Friday, November 27, 2015

சோபித தேரரின் மரணமும் ஜனாதிபதியின் உறுதியும்


நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்கு சாத்­தி­ய­மான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­வ­தாக வண.மாது­லு­வாவே சோபித தேரரின் பூத­வுடல் முன்­னி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சப­த­மிட்டிருக்கின்றார். அண்மைக்கால அரசியல் நகர்வுகளால் மறக்கப்பட்டுவிட்ட ஒரு விடயமாகவே "நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது" என்ற வாக்குறுதி உள்ளது. இருந்தபோதிலும், இந்த விவகாரத்தை மறந்துவிடவோ அல்லது கிடப்பில் போட்டுவிடவோ இல்லை என்பதை ஜனாதிபதி உணர்த்தியிருக்கின்றார். இருந்தபோதிலும், இன்றுள்ள அரசியல் சூழலில் ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதுபோல நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி முறையை ஒழிப்பது எந்தளவுக்குச் சாத்தியம் என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுப்பப்படுகின்றது.

ஜனவரி 8 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கான முதலாவது காயை நகர்த்தியவர் வண.மாது­லு­வாவே சோபித தேரரர்தான். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து அதற்கான நகர்வுகளை முதலில் முதுன்னெடுத்தவர் சோபித தேரார்தான். அதற்காக அவர் எதிர்கொண்ட நெருக்கடிகள் பல. கடுமையான அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட போதிலும், தன்னுடைய இலக்கிலிருந்து அவர் விலகிச் செல்லவில்லை. பொது எதிரணிக்கான கொள்கைத் திட்டம் ஒன்றை வகுப்பது, அதன் அடிப்படையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது, சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்றெடுப்பது என்பவற்றில் சோபித தேரரின் பங்களிப்பே பிரதானமாக இருந்துள்ளது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1978 இல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நடைமுறைக்குக் கொண்டுவந்திருந்த போதிலும், அது கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்ட ஒன்றாகத்தான் அன்று முதல் இருந்து வருகின்றது. சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுப்பதாக ஜனாதிபதி ஆட்சி முறை அமைந்திருந்தமைதான் இதற்குக் காரணம். ஜெயவர்த்தனவுக்குப் பின்னர் ஜனாதிபதிப் பதவிக்கு வந்த ஆர்.பிரேமதாச மட்டும்தான் நிறைவேற்று அதிகார ஆட்சி முறைக்கு ஆதரவானவராக இருந்தார். அதற்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்‌ஷவும் ஜனாதிபதி முறைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்கள். அந்த ஆட்சி முறை ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கொடுத்தே அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஜனாதிபதி ஆட்சிமுறை கொடுத்த அதீதமான அதிகாரங்களை ருசித்த சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்‌ஷவும் அதன் பலன்களை அனுபவிக்க விரும்பினார்களே தவிர, அதனை இல்லாதொழிக்க விரும்பவில்லை. தமது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கான காரணங்களைத் தேடிச் சொல்வதில் அல்லது அதனை நியாயப்படுத்துவதிலேயே அவர்களுடைய பதவிக்காலம் கடந்தது. தம்முடைய அதிகாரங்களைத் தக்கவைப்பது, அதனை மேலும் பலப்படுத்துவது, ஆட்சிக்காலத்தை நீடிப்பது என்பதில் மகிந்த ராஜபக்‌ஷ கவனம் செலுத்திய நிலையில்தான்,  நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகளுடன் சிவில் அமைப்புக்களும் இணைந்து குரல் கொடுக்கத் தொடங்கின.

இந்த இணைப்புக்கும், அதனைக் கட்சியெழுப்பி ஒரு அரசியல் சக்தியாக உருவாக்குவதிலும் சோபித தேரர் வகித்த பங்கு பிரதானமானது. முதன்மையானது. அரசியல் கட்சிகளிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது, பொதுவான கொள்கை ஒன்றின் அடிப்படையில் அவற்றைக் கொண்டு செல்வது என்பது இலகுவானதல்ல. முரண்பாடான கொள்கைளை இலக்குகளைக் கொண்டுள்ள கட்சிகளை பொதுவான அப்படையில் ஒன்றுபடுத்துவலதில் வெற்றிபெற்ற ஒரு ஆளுமையாக சோபித தேரர் இருந்தார். பிரதான கட்சிகளின் தலைவர்களும் அவருடன் ஒத்துழைத்தமை இந்த வெற்றிக்கு இரண்டாது காரணம் என்பதையும் மறந்துவிட முடியாது. மகிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிப்பது என்ற இலக்குடன் இந்த அரசியல் மாற்றம் முடிவுக்கு வந்துவிடுமா என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்தான், "அவ்வாறில்லை! நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை நிச்சயமாக இல்லாதொழிக்கப்படும்" என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

சோபித தேரர் ஒரு மதத் தலைவராக இருந்த போதிலும், அரசியலில் அவருடைய ஆரோக்கியமான பங்களிப்பு நீண்ட காலமாவே இருந்துள்ளது. அரசியல் விவகாரங்களில் ஒரு கிளர்ச்சிக்காரராகவே அவர் இருந்துள்ளார். 1978 இல் ஜனாதிபதி ஆட்சி முறை நடைமுறைக்கு வந்தபோதே அதனைக் கடுமையாக எதிர்த்தவர் சோபித தேரர். ஜெயவர்த்தனவின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப்போராட்டங்களை முன்னெடுத்தவர். இலங்கை - இந்திய உடன்படிக்கையை எதிர்த்து, "தாய் நாட்டைக் காப்பதற்கான முன்னணி" என்ற அமைப்பை உருவாக்கி போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்.  பிக்குகளை வீதிக்குக் கொண்டுவந்து போராட்டங்களை முன்னெடுத்தார். அவரது போராட்டம் ஜெயவர்த்தன அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தாலும், தமிழர்களுக்கு எதிரான இனவாதமே அவரது போராட்டங்களுக்கான அடிநாதமாக இருந்தது.

சிங்கள- பௌத்த தேசிய வாதத்தை முன்னிலைப்படுத்தியதாக அவரது செயற்பாடுகள் ஆரம்பத்தில் இருந்தன. சிங்கள தேசியவாத அமைப்புக்கள் பலவற்றை அவர் உருவாக்கினார். அவற்றின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றினார். தன்னுடைய அரசியலின் ஆரம்பகாலங்களில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரலவாக்கலை அவர் எதிர்த்த போதிலும், பின்னர் போரின் கொடூரங்களையும், தமிழ் மக்கள் எதிர்கொண்ட அனர்த்தங்களையும் தெரிந்துகொண்ட அவர், இன நெருக்கடிக்கு நியாயமான தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்தினார்.

இலங்கையில் சோபித தேரரின் முன்முயற்சியால் ஏற்பட்ட அரசியல் மாற்றம் வெறுமனே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல. நல்லாட்சி என்பது சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வைக்கொடுப்பதாக அமைய வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை இன ரீதியான வேறுபாடுகளுக்கு அப்பால் கையாள்வதாக அமைய வேண்டும். சோபித தேரரின் இலட்சியத்தை நிறைவேற்றுவதுதான் தமது கடமை எனக் கருதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதில் தான் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அதற்கு முன்னதாக கைதிகள் விடுதலை, இன நெருக்கடிக்கு ஆக்கபூர்வமான அதிகாரப் பகிர்வின் மூலமான தீர்வு என்பவற்றையும் ஜளனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும். அதன் மூலமாக மட்டுமே சோபித தேரரின் கனவான உண்மையான நல்லாட்சியை உருவாக்க முடியும் என்பதை வலியுறுத்திக் கூறவிரும்புகின்றோம்.

(2015-11-15)

No comments:

Post a Comment