 பாதை திறக்கப்பட்டு சுதந்திரமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டடுள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் வந்து செல்பவர்களில் சிங்கள மக்கள்தான் அதிகம் என்பதை யாழ்ப்பாணம் சென்ற போதுதான் காணக்கூடியதாக இருந்தது.
தென்பகுதியிலிருந்து குறைந்த பட்சம் 25 பஸ்களிலாவது சிங்களவர்கள் நாளாந்தம் குடாநாட்டுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைவிட ஹைஎஸ் வான்கள், பஜிரோக்கள் போன்றவற்றிலும் சிங்களவர்கள் பெருமளவுக்கு யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கின்றார்கள்.
உடனடியாகவே சிங்களவர்கள் இந்தக் குழுக்களில் இணைந்துகொள்வதுடன், விருப்பத்துடன் யாழ்ப்பாணம் வருவதாக அவ்வாறு சென்றுவந்த ஒருவர் தெரிவித்தார்.
நல்லுர் கந்தசுவாமி கோவிலில் ஆரம்பமாகும் இவர்களுடைய யாழ்ப்பாணப் பயணம், யாழ் நகரிலுள்ள நாகவிகாரை, நயினாதீவு, தென்மராட்சி என விரிவடைந்துகொண்டு செல்லும். குடாநாட்டிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கும் இவர்கள் செல்கின்றார்கள். இதனைவிட கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரையும் இவர்களுடைய கவனத்துக்குரிய முக்கிய இடமாக உள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள தங்கு விடுதிகள் அனைத்துமே 'ஹவுஸ் ஃபுல்"லாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் பாடசாலைகளிலும், சிலர் துரையப்பா விளையாட்டரங்கிலும் கூட தங்கியிருப்பதாகத் தெரிகின்றது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள பல வீடுகள் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் வீடுகளுக்கு பலத்த கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.
சமையல் பாத்திரங்களுடன் அரிசி, பருப்பு, உப்பு, கருவாடு என எல்லாவற்றையுமே கொண்டுவரும் இவர்கள் தாம் தங்கியிருக்கும் இடங்களில் அடுப்புமூட்டி சொந்தமாகச் சமைத்துத்தான் சாப்பிடுவார்கள். சாப்பாட்டுக் கடைகளில் போய் சாப்பிடுபவர்களைக் காண முடியாது.
யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களுடைய வருகை அதிகரித்திருப்பதற்குச் சமாந்தரமாக சிங்கள வர்த்தகர்களும் பெருமளவுக்குக் கடை விரித்துள்ளார்கள். வீட்டுத் தளபாடங்களிலிருந்து, சிறிய சிறிய பொருட்கள் வரையில் சந்தையில் நிறைந்துள்ளன. சிறிய ரக தோடம்பழம் குவிந்துகிடக்கின்றது. யாழ்ப்பாணத்தில் தினசரி ஒன்பது லட்சம் ரூபாவுக்கு இந்தத் தோம்பழம் விற்பனையாகின்றது.
சிங்களவர்களின் அதிகரித்த வருகையுடன் யாழ்ப்பாணப் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பிலும் பல மாறுதல்கள் திடீரென உருவாகத் தொடங்கியுள்ளது. யாழ். நகரின் மத்தியிலுள்ள வீதியோரக் கடைகளில் விலைப் பட்டியல் அறிவித்தல்கள் அனைத்தும் சிங்கள மொழியில் மட்டுமே வைக்கப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
உதாரணமாக வீதியோரங்களில் தோடம்பழங்களைக் குவித்து வைத்திருப்பவர்கள் சிங்கள மொழியில் மட்டுமே விலைகளைக் குறித்துவைத்துள்ளார்கள்.
யாழ். நகரிலும், நல்லூர் கோவிலை அடுத்துள்ள பகுதிகளிலும் கடை வைத்திருப்பவர்கள் மத்தியில் இதனால் ஒரு புதிய போட்டி உருவாகியிருக்கின்றது. சிங்கள மொழி தெரிந்தால்தான் அவர்களால் தமது வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்துக்கொள்ள முடியும். அதனால் சிங்களம் தெரிந்த பணியாளர்களைப் பலரும் தேடத் தொடங்கியுள்ளார்கள்...
யாழ்ப்பாண சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் மாற்றங்களை உள்வாங்கி அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக்கொள்ணளும் தன்மையைக் கொண்டவர்கள்.
இதனால் சிங்களவர்களின் அதிகரித்த வருகையால் ஏற்படும திடீர்ப்; பொருளாதார வாய்ப்புக்கள் சமூகத்தில் ஆரோக்கியமற்ற மாற்றங்களை உருவாக்கக்கூடிய ஆபத்துக்கள் உள்ளது. இதனையிட்டு சமூகவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
சிங்களவர்களின் அதிகரித்த வருகையையிட்டு யாழ்ப்பாணத் தமிழர்கள் பாதகமான ஒரு மனநிலையை வெளிப்படுத்தவில்லை. யாழ்ப்பாணத்தில் சிங்கள மகாவித்தியாலயம் ஒன்று ஏற்கனவே இயங்கியது. 1977 வரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் பெருமளவுக்குக் கல்வி கற்றுள்ளார்கள்.
ஆனால், தற்போது அதிகரிக்கும் சிங்களவர்களின் வருகையின் பின்னால் உள்ள அரசியல்தான் தமிழர்களின் இதயங்களைத் தாக்குகின்றது. போரின் மூலமாக தாம் வெற்றி கொண்ட தமிழர்களின் தலைநகரையும் அந் நகரத்து மக்களையும் பார்வையிடுகின்றோம் என சிங்களவர்களின் மனதில் காணப்படும் ஒருவித இறுமாப்புத்தான் தமிழர்களின் இதயங்களைப் பிளப்பதாக இருக்கின்றது.
அதாவது போர் வெற்றியின் அடுத்த கட்டமாகத்தான் அவர்களுடைய இந்த யாழ்ப்பாண விஜயங்கள் அமைந்துள்ளன.
இதன் பின்னணியிலுள்ள ஒரு பொருளாதாரச் சுரண்டல் பற்றி அடுத்த வாரம்..
No comments:
Post a Comment