Friday, November 27, 2015

திருமலை இரகசிய முகாம்?

திருமலையில் கடற்படைத் தளத்தில் இரகசிய தடுப்புக்காவல் – சித்திரவதை முகாம் இருந்துள்ளது என்பதை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான .நா பணிக்குழு உறுதிப்படுத்தியிருக்கின்றது. குறிப்பிட்ட முகாமுக்கு நேரில் விஜயம் செய்து முகாம் எவ்வாறு, எப்போது செயற்பட்டது என்பதற்கான ஆதாரங்களையும் திரட்டி இந்தக் குழு வெளியிட்டிருப்பது இலங்கை அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியலைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. 

இந்த முகாம் தொடர்பில் முழு அளவிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் இப்போது உறுதியளித்திருக்கின்றது. இலங்கையின் ஒரு பகுதியிலுள்ள இந்த முகாம் குறித்து அரசாங்கமே “அறியாதிருந்த” (?) நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஐ.நா. குழு அதனைக் கண்டறிந்து உறுதிப்படுத்தியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.

திருமலை முகாம் குறித்த தகவல்கள் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனால்தான் முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் இது தொடர்பான தகவல்களை அவர் வெளிப்படுத்தினார். திருமலையில் இரகசிய தடுப்புக் காவல் – சித்திரவதை முகாம் ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகத் தெரிவித்த அவர், அங்கிருந்து தப்பிவந்த ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த விபரங்களை தான் வெளிப்படுத்துவதாகவும் சொல்லியிருந்தார். 

கடந்த பெப்ரவரி மாதத்தில் இந்தத் தகவல்கள் அவரால் வெளியிடப்பட்டிருந்தன. இது தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று நடத்தப்படுமாக இருந்தால் தான் அதற்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும், சாட்சிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளித்தால் அவற்றை வெளிப்படுத்தத் தயார் எனவும் பிரேமச்சந்திரன் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
இருந்தபோதிலும், அரச தரப்பு இதனைக் கணக்கில் எடுக்கவில்லை. 

கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய முகாம்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் எதுவுமே  நடத்தப்படாமல் அவ்வாறான முகாம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அப்போது உடனடியாகவே பதிலளித்திருந்தார். இராணுவ, கடற்படைத் தளபதிகள் கூட இதனை மறுத்திருக்கின்றார்கள். முன்னாள், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டன. இருந்தபோதிலும் இந்த முகாம்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவிதமான விசாரணையையும் நடந்த அரசாங்கம் முன்வந்திருக்காத நிலையில்தான் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இப்போது வெளிவந்திருக்கின்றது. 

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, அது குறித்து விசாரிக்க தயாராகவிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. ஐ.நா.குழுவே இரகசிய முகாமை உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், இதனை ஒரேயடியாக மறுதலிக்கும் நிலையில் அரசாங்கம் இருக்கவில்லை என்பதும் தெரிகின்றது.

கோட்டாபய’ எனும் பெயர் கொண்ட இரகசிய தடுப்பு முகாம் திருமலையில் இருந்தது. அதில் 700 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்தற்போது அவ்வாறான முகாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முன்னர் இருந்தது. இதற்கான சாட்சியங்கள் என்னிடம் உண்டு என அப்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்போது தெரிவித்திருந்தார். 

சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த தகவல்கள், இப்போது ஐ.நா. வெளியிட்டிருக்கும் அறிக்கை என்பவற்றைப் பார்க்கும் போது முக்கியமான கேள்விகள் எழுகின்றன. அந்த முகாமில் இருந்தவர்கள் யார்? அவர்கள் இப்பொழுது எங்கே? எதற்காக தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள்? என்ற கேள்விகளுக்குப் பதில்காண்பது அவசியம். இறுதிப்போரின்போது சரணடைந்து படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போனவர்கள். இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில்காண்பது அவசியம்.

போர்க்காலத்திலும், போர் முடிவுக்கு வந்த பின்னரும் நாட்டின் பலபகுதிகளிலும் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தமை இரகசியமானதல்ல. இவற்றில் பெரும்பாலானவை சட்டரீதியான முகாம்கள். சட்டவிரோதமான இரகசிய தடுப்பு முகாம்கள் பலவும் பாதுகாப்புத் தரப்பினரால் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டுவந்ததாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியிருந்தன. இந்தக் குற்றச்சாட்டை பாதுகாப்புத் தரப்பினரும் அரசாங்கமும் மறுதலித்தே வந்துள்ளார்கள். ஐ

.நா. நிபுணர்குழு தற்போது வெளியிட்டிருக்கும் தகவல்கள் இந்த மறுதலிப்பை நிராகரிப்பதாக அமைந்திருக்கின்றது. ஐ.நா. வெளியிட்டுள்ள தகவல்கள் முழுமையானதல்ல. இந்தக்குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பதை ஐ.நா. உறுதிப்படுத்தியிருக்கின்றது. இது தொடர்பில் ஐ.நப. குழு வெளியிட்டிருக்கும் தகவலில், “திருகோணமலை கடற்படை தளத்தில், நிலத்தடி இரகசிய தடுப்பு முகாமில் பெரும் எண்ணிக்கையானோர் நீண்டகாலம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டிருக்கலாம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.  

இது உயர் மட்டங்களுக்கு தெரியப்படுத்தாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பல உயிர்கள் இழந்திருக்க கூடும் என நம்பப்படும் வகையில் மிகவும் பாரதூரமான விசாரணைகள் இங்கு நடைபெற்றிருக்கலாம் என்றே நாம் நம்புகிறோம்எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த தகவல்களையடுத்தே ஐ.நா. குழு திருமலையில் முகாம் இருந்த பகுதிக்குச் சென்றிருக்கின்றது. நேரில் அவதானித்த தகவல்களின் அடிப்படையிலேயே தமது அறிக்கையை இந்தக் குழு வெளியிட்டிருக்கின்றது. ஒரு குறுகிய கால வியத்தையே ஐ.நா. குழு மேற்கொண்டிருந்தது. ஒரு விரிவான விசாரணையை அவர்கள் மேற்கொண்டிருக்கவில்லை. அவதானிப்புக்களை மட்டுமே அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். 

திருமலை முகாம் போன்ற வேறு முகாம்களும் இருந்திருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டுள்ள இந்தக் குழு, இவை தொடர்பான தகவல்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளது. இறுதிப்போரின்போது காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு திருமலையில் கண்டுபிடிக்கப்பட்ட முகாம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையலாம். ஐ.நா. குழு தெரிவித்திருக்கும் தகவல்களையிட்டு விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் இப்போது தெரிவித்திருக்கின்றது. அடிப்படையான தகவல்களை ஐ.நா. குழு உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில் நம்பகத்தன்மையான ஒரு விசாரணையை இவ்விடயத்தில் அரசாங்கம் முன்னெடுக்குமா? அவ்வாறான விசாரணை ஒன்றை முன்னெடுப்பதன் மூலமாகவே பல உண்மைகளை வெளிக்கொணர முடியும் என்பதே எமது கருத்தாகும்.

சோபித தேரரின் மரணமும் ஜனாதிபதியின் உறுதியும்


நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்கு சாத்­தி­ய­மான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­வ­தாக வண.மாது­லு­வாவே சோபித தேரரின் பூத­வுடல் முன்­னி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சப­த­மிட்டிருக்கின்றார். அண்மைக்கால அரசியல் நகர்வுகளால் மறக்கப்பட்டுவிட்ட ஒரு விடயமாகவே "நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது" என்ற வாக்குறுதி உள்ளது. இருந்தபோதிலும், இந்த விவகாரத்தை மறந்துவிடவோ அல்லது கிடப்பில் போட்டுவிடவோ இல்லை என்பதை ஜனாதிபதி உணர்த்தியிருக்கின்றார். இருந்தபோதிலும், இன்றுள்ள அரசியல் சூழலில் ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதுபோல நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி முறையை ஒழிப்பது எந்தளவுக்குச் சாத்தியம் என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுப்பப்படுகின்றது.

ஜனவரி 8 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கான முதலாவது காயை நகர்த்தியவர் வண.மாது­லு­வாவே சோபித தேரரர்தான். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து அதற்கான நகர்வுகளை முதலில் முதுன்னெடுத்தவர் சோபித தேரார்தான். அதற்காக அவர் எதிர்கொண்ட நெருக்கடிகள் பல. கடுமையான அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட போதிலும், தன்னுடைய இலக்கிலிருந்து அவர் விலகிச் செல்லவில்லை. பொது எதிரணிக்கான கொள்கைத் திட்டம் ஒன்றை வகுப்பது, அதன் அடிப்படையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது, சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்றெடுப்பது என்பவற்றில் சோபித தேரரின் பங்களிப்பே பிரதானமாக இருந்துள்ளது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1978 இல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நடைமுறைக்குக் கொண்டுவந்திருந்த போதிலும், அது கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்ட ஒன்றாகத்தான் அன்று முதல் இருந்து வருகின்றது. சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுப்பதாக ஜனாதிபதி ஆட்சி முறை அமைந்திருந்தமைதான் இதற்குக் காரணம். ஜெயவர்த்தனவுக்குப் பின்னர் ஜனாதிபதிப் பதவிக்கு வந்த ஆர்.பிரேமதாச மட்டும்தான் நிறைவேற்று அதிகார ஆட்சி முறைக்கு ஆதரவானவராக இருந்தார். அதற்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்‌ஷவும் ஜனாதிபதி முறைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்கள். அந்த ஆட்சி முறை ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கொடுத்தே அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஜனாதிபதி ஆட்சிமுறை கொடுத்த அதீதமான அதிகாரங்களை ருசித்த சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்‌ஷவும் அதன் பலன்களை அனுபவிக்க விரும்பினார்களே தவிர, அதனை இல்லாதொழிக்க விரும்பவில்லை. தமது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கான காரணங்களைத் தேடிச் சொல்வதில் அல்லது அதனை நியாயப்படுத்துவதிலேயே அவர்களுடைய பதவிக்காலம் கடந்தது. தம்முடைய அதிகாரங்களைத் தக்கவைப்பது, அதனை மேலும் பலப்படுத்துவது, ஆட்சிக்காலத்தை நீடிப்பது என்பதில் மகிந்த ராஜபக்‌ஷ கவனம் செலுத்திய நிலையில்தான்,  நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகளுடன் சிவில் அமைப்புக்களும் இணைந்து குரல் கொடுக்கத் தொடங்கின.

இந்த இணைப்புக்கும், அதனைக் கட்சியெழுப்பி ஒரு அரசியல் சக்தியாக உருவாக்குவதிலும் சோபித தேரர் வகித்த பங்கு பிரதானமானது. முதன்மையானது. அரசியல் கட்சிகளிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது, பொதுவான கொள்கை ஒன்றின் அடிப்படையில் அவற்றைக் கொண்டு செல்வது என்பது இலகுவானதல்ல. முரண்பாடான கொள்கைளை இலக்குகளைக் கொண்டுள்ள கட்சிகளை பொதுவான அப்படையில் ஒன்றுபடுத்துவலதில் வெற்றிபெற்ற ஒரு ஆளுமையாக சோபித தேரர் இருந்தார். பிரதான கட்சிகளின் தலைவர்களும் அவருடன் ஒத்துழைத்தமை இந்த வெற்றிக்கு இரண்டாது காரணம் என்பதையும் மறந்துவிட முடியாது. மகிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிப்பது என்ற இலக்குடன் இந்த அரசியல் மாற்றம் முடிவுக்கு வந்துவிடுமா என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்தான், "அவ்வாறில்லை! நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை நிச்சயமாக இல்லாதொழிக்கப்படும்" என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

சோபித தேரர் ஒரு மதத் தலைவராக இருந்த போதிலும், அரசியலில் அவருடைய ஆரோக்கியமான பங்களிப்பு நீண்ட காலமாவே இருந்துள்ளது. அரசியல் விவகாரங்களில் ஒரு கிளர்ச்சிக்காரராகவே அவர் இருந்துள்ளார். 1978 இல் ஜனாதிபதி ஆட்சி முறை நடைமுறைக்கு வந்தபோதே அதனைக் கடுமையாக எதிர்த்தவர் சோபித தேரர். ஜெயவர்த்தனவின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப்போராட்டங்களை முன்னெடுத்தவர். இலங்கை - இந்திய உடன்படிக்கையை எதிர்த்து, "தாய் நாட்டைக் காப்பதற்கான முன்னணி" என்ற அமைப்பை உருவாக்கி போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்.  பிக்குகளை வீதிக்குக் கொண்டுவந்து போராட்டங்களை முன்னெடுத்தார். அவரது போராட்டம் ஜெயவர்த்தன அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தாலும், தமிழர்களுக்கு எதிரான இனவாதமே அவரது போராட்டங்களுக்கான அடிநாதமாக இருந்தது.

சிங்கள- பௌத்த தேசிய வாதத்தை முன்னிலைப்படுத்தியதாக அவரது செயற்பாடுகள் ஆரம்பத்தில் இருந்தன. சிங்கள தேசியவாத அமைப்புக்கள் பலவற்றை அவர் உருவாக்கினார். அவற்றின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றினார். தன்னுடைய அரசியலின் ஆரம்பகாலங்களில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரலவாக்கலை அவர் எதிர்த்த போதிலும், பின்னர் போரின் கொடூரங்களையும், தமிழ் மக்கள் எதிர்கொண்ட அனர்த்தங்களையும் தெரிந்துகொண்ட அவர், இன நெருக்கடிக்கு நியாயமான தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்தினார்.

இலங்கையில் சோபித தேரரின் முன்முயற்சியால் ஏற்பட்ட அரசியல் மாற்றம் வெறுமனே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல. நல்லாட்சி என்பது சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வைக்கொடுப்பதாக அமைய வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை இன ரீதியான வேறுபாடுகளுக்கு அப்பால் கையாள்வதாக அமைய வேண்டும். சோபித தேரரின் இலட்சியத்தை நிறைவேற்றுவதுதான் தமது கடமை எனக் கருதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதில் தான் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அதற்கு முன்னதாக கைதிகள் விடுதலை, இன நெருக்கடிக்கு ஆக்கபூர்வமான அதிகாரப் பகிர்வின் மூலமான தீர்வு என்பவற்றையும் ஜளனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும். அதன் மூலமாக மட்டுமே சோபித தேரரின் கனவான உண்மையான நல்லாட்சியை உருவாக்க முடியும் என்பதை வலியுறுத்திக் கூறவிரும்புகின்றோம்.

(2015-11-15)