யாழ்ப்பாணத்தில் கொஞ்ச நாட்களுக்கிடையில் பத்துக்கும் அதிகமான வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றத்தைக் காணலாம் எனவும் நண்பர் ஒருவர் சொன்னதைக் கேட்டபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
யாழ்ப்பாணப் பத்திரிகைகளை அண்மைக்காலத்தில் பார்க்கும் போது இந்தச் செய்தியை உறுதிப்படுத்த முடிகின்றது. வங்கிக் கிளைகளின் திறப்புவிழா பற்றிய முழுப்பக்க அரைப்பக்க விளம்பரங்களை இந்தப் பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்க முடிகின்றது.
கொழும்பில் தலைமையகங்களைக் கொண்டுள்ள அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு யாழ்ப்பாணத்தில் கடை பரப்புவதற்குக் காரணம் என்ன?
போர் முடிவடைந்திருக்கும் நிலையில் யாழ்ப்பாண மக்களுக்காக வங்கிச் சேவையை வளங்க கிளைபரப்புவதாகக் கூறிக்கொள்ளும் இந்த நிறுவனங்கள் தம்மீது கொண்டுள்ள அக்கறையையிட்டு யாழ்ப்பாணத் தமிழர்கள் சிலர் மெய்சிலிர்த்துப் போயிருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாத காலப்பகுதிக்குள் பல வங்கிகள் தமது கிளைகளைத் திறந்திருக்கின்றன என்பது உண்மைதான். இதில் பல சர்வதேச வங்கிகளின் கிளைகள் என்பதும் உண்மை. இதனைவிட சில நிதி நிறுவனங்களும் உங்களுடைய வைப்புக்களுக்கு அதிக வட்டியைத் தருகின்றோம் எனக் கூறிக்கொண்டு திறப்புவிழாக்களை நடத்திமுடித்துவிட்டன.
இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதைவிட தமக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்பதுபோல விளம்பரங்களைப் போட்டு மக்களைக் கவர்கின்றன. ஆனால் வெளிப்படையாகத் தெரியும் இந்தச் செய்திகளின் மறுபக்கத்தைப் பார்ப்பதற்குப் பலர் தவறி விடுகின்றார்கள்.
வங்கிகளின் எண்ணிக்கையை அதன் செயற்பாடுகளை வைத்து ஒரு பிரதேசத்தின் வளர்சியைக் கணிப்பிட முடியும் என்பது பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான்! அதன் அடிப்படையில்தான் யாழ்ப்பாணத்தில் பெருமெடுப்பில் வங்கிகள் கடைவிதிப்பதால் யாழ்ப்பாணத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவுவதாக இருக்கும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.
சர்வதேச நியமங்களுடன் இலங்கையின் நிலைமைகளையும் ஒப்பிடுவதால்தான் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் இலங்கையின் நிலைமைகள் அவ்வாறானதாக இல்லை. பொருளாதார வளர்சி என்பதை விட இன அடிப்படையிலான சிந்தனையே கொழும்பு அரசியலில் ஆட்சி செலுத்துகின்றது.
இந்தப் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் வங்கிக்கிளைகள் அதிகளவுக்கு காளான்களைப் போல முளைப்பதைப் பார்க்க வேண்டும்.
யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பொருளாதார ரீதியாகச் சிந்தித்தே தமது செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள். அநாவசியமான செலவீனங்களைத் தவிர்த்து அதிகளவுக்குச் சேமிப்புப் பழக்கத்தைக் கொண்டிருப்பவர்கள். அத்துடன் யாழ்ப்பாணத் தமிழர்களின் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் தமது உறவினர்களைக் கொண்டிருப்பவர்கள். அதனால் வெளிநாடுகளிலிருந்து இவர்களுக்கு கணிசமான தொகை வந்தடைகின்றது என்பதும் உண்மை.
வங்கித்துறையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்டுள்ள ஒருவருடன் உரையாடிய போது யாழ்ப்பாண மக்களுடைய சேமிப்புப் பழக்கத்தை அவர் விதந்துரைத்தார். இலங்கையின் பல மாவட்டங்களிலும் பணிபுரிந்துள்ள அவர், ஏனைய மாவட்ட மக்களைவிட யாழ்ப்பாண மக்களிடையே சேமிப்புப் பழக்கம் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
வங்களின் செயற்பாடுகள் தொடர்பான ஆய்வறிக்கைகள் பலவும் கூட இதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.
யாழ்ப்பாண மக்களின் சேமிப்புப் பழக்கத்தையும், புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து அவர்களுக்கு அதிகளவு தொகை வந்தடைவதையும் நன்கு அறிந்துகொண்டுள்ள நிலையிலேயே வங்கிகள் தமது திட்டங்களை வகுத்துக்கொண்டுள்ளன. மக்களுடைய தேவைகளுக்கு இசைவாக வங்கிகள் செயற்பட முற்பட்டிருப்பது தவறானதல்ல.
ஆனால், இங்குளள பிரச்சினை என்னவென்றால், குடாநாட்டில் பெருந்தொகையான பணம் வைபட்பிலிடப்படுகின்ற போதிலும், அத்தொகை தென்பகுதியின் அபிவிருத்திக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்காக கடன் பெறுவதற்கு இந்த வங்கிகளுக்கு விண்ணப்பித்தால் அதனைப் பெற்றுக்கொள்வது இலகுவானதாக இருப்பதில்லை.
குடாநாட்டில் பல கோடி மூபாவை வைப்பாகப் பெற்றுக்கொள்ளும் வங்கிகள், சில ஆயிரம் ரூபாய்களை குடாநாட்டில் கடனாகக் கொடுப்பதற்கு தயங்கும் நிலை தொடர்வதாக குடாநாட்டில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒருவர் குறிப்பிடுகின்றார். ~றிஸ்க்" எனக் கூறப்பட்டு இவ்வாறான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிடுகின்றன. போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் இவ்வாறான நிராகரிப்பு பல கேள்விகளை எழுப்புகின்றது.
யாழ்ப்பாணத்தில் கிளை பரப்பியிருக்கும் வங்கிகள் அனைத்தும் கொழும்பிலேயே தமது தலைமையகத்தைக் கொண்டிஎருக்கின்றன. கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் கொழும்பிலுள்ள தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான தீர்மானங்கள் கொழும்பிலேயே எடுக்கப்படுகின்றன என வங்கித்துறையைச் சேர்ந்த ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
போர் முடிவடைந்திருக்கும் நிலையில் வங்கிகள் தமது செயற்பாடுகளை பிராந்திய ரீதியான தலைமையகங்களைக் கொண்டு செயற்படுவதுடன், அதன் மூலமாகவே தீர்மானங்களை எடுக்கும் நிலையை ஏற்படுத்தப்ப வேண்டும் என யாழ். புல்கலைக்கழக பொருளியல் துறைப் பேராசிழரியர் ஒருவர் வலியுறுத்துகின்றார்.
இல்லாவிட்டால் குடாநாட்டு மக்களால் வங்கிகளில் வைப்பிலிடப்படும் கோடிக்கணக்கான ரூபா தென்பகுதியின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படும் நிலைதான் தொடரும் என வும் குறிப்பிடும் அவர், ஒரு பிராந்தியத்தில் வைப்பிலிடப்படும் பணம் முதலீடுகளாக மாற்றப்படும் போது அந்தப் பகுதிக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார். குடாநாட்டு மக்களின் பணம் இவ்வாறு ஏனைய பகுதிகளில் முதலீடுகளுக்காகப் பயன்படுத்தப்படுவதை திட்டமிட்ட ரீதியான ஒரு பொருளாதார ஒடுக்குமுறையாகவே கருத வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
யாழ். அரச வங்கிகளில் வைப்பிலிடப்பட்டு பல வருட காலடமாக உரிமை கோரப்படாதிருந்த பல கோடி ருபா பணம் அந்த வங்கிகளால் கையகப்படுத்தப்பட்டமையையும், சுட்டிக்காட்டும் அவர், அந்தப் பணம் கூட குடாநாட்டு அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடுகின்றார்.
வங்கிகள் கடை பரப்புவதன் பின்னணியில் இப்படியும் ஒரு பொருளாதாரச் சுரண்டல் இருப்பது ஆச்சரியம்தான். போர் முடிவுக்கு வந்திருந்தாலும் கொழும்பின் அணுகுமுறை மாறவில்லை.
No comments:
Post a Comment